spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாமனதின் குரல்: தாய்மொழி... ஆயுர்வேதம்... சுயமரியாதை!

மனதின் குரல்: தாய்மொழி… ஆயுர்வேதம்… சுயமரியாதை!

- Advertisement -

பிரதமர் மோடியின் மனதின் குரல், 86ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள் : 27.02.2022
ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்
தமிழாக்கம் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலுக்கு மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இன்று மனதின் குரலின் தொடக்கத்தை நாம் பாரதத்தின் வெற்றியோடு செய்யலாம்.  இந்த மாதத் தொடக்கத்தில் மிகவும் விலைமதிப்புள்ள தனது மரபுச்சொத்தினை பாரதம் இத்தாலியிலிருந்து மீட்டெடுத்து வந்திருக்கிறது.  அவலோகிதேஸ்வர் பத்மபாணியின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த திருவுருவச் சிலை தான் இந்த மரபுச் சொத்து.  இந்தத் திருவுருவச் சிலையானது சில ஆண்டுகள் முன்பாக, பிஹாரின் கயா ஜீயின் தேவீஸ்தானம் குண்டல்புர் ஆலயத்திலிருந்து களவு போனது.  ஆனால் பல முயற்சிகளின் பலனாக, இப்போது பாரதத்திற்கு இந்தத் திருவுருவச் சிலை திரும்பக் கிடைத்திருக்கிறது.  இதே போன்று தான் சில ஆண்டுகள் முன்பாக தமிழ்நாட்டின் வேலூரிலிருந்து பகவான் ஆஞ்ஜநேயரின் திருவுருவச் சிலை களவு போனது.  ஆஞ்ஜநேயரின் இந்தத் திருவுருவச் சிலையானது 600-700 ஆண்டுகள் பழைமையானது.  இந்த மாதத் தொடக்கத்தில், ஆஸ்ட்ரேலியாவில் இது நமக்குக் கிடைத்தது,  நமது நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றி இது.

          நண்பர்களே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான நமது சரித்திரத்தில், தேசத்தின் பல்வேறு மூலைகளிலும், ஒன்றை ஒன்று விஞ்சக்கூடிய வகையில் அற்புதமான திருவுருவச் சிலைகளும் கலைப்பொருட்களும் உருவாக்கப்பட்டு வந்தன, இதிலே அர்ப்பணிப்பும் இருந்தது, கைவண்ணமும் இருந்தது, திறமை இருந்தது, பன்முகத்தன்மையும் நிறைந்திருந்தது, மேலும் நமது அனைத்து திருவுருவச் சிலைகளிலும், அவை உருவாக்கப்பட்ட காலத்தின் தாக்கமும் காணக் கிடைத்தன.  இது பாரதத்தின் சிற்பக்கலையின் அதிஅற்புதமான எடுத்துக்காட்டாக இருப்பதோடு கூடவே, நமது நம்பிக்கையோடு தொடர்புடைய ஒன்றும் கூட.  ஆனால், கடந்த காலத்தில் நமது பல திருவுருவச் சிலைகள் களவாடப்பட்டு, பாரதத்தை விட்டுச் சென்று கொண்டிருந்தன.  உலகின் ஏதோ ஒரு நாட்டிலே இவை விற்கப்பட்டு வந்தன, அவர்களைப் பொறுத்த மட்டிலே இவை வெறும் கலைப்படைப்புகள் மட்டுமே.  இவற்றை வாங்குபவர்களுக்கு இவற்றின் வரலாற்றோடு எந்தப் பிடிப்போ, அர்ப்பணிப்போ கிடையாது.  இந்தத் திருவுருவச் சிலைகளை மீட்டுக் கொண்டு வருவது என்பது பாரத அன்னையிடத்தில் நமக்கிருக்கும் கடமை.  இந்த திருவுருவச் சிலைகளில் பாரதத்தின் ஆன்மாவின், நமது நம்பிக்கையின் அம்சம் உறைந்திருக்கிறது.  மேலும் இவற்றில் ஒரு சரித்திர-கலாச்சார மகத்துவமும் அடங்கி இருக்கிறது.  இந்தப் பொறுப்பினைப் புரிந்து கொண்டு பாரதம் தனது முயல்வுகளை அதிகரித்தது.  இதன் காரணமாக என்ன ஆனது என்றால், களவு செய்தல் என்ற இயல்பிலும், ஒரு விதமான அச்சம் ஏற்பட்டது.  இந்தத் திருவுருவச் சிலைகள் களவாடப்பட்டு எந்த நாடுகளுக்கு எல்லாம் கொண்டு செல்லப்பட்டனவோ, அந்த நாடுகளுக்கு, பாரதத்துடனான உறவுகளில், ராஜரீக வழிகள் என்ற வகையில் இதற்கு பெரிய மகத்துவம் இருக்கிறது என்பது அந்த நாடுகளுக்கும் புரியத் தொடங்கியது.  ஏனென்றால் இதோடு பாரதத்தின் உணர்வுகள் இணைந்திருக்கின்றன, பாரதத்தின் அர்ப்பணிப்பு இணைந்திருக்கிறது, ஒரு வகையில் மக்களுக்கு இடையேயான பரஸ்பர உறவுகளின் மிகப்பெரிய பலத்தை இது ஏற்படுத்த வல்லது. சில நாட்கள் முன்பாக நீங்கள் கவனித்திருக்கலாம், காசியிலே களவு போன அன்னை அன்னபூரணி தேவியின் திருவுருவச் சிலை மீட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.  இது பாரதம் தொடர்பாக மாறி வரும் உலக அளவிலான கண்ணோட்டத்தின் எடுத்துக்காட்டு. 2013ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 13 திருவுருவச் சிலைகள் பாரதம் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.  ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற திருவுருவச் சிலைகளை பாரதத்தால் வெற்றிகரமாக மீட்டுக் கொண்டு வர முடிந்திருக்கிறது.  அமெரிக்கா, பிரிட்டன், ஹாலந்து, ஃப்ரான்ஸ், கனடா, ஜர்மனி, சிங்கப்பூர் என எத்தனையோ நாடுகள், இந்த உணர்வினைப் புரிந்து கொண்டார்கள், திருவுருவச் சிலைகளை மீட்டுக் கொண்டு வர நமக்கு உதவி புரிந்தார்கள்.  நான் கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா சென்ற போது, அங்கே மிகப் பழைமையான பல திருவுருவச் சிலைகளும், கலாச்சார மகத்துவம் வாய்ந்த பல பொருட்களும் கிடைத்தன.  தேசத்தின் விலைமதிப்பற்ற மரபுச் சொத்து மீண்டும் கிடைக்கும் போது, வரலாற்றின் மீது அர்ப்பணிப்பு உடையோர், அகழ்வாராய்ச்சி மீது அர்ப்பணிப்புக் கொண்டோர், நம்பிக்கை மற்றும் கலச்சாரத்தோடு தொடர்புடையோர், மேலும் ஒரு இந்தியன் என்ற முறையில் நம்மனைவருக்கும் பேருவகை ஏற்படுவது என்பது இயல்பான விஷயம் தானே!!

