
தெலுங்கானாவில் குடிபோதையில் 6 அடி நீள பாம்பை கழுத்தில் சுற்றி கொண்டு பொதுமக்களிடம் பணம் பறித்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பிய பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானாவில் சங்காரெட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் குடித்து விட்டு 6 அடி நீள பாம்பை கழுத்தில் சுற்றி கொண்டு கடைவீதியில் சுற்றித்திரித்துள்ளார்.
பின்னர் அவ்வீதியில் உள்ள ஒவ்வொரு கடையாக ஏறி பாம்பை காண்பித்து பணம் தரவில்லை என்றால் பாம்பை விட்டு கடிக்க விட்டுவேன் என கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
அவரின் செயலை பார்த்து ஒரு சிலர் அலறியடித்து கொண்டு ஓடினர். பின்னர் போதை ஆசாமி குறித்து அங்குள்ள பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை எச்சரித்து அனுப்பினர். பாம்பையும் அவரிடமிருந்து மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர்.