பனாஜி: கோவா மாநில நாள்காட்டிக் குறிப்பில், அக்.2 காந்தி ஜெயந்தி தினத்துக்கான அரசு விடுமுறை நாள் நீக்கப் பட்டு வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அச்சுப் பிழை காரணம் என்று கோவா முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் ஒவ்வொர் ஆண்டும் அக்டோபர் மாதம் 2–ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று நாடு முழுவதும் பொது விடுமுறை தினமாக மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவா மாநில அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட நாள்காட்டிக் குறிப்பேட்டில், இந்த ஆண்டுக்கான அரசு விடுமுறை தினத்தில் காந்தி ஜெயந்தி விடுமுறை குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அரசு வேண்டுமென்றே காந்தி ஜெயந்தியை மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆளும் பாஜகவினரே இது குறித்து சந்தேகம் எழுப்பினர். இதனால் பிரச்னை ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிஜூ சாக்கோ, எந்த மாநிலமாவது இதுபோன்ற முடிவை எடுக்குமா? இது தேச விரோதச் செயல். மாநில அரசு இதனை உடனடியாக சரி செய்யவேண்டும் என்று கண்டித்தார். இந்நிலையில் இது தவறு என்றும், இந்தத் தவறு உடனடியாக சரி செய்யப்பட்டது என்றும், காந்தி ஜெயந்தி விடுமுறை ரத்து செய்யப்படவில்லை என்றும் கோவா மாநில அரசு அறிவித்தது. இது குறித்து மாநில முதல்வர், லட்சுமிகாந்த் பர்சேகர் கூறியபோது, இது நிச்சயமாக ஒரு குறும்புத்தனமான செயல். அச்சுப்பிழை காரணமாக இவ்வாறு நிகழ்ந்திருக்கும். இந்தத் தவறு சரி செய்யப்பட்டுவிட்டது என்றார்.
அச்சுப் பிழை காரணம்: காந்தி ஜெயந்தி விடுமுறை விடுபட்டுப் போனதற்கு முதல்வர் விளக்கம்
Popular Categories