          நண்பர்களே, பாரத நாட்டுக் கலாச்சாரம்-பாரம்பரியம் பற்றிப் பேசும் போது, இன்று உங்களுக்கு மனதின் குரலில் இருவரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.  டான்ஸானியா நாட்டைச் சேர்ந்த உடன்பிறப்புகளான கிலி பால், இவருடைய சகோதரி நீமா என்ற இவர்கள் இருவரும் முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி நீங்களும் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு.  இவர்களுக்கு பாரதநாட்டு இசை மீது அளப்பரிய காதல் இருக்கிறது, ஆழமான பற்று இருக்கிறது.  இதன் காரணமாக இவர்கள் மிகவும் பிரபலமாகி இருக்கிறார்கள். Lip Sync என்ற உதடுகளின் ஒத்திசைவு மூலம் இவர்கள் எத்தனை அதிகம் முயற்சி மேற்கொள்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. தற்போது, குடியரசுத் திருநாளை ஒட்டி, இவர்கள் நமது தேசிய கீதமான ஜன கண மனவை பாடியவாறு ஒரு அழகான காணொளியை தரவேற்றம் செய்திருந்தார்கள், இது அதிகமாகப் பகிரப்பட்டது. சில நாட்கள் முன்பாக இவர்கள் சகோதரி லதா அவர்களின் பாடலைப் பாடி, அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான சிரத்தாஞ்சலியை அர்ப்பணித்திருந்தார்கள்.  இவர்களின் அற்புதமான படைப்பாற்றலுக்காக, இந்த சகோதர சகோதரி இணையான கிலி-நீமாவுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில நாட்கள் முன்பாக டான்ஸானியாவின் இந்திய தூதரகத்தில் இவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.  இந்திய சங்கீதத்தின் ஜாலமே அலாதியானது தான், இது அனைவரையும் மயக்கி விடுகிறது.  எனக்கு நினைவிருக்கிறது, சில ஆண்டுகளுக்கு முன்பாக உலகின் 150க்கும் மேற்பட்ட நாடுகளின் பாடகர்கள்-இசைக்கலைஞர்கள் இணைந்து அவரவர் நாடுகளிலிருந்து, அவரவருடைய பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு, வணக்கத்துக்குரிய அண்ணலுக்குப் பிரியமான பஜனைப் பாடலான வைஷ்ணவ ஜன தோ பாடலை வெற்றிகரமாகப் பாடினார்கள்.

          இன்று பாரதம் தனது 75ஆவது சுதந்திர ஆண்டு என்ற மகத்துவமான வேளையைக் கொண்டாடி வரும் போது, தேசபக்திப் பாடல்கள் வாயிலாகவும் இப்படிப்பட்ட ஒரு பிரயோகத்தைச் செய்யலாமே!!  இதிலே அயல்நாட்டுக் குடிமக்களை, அங்கே இருக்கும் பிரபலமான பாடகர்களை, பாரத நாட்டு தேசபக்திப் பாடல்களைப் பாட அழைக்கலாம்.  இது மட்டுமல்ல, டான்ஸானியாவின் கிலி-நீமாவால் பாரத நாட்டுப் பாடல்களுக்கு உதடுகளின் ஒத்திசைவை ஏற்படுத்த முடிந்திருக்கிறது என்றால், நமது நாட்டின் பல மொழிகளின் பலவகையான பாடல்களை, குஜராத்திக் குழந்தைகள் தமிழ்ப் பாடலைப் பாடலாம், கேரளத்துக் குழந்தைகள் அஸாமியப் பாடலைப் பாடலாம், கன்னடக் குழந்தைகள் ஜம்மு கஷ்மீரப் பாடலைப் பாடலாம்.  ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும்படியான ஒரு சூழலை ஏற்படுத்தலாம், அதை அனுபவிக்கலாம்.  இது மட்டுமல்ல, நாம் சுதந்திரத்தின் அமிர்த காலக் கொண்டாட்டத்தை, ஒரு புதிய முறையில் கண்டிப்பாகக் கொண்டாட முடியும்.  நான் தேசத்தின் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், வாருங்கள், இந்திய மொழிகளில் இருக்கும் பிரபலமான பாடல்களை, நீங்கள் உங்கள் எண்ணப்படி காணொளிப்படுத்துங்கள், நீங்கள் மிகவும் பிரபலமடைவீர்கள்.  மேலும் தேசத்தின் பன்முகத்தன்மை பற்றிய அறிமுகம் புதிய தலைமுறைக்குக் கிடைக்கும்.

          எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாகத் தான் நாம் தாய்மொழி தினத்தைக் கொண்டாடினோம்.  ஆன்றோர் சான்றோர்கள், தாய்மொழி என்ற சொல் எங்கிருந்து வந்தது, இது எப்படித் தோன்றியது என்பது பற்றியெல்லாம் நிறைய உள்ளீடுகளை அவர்கள் அளிக்கலாம்.  ஆனால் தாய்மொழி தொடர்பாக நான் கூறுவது என்னவென்றால், எப்படி நமது வாழ்க்கையை நமது தாயார் செதுக்கி உருவாக்குகிறாரோ, அதே போலத் தான், தாய்மொழியும் கூட, நமது வாழ்க்கையைச் செதுக்கி உருவாக்குகிறது.  தாயும் தாய்மொழியும், இரண்டும் இணைந்து வாழ்க்கையின் அடித்தளத்தைப் பலப்படுத்துகின்றன, அமரத்துவமானதாக ஆக்குகின்றன.  எப்படி நமது தாயாரை நம்மால் கைவிட முடியாதோ, அதே போல, நமது தாய்மொழியையும் நம்மால் விட்டு விட முடியாது.  பல ஆண்டுகள் முன்பாக நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது.  நான் அமெரிக்கா செல்ல வேண்டி வந்த போது, பல்வேறு குடும்பங்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  இப்படித் தான் ஒரு முறை ஒரு தெலுகு குடும்பத்தினர் இல்லம் செல்லவேண்டி இருந்தது, அங்கே ஒரு மகிழ்ச்சியான காட்சியை என்னால் காண முடிந்தது.  எத்தனை வேலை இருந்தாலும் சரி, நாங்கள் நகரத்திற்கு வெளியே இல்லை என்றால், முதலாவதாக குடும்பத்தினர் அனைவரும் இரவு உணவை ஒன்றாக அமர்ந்து உண்போம்; இரண்டாவதாக அப்படி உண்ணும் வேளையில் தாய்மொழியாம் தெலுகுவிலேயே பேசுவோம் என்று ஒரு விதியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறினார்கள்.  அவர்கள் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் இதே விதிமுறை தான். அவர்களின் தாய்மொழி மீது அவர்களுக்கு இருந்த பற்றைப் பார்த்து, நான் மிகவும் கவரப்பட்டேன்.

          நண்பர்களே, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு சிலர் மனப்போராட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; இதன் காரணமாக இவர்கள் தங்கள் மொழி, தங்கள் உடைகள், தங்கள் உணவு முறைகள் ஆகியவை தொடர்பாக கூச்சப்படுகிறார்கள், ஆனால் உலகில் எங்குமே இப்படிப்பட்டதொரு நிலை இல்லை.  நமது தாய்மொழியிலே நாம் பெருமிதத்தோடு உரையாட வேண்டும். மேலும் நமது பாரதம் மொழிகள் விஷயத்தில் மிகவும் வளமானது, எந்த நாடும் இதற்கு ஈடு இணையே கிடையாது.  நமது மொழிகளில் இருக்கும் மிகப்பெரிய அழகே என்னவென்றால், கஷ்மீரம் தொடங்கி கன்னியாகுமாரி வரை, கட்ச் தொடங்கி கோஹிமா வரை, நூற்றுக்கணக்கான மொழிகள், ஆயிரக்கணக்கான பேச்சு வழக்குகள், ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டதாக இருந்தாலும் கூட, ஒன்றோடு மற்றது பின்னிப் பிணைந்துள்ளன.  பேசும் மொழிகள் பலவானாலும், உணர்வு ஒன்று தான். உலகிலேயே மிகத் தொன்மையான மொழி பாரதத்தின் தமிழ்மொழி, இதை ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் பொங்கக் கூற வேண்டும், இத்தகைய ஒரு பெருமரபு நம்மிடத்திலே இருக்கிறது.  இதைப் போலவே, மிகத் தொன்மையான தர்மசாஸ்திர நூல்களும் கூட, நமது சம்ஸ்கிருத மொழியில் உள்ளன. பாரத நாட்டவர், கிட்டத்தட்ட, 121, அதாவது 121 வகையான தாய்மொழிகளோடு தொடர்புடையவர்கள் என்பதை நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்.  இவற்றிலே 14 மொழிகளை, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையிலே பேசி வருகிறார்கள்.  அதாவது இந்த அளவுக்கு பல ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கட்தொகையே கூட கிடையாது, அதை விட அதிகம் பேர்கள் நமது பல்வேறுபட்ட 14 மொழிகளோடு இணைந்திருக்கிறார்கள்.  2019ஆம் ஆண்டு, ஹிந்தி மொழி, உலகின் மிக அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் மூன்றாவது இடத்தில் இருந்தது.  இந்த விஷயம் அனைத்து இந்தியர்களுக்கும் நெஞ்சை நிமிர்த்த வைக்கும் ஒன்றாகும்.  மொழி என்பது கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு ஊடகம் மட்டும் அல்ல; மாறாக, மொழி என்பது சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காக்கும் பணியையும் புரிகிறது. தங்களுடைய மொழியின் பாரம்பரியத்தைக் காக்கும் இப்படிப்பட்டதொரு பணியை சூரினாமைச் சேர்ந்த சுர்ஜன் பரோஹீ அவர்கள் செய்து வருகிறார்கள்.  இந்த மாதம் 2ஆம் தேதியன்று அவருக்கு 84 வயதானது. இவருடைய முன்னோர்களும், பல ஆண்டுகள் முன்பாக, ஆயிரக்கணக்கான தொழிலாளிகளோடு, தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக, சூரினாம் சென்றார்கள்.  சுர்ஜன் பரோஹீ அவர்கள் ஹிந்தி மொழியில் மிகச் சிறப்பாகக் கவிதைகள் வடிப்பவர், அங்கிருக்கும் தேசியக் கவிகளில் இவரும் இடம் பெறுகிறார்.  அதாவது, இன்றும் கூட இவருடைய இதயத்தில் இந்துஸ்தானம் பற்றிய துடிப்பு இருக்கிறது, இவருடைய செயல்களில் இந்தியாவின் மண்ணின் மணம் கமழ்கிறது.  சூரினாம் நாட்டு மக்கள், சுர்ஜன் பரோஹீ அவர்களின் பெயரில் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். 2015ஆம் ஆண்டிலே, இவரை கௌரவப்படுத்தும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது என்பது எனக்கு ஒரு சுகமான அனுபவம்.

