
இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் – 2ம் நாள்
நியுசிலாந்தின் அஜாஸ் படேல் சாதனை
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்தின் அஜாஸ் படேல் உலகச் சாதனை படைத்தார். அக்டோபர் 21, 1988இல் மும்பையில் அஜாஸ் பிறந்தார். அவரது குடும்பம் பின்னர் நியூசிலாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்தது. 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதன் முதலில் டெஸ்ட் மேட்ச் விளையாடிய அஜாஸ் படேல் இதுவரை 10 டெஸ்டுகள் விளையாடியிருக்கிறார். இது வரை இரண்டு முறை டெஸ்ட் போட்டிகளில் ஐந்து விக்கட்டுகள் எடுத்துள்ளார். இன்று இந்திய நியூசிலாந்து அணிகளின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் அஜாஸ் 10 விக்கட்டுகளையும் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த ஒரு இன்னிங்ஸில் 10 விக்கட் எடுத்த சாதனையாளர்கள் இருவர். முதலாமவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜிம் லேக்கர். இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 1956இல் முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டும், இரண்டாவது இன்னிங்சில் 10 விக்கட்டும் எடுத்தார். (51.2 ஓவர், 23 மெய்டன், 53 ரன், 10 விக்கட்). இரண்டாவது முறை இந்தச் சாதனையைச் செய்தவர் இந்தியாவின் அனில் கும்ளே. இவர் 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கட்டும் எடுத்தார். (26.3 ஓவர், 9 மெய்டன், 74 ரன், 10 விக்கட்).
அஜாஸ் படேலின் இந்தச் சாதனையைத் தவிர நியூசிலாந்து அணி மகிழ்ச்சி அடைவதற்கு இன்று ஏதும் இல்லை. நேற்று நான்கு விக்கட் இழப்பிற்கு 221 ரன் என்ற கணக்குடன் இன்று ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி, உணவு இடைவேளைக்குப் பின்னர் 12 ஓவர்கள் ஆடி 325 ரன்னிற்கு ஆட்டமிழந்தது. விருத்திமான் சாஹாவும் அஸ்வினும் அடுத்தடுத்த பந்துகளில் இன்றைய நாளின் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் 22 ஓவர்கள் ஆடி 100அவது ஓவரில் மாயங்க் அகர்வால் 150 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அக்சர் படேல் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆடி 52 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை ஆட வந்த நியூசிலாந்து அணி 28.1 ஓவரில் எல்லா விக்கட்டுகளையும் இழந்து 62 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் இருவர் (டிம் லாதம், கைல் ஜாமிசன்) மட்டுமே இரட்டையிலக்க ரன்கள் (முறையே 10, 17) அடித்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்கள் எடுத்தனர். இந்திய வேகப் பந்துவீச்சாளர்களும் சரி, சுழல் பந்து வீச்சாளர்களும் சரி, இருவருமே மிகச் சிறப்பாக பந்து வீசினர்.
இன்று இரண்டாவது நாள்; விராட் கோலி நியூசிலாந்து அணியை ‘ஃபாலோ ஆன்’ செய்யச் சொல்லியிருக்கலாம். இன்று இந்திய அணியினர் பந்து வீசிய முறையில் தொடந்து பந்து வீசினால் அடுத்த 100 ரன்களுக்குள் நியூசிலாந்து அணியை ஆட்டமிழக்கச் செய்து இன்னிங்ஸ் வெற்றி அடைந்திருக்கலாம். ஆனால் இன்னமும் மூன்று நாட்கள் இருக்கின்றன. நியூசிலாந்து அணியின் ஏதேனும் இரண்டு பிரபலமான மட்டையாளர்கள் ஒருநாள் தொடர்ந்து கட்டைபோட்டு ஆடினால், ஐந்தாவது நாளில் இந்திய அணி விளையாட வேண்டிவரும். ஐந்தாம் நாள் விக்கட் எப்படி இருக்கும் என்பது இன்னமும் கணிக்க முடியாததாக இருக்கிறது. இந்திய அணியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் சுழல் பந்து வீச்சாளர் 10 விக்கட்டுகளையும் எடுத்திருக்கிறார்.
எனவே இந்திய அணித் தலைவர் விராட் கோலி தோல்விக்கு எந்த வாய்ப்பும் தரக்கூடாது என்பதற்காக இந்திய அணியை இன்று இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடச் சொல்லியிருக்கிறார். இந்திய அணி ஆட்டநேர இறுதியில் 21 ஓவர் விளையாடி விக்கட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்திருக்கிறது. புஜாரா தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மன் கில்லிற்குப் பதிலாக ஆடினார். அவர் இன்று சிறப்பாக ஆடினார். அகர்வாலும் சிறப்பாக ஆடினார்.
நாளை அநேகமாக இந்தியா வெற்றி பெறும் என நம்புவோம்.