
புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா குறித்து பிரதமர் மோடி பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.
டெல்டா உள்ளிட்ட இதுவரை மாற்றமடைந்த கொரோனா வைரஸ்களிலேயே மிகவும் கொடியதாக 50 பிறழ்வுகளுடன் புதிய வகை கொரோனா வைரஸ், தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை, மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குள் நுழையும் சக்தி கொண்டதாகவும் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, உலக நாடுகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களிலே, இதுதான் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். உலக நாடுகள் உஷார் ஆகி உள்ளன. அந்த வகையில், இந்திய ஏர்போர்ட்களிலும் கண்காணிப்பை மறுபடியும் தீவிரப்படுத்தும்படி மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, மீண்டும் ஏர்போர்ட்களில் கொரோனா டெஸ்ட் மற்றும் ஸ்கிரினிங் டெஸ்ட் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, நேற்று காலை 10:30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் உயர் அரசாங்க அதிகாரிகளுடன் கொரோனா தொற்று, தடுப்பூசி, மற்றும் புதிய வகை வைரஸ் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதன் பின் பொதுமக்களுக்கு டிவிட்டர் பக்கத்தில் அறிவுரை வழங்கினார்.
பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக கொரோனா பரவல் ஏற்படும் இடங்களைக் கட்டுப்படுத்த பகுதியாகத் தொடர வேண்டும்.
மேலும், தீவிர கட்டுப்பாடு, கண்காணிப்பு தொடர வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பும் ஒவ்வொரு நபரும் மும்பை வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைமுறைக்கு அனுப்பப்படும் என்று மும்பை மேயர் அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. அதன்படி, தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பும் ஒவ்வொரு நபரும் மும்பை வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைமுறைக்கு அனுப்பப்படும் என்றும், அவர்களின் சோதனை முடிவுக்கு பிறகே சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

2 வருடமாகவே சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.. விமான போக்குவரத்தும் அவ்வளவாக செயல்படாத சூழல் இருந்து வருகிறது.
இந்தியாவில் ஓரளவு தொற்று கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து, வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானசேவை தொடங்கும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை நேற்றுமுன்தினம் தான் அறிவித்திருந்தது.
வெளிநாடுகளை 3 வகையாக பிரித்து அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்கவும் முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்குள் இப்படி வைரஸ் பூதாகரமாக கிளம்பி, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.