          நண்பர்களே, இன்றைய நாள் அதாவது பெப்ருவரி 27 என்பது மராத்தி மொழியின் பெருமித நாளும் ஆகும்.

सर्व मराठी बंधु भगिनिना मराठी भाषा दिनाच्या हार्दिक शुभेच्छा|

அதாவது, அனைத்து மராட்டியர்களுக்கும், மராத்தி மொழி நாளை ஒட்டி என் மனம்நிறை நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளானது மராட்டி மொழிக் கவிஞர், விஷ்ணு பாமன் ஷிர்வாட்கர் அவர்கள், ஸ்ரீமான் குசுமாக்ரஜ் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.  இன்று தான் குசுமாக்ரஜ் அவர்கள் பிறந்தார்.  குசுமாக்ரஜ் அவர்கள் மராட்டி மொழியில் கவிதைகள் எழுதினார், பல நாடகங்களை இயற்றினார், மராட்டி மொழி இலக்கியத்தைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு சென்றார்.

          நண்பர்களே, நமது நாட்டிலே மொழிகளுக்கு என பிரத்யேக அழகு உண்டு, தாய்மொழிக்கென ஒரு பிரத்யேக சூட்சுமம் உண்டு.  இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு தான், தேசியக் கல்விக் கொள்கையில், பிராந்திய மொழிகளில், கல்வி கற்றல் தொடர்பாக அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  நமது தொழில்சார் படிப்புகளை பிராந்திய மொழிகளில் கற்பிக்க வேண்டும் என்பது தொடர்பான முயல்வுகள் நடைபெற்று வருகின்றன.  சுதந்திரத்தின் அமிர்த காலத்தில், இந்த முயற்சிகளுக்கு நாமனைவரும் இணைந்து விரைவு கூட்ட வேண்டும், இது சுயமரியாதை பற்றிய விஷயம்.  அவரவர் பேசும் தாய்மொழிகளின் அழகினைக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள், அதிலே ஏதாவது எழுதுங்கள் என்பதே என் விருப்பம்.

          நண்பர்களே, சில நாட்கள் முன்பாக, கென்யாவின் முன்னாள் பிரதமரும், எனது நண்பருமான ராய்லா ஓடிங்கா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  இந்தச் சந்திப்பு சுவாரசியமாக இருந்ததோடு, மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருந்தது.  நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம், திறந்த மனத்தோடு பேசுவது உண்டு.  நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த போது, ஓடிங்கா அவர்கள் தன்னுடைய மகள் பற்றிக் குறிப்பிட்டார்.  அவருடைய மகள் ரோஸ்மேரிக்கு மூளையிலே கட்டி ஏற்பட்டு, இதன் காரணமாக மகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது.  ஆனால் இதன் மோசமான விளைவாக என்ன ஆனது என்றால், ரோஸ்மேரியின் பார்வைத் திறன் மெல்ல மெல்ல பறிபோனது.  அந்த மகளின் நிலையையும், தகப்பனின் நிலையையும் நீங்களே கற்பனை செய்து பாருங்கள், அவருடைய உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்!!  அவர் உலகம் முழுக்க இருக்கும் மருத்துவமனைகளில் எல்லாம், உலகின் அத்தனை பெரியபெரிய நாடுகளில் எல்லாம் மகளின் சிகிச்சைக்காக முழுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.  ஆனால் பலனேதும் கிடைக்கவில்லை, ஏமாற்றமே மிஞ்சியது.  இந்த வேளையில் யாரோ ஒருவர், பாரதத்தில் ஆயுர்வேத சிகிச்சை எடுப்பது பற்றி ஆலோசனை சொல்லியிருக்கிறார்.  ஓடிங்கா அவர்கள் மிகவும் களைத்திருந்தார், சோர்ந்து போயிருந்தார்; இருந்தாலும் கூட, சரி ஒரு முறை முயற்சி தான் செய்து பார்த்து விடலாமே என்று தீர்மானித்து, கேரளத்தில் இருக்கும் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் தன் மகளின் சிகிச்சையை ஆரம்பித்தார்.  ஆயுர்வேத சிகிச்சையின் பலனாக ரோஸ்மேரியின் கண்களில் பார்வைத்திறன் கணிசமாக மீண்டது.  புதியதொரு வாழ்க்கை கிடைத்தாற்போல, ரோஸ்மேரியின் வாழ்க்கையில் ஒளி துலங்கியது மட்டுமல்லாமல், குடும்பம் முழுவதிலும் புதிய ஒளி பாய்ந்தது, புதிய வாழ்க்கை பிறந்தது, ஓடிங்கா அவர்கள் எந்த அளவுக்கு உணர்ச்சி வெள்ளத்தில் திளைத்துப் போனார் என்றால், பாரதத்தின் ஆயுர்வேத ஞானம், விஞ்ஞானம் கென்யாவுக்குக் கிடைக்க வேண்டும் என்று என்னிடத்தில் தனது விருப்பத்தை வெளியிட்டார்.  எந்த மாதிரியான தாவரங்கள் இதற்கு உதவியாக இருக்கின்றனவோ, அந்தச் செடிகளை வளர்க்கலாம், இதனால் ஆதாயம் பலருக்குக் கிடைக்கும், இது தொடர்பாக முழு முயற்சிகளை மேற்கொள்வோம் என்றார்.

