icc t20 worldcup - 2026

T20 WC 2026: அரை இறுதியில் இந்திய அணி!

விளையாட்டு இந்தியா சற்றுமுன்
icc t20 worldcup - 2026

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த இரண்டு போட்டிகளின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பது குறித்து முடிவு எட்டின.  இதன்படி, அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெளியேறியது.  முந்தைய நாள் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை வென்ற போதும், அரை இறுதியில் இருந்து வெளியேறியது. 

இந்தியா, இலங்கையில் ‘டி-20’ உலகக் கோப்பை 10வது சீசன் நடக்கிறது. ‘சூப்பர்-8’ சுற்றின் முடிவில், பிரிவு-1ல் தென் ஆப்ரிக்கா 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பிரிவு-2ல் இங்கிலாந்து 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் நியூசிலாந்து 3  புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் அரையிறுதிக்கு முன்னேறின. 

இதை அடுத்து, கொல்கட்டாவில், வரும் மார்ச் 4ல் நடக்கவுள்ள முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மும்பை வாங்கடே மைதானத்தில் மார்ச் 5ல் நடக்கவுள்ள 2வது அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

‘டி-20’ உலகக் கோப்பை அரங்கில் அதிக முறை, அதாவது 6 முறை அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் பட்டியலில் இங்கிலாந்து (2010, 2016, 2021, 2022, 2024, 2026), பாகிஸ்தானுடன் (2007, 2009, 2010, 2012, 2021, 2022) இந்தியா (2007, 2014, 2016, 2022, 2024, 2026) இடம்பெற்றது.

அரையிறுதியில் இந்தியா:

பிரிவு-1ல், கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ‘சூப்பர்-8 போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசத் தீர்மானித்தார். 

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

அதன்படி களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இந்த இணை 53 பந்தில் 68 ரன் சேர்த்த போது வருண் சக்ரவர்த்தி பந்தில் ஹோப் 32 ரன்னில் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார். முன்னதாக, அர்ஷ்தீப் ஓவரில் ஒரு ரன்னுக்காக சேஸ் ஓடினார். மறுமுனையில் ஹோப் தயங்கினார். பந்தை ‘பீல்டிங்’ செய்த வருண், கீப்பர் இருக்கும் திசையில் ‘த்ரோ’ செய்யாமல், பவுலர் திசையில் தவறாக ‘த்ரோ’ செய்ததால், சேஸ் ரன் அவுட்டில் இருந்து தப்பினார். இதை பயன்படுத்தி அடுத்தடுத்து 2 பவுண்டரி விளாசினார். இதே போல், பும்ரா ஓவரில் சேஸ் 14 ரன்னில் இருந்த போது கொடுத்த ‘கேட்ச்சை’ அபிஷேக் சர்மா தவற விட்டார். எனவே முதல் 6 ஓவர் ‘பவர் பிளே’யில் வெஸ்ட் இண்டீஸ் அணி 45 ரன் எடுத்தது குறிப்பிடத் தக்கது. 

11 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 99/1 ரன் எடுத்து வலுவாக இருந்தபோது, 12வது ஓவரை வீசிய பும்ரா, 3வது பந்தில் ஹெட்மெயர் (27), மற்றும்  5வது பந்தில் சேஸ் (40)  ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். 12 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 103/3 என்ற நிலையில் இருந்தது. தொடர்ந்து பாண்ட்யா பந்தில் ஷெர்பேன் ரூதர்போர்டு (14) ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் பாவெல், ஹோல்டர் இணை அதிரடி காட்டி, 5வது விக்கெட்டுக்கு 35 பந்தில் 76 ரன் சேர்த்தது.  20 ஓவர் இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்து வலுவான இலக்கை நிர்ணயித்தது. 

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. அபிஷேக் சர்மா 10 ரன்னிலும், இஷான் கிஷான் 10 ரன்னிலும் வெளியேறினர். பின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.  சஞ்சு சாம்சன் மட்டும் நிலைத்து நின்று விளையாடி,  அரைசதம் கடந்து அசத்தினார். இவருக்கு இணையாக திலக் வர்மா அதிரடி காட்டினார்.  அவர்  27 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.  பின் பாண்ட்யா 17 ரன்னும், ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் இரண்டு பவுண்டரிகளும் அடித்து வெற்றிக்குத் தேவையான ரன்களுக்கு அருகில் நிறுத்தினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்ட நிலையில், முதல் இரு பந்துகளில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் சாம்சன். இதன் மூலம் இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை சாம்சன் பெற்றார்.

இந்தப் போட்டியில் சில சாதனைகள் படைக்கப்பட்டன. ‘டி-20’ உலகக் கோப்பை அரங்கில், ‘சேஸ்’ செய்த போட்டியில் அதிக ரன் (97*) குவித்த இந்திய வீரராக சஞ்சு சாம்சன் சாதனை செய்தார். முன்னதாக, விராத் கோலி இரண்டு முறை (எதிர்: ஆஸ்திரேலியா- 2016, எதிர்: பாகிஸ்தான் – 2022) 82* ரன் எடுத்திருந்தார்.

‘டி-20’ உலகக் கோப்பை அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் சஞ்சு சாம்சன் (97*). முதலிடத்தில் ரெய்னா (101 ரன், எதிர்: தெ.ஆப்., 2010) உள்ளார். 

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இருந்த போதும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் கவலைக்குரியதாக இருந்தது. இந்திய  அணி வீரர்கள்  3 ‘கேட்ச்’, ஒரு ரன் அவுட் வாய்ப்பை வீணாக்கினர். இதனை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. 

பாகிஸ்தான் வெளியேற்றம்:

பிரிவு-2ல் இலங்கையின் பல்லேகெலேயில் நடந்த போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு  212 ரன் எடுத்தது. நல்ல ரன் எடுத்திருந்தாலும், அரையிறுதிக்கு ரன் ரேட் அடிப்படையில் தகுதி பெற, இலங்கையை 147 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது பாகிஸ்தான்.

எனினும், இலங்கை அணி 16வது ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புகு 148 ரன் எடுத்ததால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் சிறந்த ரன் ரேட் வைத்திருந்த நியூசிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. பாகிஸ்தான் வெளியேறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.