          நமது மண்ணும், பாரம்பரியமும் ஒருவருடைய வாழ்க்கையின் இத்தனை பெரிய சங்கடத்தைத் துடைத்தெறிந்திருக்கின்றன என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் விஷயம்.  இது உங்களுக்கும் சந்தோஷத்தை அளித்திருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.  எந்த இந்தியருக்குத் தான் இதில் பெருமிதம் ஏற்படாது?  ஓடிங்கா அவர்கள் மட்டுமல்ல உலகின் இலட்சக்கணக்கானோர் ஆயுர்வேதத்தால் ஆதாயம் அடைந்து வருகிறார்கள் என்பதை நாமனைவரும் நன்கறிவோம்.

          பிரிட்டன் நாட்டின் இளவரசர் சார்ல்ஸ் அவர்களும் கூட ஆயுர்வேதத்தைப் பாராட்டுபவர்களில் ஒருவர்.  எப்போதெல்லாம் அவரை நான் சந்திக்க நேர்கிறதோ, அப்போதெல்லாம் ஆயுர்வேதம் பற்றிக் கண்டிப்பாகப் பேசுவார்.  அவருக்கு பாரதத்தின் பல ஆயுர்வேத அமைப்புகள் பற்றித் தெரியும். 

          நண்பர்களே, கடந்த ஏழு ஆண்டுகளில் தேசத்தின் ஆயுர்வேதத்தின் பரவலாக்கம் பரப்புரை குறித்து அதிக கவனம் மேற்கொள்ளப்பட்டது.  ஆயுஷ் அமைச்சகம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, சிகிச்சை மற்றும் உடல்நலத்தோடு தொடர்புடைய பாரம்பரியமான வழிமுறைகளைப் பிரபலப்படுத்தும் உறுதிப்பாட்டிற்கு மேலும் பலம் கிடைத்திருக்கிறது.  கடந்த சில காலமாக ஆயுர்வேதத் துறையிலும் கூட பல புதிய ஸ்டார்ட் அப்புகள் வரத் தொடங்கி இருக்கிறது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  இந்த மாதத் தொடக்கத்தில் ஆயுஷ் ஸ்டார்ட் அப் சவால் தொடங்கப்பட்டது.  இந்த சவாலின் இலக்கு, இந்தத் துறையில் பணிபுரியும் ஸ்டார்ட் அப்புகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு ஆதரவளிப்பது தான்.  இந்தத் துறையில் பணிபுரியும் இளைஞர்களிடம் என்னுடைய வேண்டுகோள், நீங்கள் அவசியம் இந்த சவாலில் பங்கெடுங்கள் என்பது தான். 

          நண்பர்களே, ஒரு முறை அனைவரும் இணைந்து ஒரு விஷயத்தைச் செய்தாக வேண்டும் என்று உறுதி பூண்டு விட்டால், அற்புதங்கள் நிகழும்.  மக்களின் பங்கெடுப்பு மற்றும் சமூக முயல்வுகள் காரணமாகவே சமூகத்தில் பல பெரிய மாற்றங்கள் நடந்திருக்கின்றன.  மிஷன் ஜல் தல், அதாவது நீர்-நிலம் இயக்கம் என்ற பெயர் கொண்ட ஒரு இயக்கத்தை கஷ்மீரத்தின் ஸ்ரீநகரில் செயல்படுத்தினார்கள்.  ஸ்ரீநகரில் இருக்கும் ஏரிகள்-குளங்களைச் சுத்தம் செய்தல், அவற்றின் பழைய உன்னத நிலையை ஏற்படுத்தல் என்ற வித்தியாசமான முயற்சி இது.  மிஷன் ஜல் தல் என்பது குஷல் சார் மற்றும் கில் சார் ஏரிகள் மீட்பைக் குறிக்கோளாகக் கொண்டது.  மக்களின் பங்கெடுப்போடு கூடவே இதிலே தொழில்நுட்பமும் மிகுந்த உதவி புரிந்திருக்கிறது.  எங்கெல்லாம் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன, எங்கே சட்டவிரோதமான கட்டுமானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைக் கண்டறிய முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இதோடு கூடவே நெகிழிக் கழிவுகளை அகற்றவும், குப்பைகளை நீக்கவும் இயக்கம் செயல்படுத்தப்பட்டது.  இந்த இயக்கத்தின் இரண்டாம் கட்டமாக, பழைய நீர்வழிகள் மற்றும் ஏரியை நிரப்பக்கூடிய 19 நீரூற்றுக்களை மீட்டெடுக்கவும் முழுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  இந்த மீட்டெடுத்தல் திட்டத்தின் மகத்துவம் குறித்து நிறைய விழிப்புணர்வு பரவ வேண்டும் என்பதற்காக, அந்தப் பகுதி மக்களும், இளைஞர்களும் நீர்த் தூதுவர்களாக ஆக்கப்பட்டார்கள்.  இப்போது இங்கிருக்கும் வட்டார மக்கள் கில்சார் ஏரியில் புலம்பெயர் பறவைகள் மற்றும் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள், இது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்று. இந்த அருமையான முயற்சியின் பொருட்டு, ஸ்ரீநகரின் மக்கள் அனைவருக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

          நண்பர்களே, எட்டு ஆண்டுகள் முன்பு, தேசத்தில் தொடங்கப்பட்ட தூய்மை பாரதம் இயக்கம் காலப்போக்கில் விரிவடைந்து வந்தது, புதியபுதிய புதுமைகள் இதோடு இணைந்தன.  பாரதத்தில் நீங்கள் எங்கே சென்றாலும், அனைத்து இடங்களிலும் தூய்மை குறித்து ஏதாவது ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுவதை நீங்கள் கண்டிப்பாகக் காண முடியும்.  அஸாமின் கோக்ராஜாரில் இப்படிப்பட்ட ஒரு முயல்வு பற்றி எனக்குத் தெரிய வந்தது.  இங்கே காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வோரின் ஒரு குழு, தூய்மையான பசுமையான கோக்ராஜார் இயக்கத்திற்கு உட்பட்டு, பாராட்டுக்குரிய பல முயல்வுகளை மேற்கொண்டுள்ளார்கள்.  இவர்கள் அனைவரும் புதிய மேம்பாலப் பகுதியில் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு சாலையைச் சுத்தம் செய்து தூய்மை குறித்த உத்வேகம் அளிக்கும் செய்தியை அளித்திருக்கிறார்கள்.  இதைப் போலவே விசாகப்பட்டினத்திலும் தூய்மை பாரத இயக்கத்தின்படி பாலித்தீனுக்கு பதிலாக துணிப்பைகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.  இங்கிருப்போர் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்க ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் தயாரிப்பிற்கு எதிராக இயக்கத்தை நடத்தி வருகிறார்கள்.  இதோடு கூடவே இவர்கள், வீட்டிலேயே குப்பைக்கூளங்களைப் பகுக்கக்கூடிய விழிப்புணர்வை பரப்பி வருகிறார்கள்.  மும்பையின் சோமையா கல்லூரியின் மாணவர்கள், தூய்மை தொடர்பாக நடத்தும் அவர்களின் இயக்கத்தில் அழகினையும் இணைத்திருக்கின்றார்கள்.   இவர்கள் கல்யாண் ரயில்வே நிலையத்தின் சுவர்களை அழகான ஓவியங்களால் அழகுபடுத்தி இருக்கின்றார்கள்.  ராஜஸ்தானின் சவாயி மாதோபுரின் ஒரு உத்வேகமளிக்கும் எடுத்துக்காட்டும் என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.  இங்கே இருக்கும் இளைஞர்கள், ரண்தம்போரில் மிஷன் பீட் ப்ளாஸ்டிக், அதாவது நெகிழியை ஒழிப்போம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தி வருகின்றார்கள்.  இதன்படி ரண்தம்போரின் காடுகளில் இருக்கும் நெகிழிப் பொருட்கள்-பாலித்தீன்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அனைவரின் முயல்வுகளில் இந்த உணர்வு, தேசத்தின் மக்கள் பங்களிப்பை பலப்படுத்துகிறது, இந்த மக்கள் பங்கெடுப்பு காரணமாக மிகப்பெரிய இலக்குகளும் கண்டிப்பாக நிறைவேறுகின்றன.

MannKibaat

          எனதருமை நாட்டுமக்களே, இன்றிலிருந்து சில நாட்கள் கழித்து, மார்ச் மாதம் 8ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேசப் பெண்கள் தினத்தைக் கொண்டாடவிருக்கிறது.  பெண்களின் வல்லமை, திறமை, திறன்களோடு தொடர்புடைய ஏராளமான எடுத்துக்காட்டுக்களை நாம் மனதின் குரலில் தொடர்ந்து சந்தித்து வருகிறோம்.  திறன்மிகு இந்தியாவாகட்டும், சுயவுதவிக் குழுக்களாகட்டும், சிறியபெரிய தொழில்களாகட்டும், பெண்கள் அனைத்து இடங்களிலும் இன்று தலைமை தாங்கி வருகின்றார்கள்.  நீங்கள் எந்தத் துறையை வேண்டுமானாலும் பாருங்கள், பெண்கள் பழைய கருத்தியல்களைத் தவிடுபொடியாக்கி வருகின்றார்கள்.  நமது தேசத்தின் பாராளுமன்றம் தொடங்கி பஞ்சாயத்துக்கள் வரை, பல்வேறு துறைகளில் பெண்கள் புதிய உச்சங்களை எட்டியிருக்கின்றார்கள்.  இராணுவத்திலும் கூட பெண்கள் இப்போது புதிய, பெரிய பங்குபணிகளில் தங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள், தேசத்தைப் பாதுகாத்து வருகின்றார்கள். கடந்த மாதம் குடியரசுத் தினத்தன்று, நவீன போர் விமானங்களை நமது பெண்கள் தாம் இயக்கினார்கள் என்பதை நாம் கவனித்தோம்.  தேசத்தின் இராணுவப் பள்ளிகளிலும் கூட பெண்கள் சேர்ப்புக்கு இருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது, தேசம் முழுவதும் பெண்கள் இராணுவப் பள்ளிகளில் சேர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  இதைப் போலவே நமது ஸ்டார்ட் அப் உலகினைப் பார்க்கும் பொழுது, கடந்த ஆண்டுகளில், தேசத்திலே, ஆயிரக்கணக்கான புதிய ஸ்டார்ட் அப்புகள் தொடங்கப்பட்டன.  இவற்றிலே கிட்டத்தட்ட பாதியளவு ஸ்டார்ட் அப்புகளில் பெண்கள் இயக்குபவர்களாக இருக்கின்றார்கள்.  கடந்த சில காலமாகவே பெண்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தை அதிகரிப்பது போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  ஆண்கள்-பெண்கள் இருவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலே திருமணத்தின் வயது வரம்பை சமமானதாக ஆக்கவும் தேசத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது.  நீங்கள் தேசத்தின் மேலும் ஒரு பெரிய மாற்றத்தை கவனித்திருக்கலாம்!!  நமது சமூக இயக்கங்களின் வெற்றி தான் அந்த மாற்றம்.  பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம் திட்டத்தையே எடுத்துக் கொள்வோமே, இன்று தேசத்தின் பாலின விகிதாச்சாரம் மேம்பட்டிருக்கிறது. இதிலே நம்முடைய கடமையும் என்னவென்றால், நமது பெண்களின் பள்ளி இடைநிற்றலை நாம் தடுத்தாக வேண்டும். இதைப் போலவே தூய்மையான பாரதம் இயக்கத்தின்படி, தேசத்தில் பெண்களுக்குத் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது.  முத்தலாக் போன்ற சமூகத் தீமைக்கும் முடிவு கட்டப்பட்டு வருகிறது.  முத்தலாக்குக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, முத்தலாக்கு வழக்குகளில் 80 சதவீத வீழ்ச்சி காணப்பட்டிருக்கிறது. இத்தனை மாற்றங்களும், இத்தனை குறைவான காலத்தில் நடந்திருக்கிறதா? இந்த மாற்றங்கள் ஏன் ஏற்பட்டன என்றால், நமது தேசத்தில் மாற்றம் மற்றும் முன்னேற்ற முயல்வுகளின் தலைமையை பெண்கள் ஏற்றுக் கொண்டதால் தான் ஏற்பட்டன.

          என் மனம்நிறை நாட்டுமக்களே, ஃபெப்ருவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் நாள் ஆகும்.  இந்த நாள், ராமன் விளைவு கண்டுபிடிப்புக்கானதாக அறியப்படுகிறது. நான் சி.வி. ராமன் அவர்களோடு கூடவே, நமது அறிவியல் பயணத்தை நிறைவானதாக ஆக்கத் தங்களுடைய மகத்துவமான பங்களிப்பை அளித்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் என் மரியாதை கலந்த சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

          நண்பர்களே, நமது வாழ்க்கையிலே சுலபத்தன்மை, எளிமை ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவதில் தொழில்நுட்பம் கணிசமான பங்கு வகிக்கிறது.  எந்தத் தொழில்நுட்பம் நல்லது, எந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பான பயன்பாடு என்ன, என அனைத்து விஷயங்கள் குறித்தும் நாம் நன்கறிந்திருக்கிறோம்.  ஆனால், நமது குடும்பத்தின் குழந்தைகளுக்கு அந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படை என்ன, இதன் பின்புலத்தில் இருக்கும் அறிவியல் என்ன என்பதைத் தெரிவிப்பதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்பதும் உண்மை தான்.  குழந்தைகளிடத்தில் அறிவியல் உணர்வை வளர்க்க, சின்னச்சின்ன முயற்சிகளைத் தொடங்கலாம் என்பது தான் இந்த அறிவியல் தினத்தன்று அனைத்துக் குடும்பத்தாரிடத்திலும் நான் விடுக்கும் வேண்டுகோள்.  முதலில் தெரியாமல் இருப்பது, கண்ணாடி அணிந்தவுடன் தெளிவாகத் தெரிகிறது என்பதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் குறித்து குழந்தைகளுக்கு எளிமையாகப் புரிய வைக்கலாம்.  கண்ணாடியைப் போட்டுக் கொண்டோமா ஆனந்தமாக இருந்தோமா என்பதல்ல.  இப்போது நீங்கள் நிதானமாக சிறிய ஒரு காகிதத்தைக் கொண்டு இதை விளக்க முடியும்.  மொபைல், கால்குலேட்டர், ரிமோட் கண்ட்ரோல், சென்ஸார் போன்றவை எப்படி செயல் புரிகின்றன?  அறிவியல் விஷயங்கள் குறித்து வீட்டிலே நாம் விவாதம் செய்திருக்கிறோமா?  இந்த அறிவியல் பொருட்கள் குறித்து, வீட்டிலே பயன்படுத்தும் அன்றாடப் பொருட்கள் குறித்து, அவற்றின் பின்னணியில் இருக்கும் அறிவியல், இதை இயக்குவது எது என்பதை நாம் புரிய வைக்க முடியும்.  இதைப் போலவே நாம் நமது குழந்தைகளோடு வானத்தை ஒன்றாகப் பார்த்திருக்கிறோமா?  இரவில் நட்சத்திரங்கள் பற்றியும் நாம் விவாதித்திருப்போம்.  பலவகையான விண்மீன் கூட்டங்கள் தென்படுகின்றன, இவை பற்றிக் கூறலாம்.  இப்படிச் செய்வதால் நீங்கள் குழந்தைகளிடத்திலே இயற்பியல், மற்றும் வானியல் மீது புதிய ஆர்வத்தை ஏற்படுத்த முடியும்.  இப்போது பல செயலிகள் வாயிலாக நீங்கள் நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றை அடையாளம் காண முடியும், அல்லது நட்சத்திரங்களையும், கோள்களையும் இடம் காண முடியும், அல்லது வானில் தெரியும் நட்சத்திரத்தை அடையாளம் காண முடியும், இதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.  நான் எனது ஸ்டார்ட் அப்புகளிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் உங்களுடைய திறமைகளையும், அறிவியல் உணர்வையும் பயன்படுத்தி, தேசத்தை நிறுவுவது தொடர்புடைய செயல்களில் ஈடுபடுங்கள் என்பது தான்.  இந்த தேசத்திடம் நமக்குக் கூட்டுப் பொறுப்பும் உள்ளது. நமது ஸ்டார்ட் அப்புகள் மெய்நிகர் உண்மை உலகத்தில் பல நல்ல செயல்களைச் செய்து வருவதை நான் கவனித்து வருகிறேன்.  மெய்நிகர் வகுப்புகள் நடந்து வரும் இந்த காலகட்டத்தில் ஒரு மெய்நிகர் பரிசோதனைகூடம், குழந்தைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படலாம். நாம் மெய்நிகர் உண்மை வாயிலாக வீட்டில் இருந்தபடியே குழந்தைகளுக்கு வேதியியல் பரிசோதனைக்கூடத்தின் அனுபவத்தை ஏற்படுத்தித் தர முடியும்.  நமது ஆசிரியர்களிடத்திலும், காப்பாளர்களிடத்திலும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அனைவரும் மாணவர்கள்-குழந்தைகள் வினா எழுப்பும் இயல்பை ஊக்கப்படுத்துங்கள், அவர்களோடு இணைந்து வினாக்களுக்கான விடைகளைக் கண்டறியுங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பை நான் இன்று பாராட்ட விரும்புகிறேன். அவர்களுடைய கடுமையான உழைப்பின் காரணமாகவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி சாத்தியமாயிற்று, இது உலகிற்கு பெருமளவு உதவி வருகிறது. அறிவியல் என்பது மனித சமூகத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதம்.

          எனதருமை நாட்டுமக்களே, இந்த முறையும் நாம் பல விஷயங்கள் குறித்து விவாதம் செய்தோம்.  வரும் மார்ச் மாதத்தில் பல பண்டிகைகள், திருவிழாக்கள் வரவிருக்கின்றன, சிவராத்திரிக்குப் பிறகு, சில நாட்கள் கழித்து ஹோலிக்கான தயாரிப்புகளில் அனைவரும் ஈடுபடத் தொடங்கி விடுவார்கள். ஹோலிப் பண்டிகை நம்மனைவரையும் ஒரே இழையில் இணைத்து வைக்கும் வல்லமை உடையது.  இதிலே நம்மவர் அயலார், விருப்பு வெறுப்பு, சிறியோர் பெரியோர் என்ற வேறுபாடுகள் கரைந்து போகின்றன. ஆகையால் தான், ஹோலியின் வண்ணங்களை விடவும் ஆழமான வண்ணம், ஹோலியின் அன்பு மற்றும் சகோதரத்துவத்தில் இருக்கிறது என்று கூறுவார்கள். ஹோலியன்று குஜியா என்ற இனிப்போடு கூடவே உறவுகளின் அருமையான இனிமையும் கலந்திருக்கிறது. இந்த உறவுகளை நாம் மேலும் பலமானதாக ஆக்க வேண்டும், மேலும் உறவு என்பது நமது குடும்பத்தாரோடு மட்டுமே குறுகி விடக்கூடாது, நமது பெருங்குடும்பத்தின் அங்கமாக விளங்குவோரிடத்திலும் இருக்க வேண்டும். இதற்கான சிறந்த வழியையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ’Vocal for Local’, உள்ளூர் பொருட்களுக்காகக் குரல் கொடுப்போம் என்ற வகையில் நாம் கொண்டாட வேண்டும். நீங்கள் பண்டிகைக் காலங்களில் உங்கள் வட்டாரத்தில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குங்கள், இதனால் உங்கள் அக்கம்பக்கத்தில் இருப்போரின் வாழ்க்கையிலும் வண்ணங்கள் நிறையும், வண்ணமயமாகத் திகழும், உற்சாகம் பெருகும்.  நமது தேசம் கொரோனாவுக்கு எதிராக எந்த அளவுக்கு வெற்றிகரமாகப் போராடி வென்று வருகிறதோ, முன்னேறி வருகிறதோ, இதனால் பண்டிகைகளில் உற்சாகமும் பல மடங்கு அதிகரித்து விட்டது.  இதே உற்சாகத்தோடு நாம் நமது பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும், கூடவே, எச்சரிக்கையையும் கடைப்பிடிக்க வேண்டும்.  வரவிருக்கும் திருநாட்கள்-திருவிழாக்களை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் ஏராளமான நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன்.  உங்கள் கருத்துக்கள், உங்கள் கடிதங்கள், உங்கள் செய்திகளுக்காக நான் எப்போதும் காத்திருப்பேன்.  பலப்பல நன்றிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe