யுவராஜ் சிங் உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத காரணம்: மனம் திறந்தார் தோனி

Published:

dhoni மெல்பர்ன்: 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் யுவராஜ் சிங் பேட்டிங்கில் மட்டுமல்லாது, 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கும் உலகக் கோப்பையை அணி பெற ஒரு காரண நாயகனாவும் ஜொலித்தார். ஆனால், இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவர் இடம் பெறவில்லை. இதற்கு பதிலளிக்கும் விதமாக, 2011ல் தொடர் நாயகன் விருதை அவர் வென்றபோது, மேற்கொண்ட அதே சூழலும் திட்டமிடலும் இந்த உலகக் கோப்பையில் இல்லை என்று கூறியுள்ளார் தோனி. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சில், திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளால், யுவராஜ் சிங்கின் பந்து வீச்சு பெரிதும் பாதிக்கப்பட்டது என்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். 30 யார்ட் உள்ள உள் வட்டச் சுற்றில், 5 ஃபீல்டர்களும், மீதமுள்ள 4 பேர் வெளி வட்டச் சுற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்ற வகையில், ஐசிசி நிர்ணயித்த புதிய விதிமுறைகள், யுவராஜ் போன்ற பகுதி நேர சுழற் பந்து வீச்சாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் தோனி. இவ்வாறு விதிமுறைகளைத் திருத்திய பின் யுவராஜ் சிங் அதிகமாக பந்துவீசவில்லை என்பதை நீங்கள் கவனிக்கலாம். இந்த பீல்ட் கட்டுப்பாடுகள் மாற்றப்பட்டபோது, அவர் டி-20 ஆட்டங்களில் பந்து வீசியிருந்தாலும், இந்த விதிகள் அவரது பந்துவீச்சுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும். விதிகளைத் திருத்தும் முன் சச்சின், சேவாக், யுவராஜ் ஆகியோர் அதிகளவு பந்து வீசினர். அவர்களது பந்துவீச்சை பெரிதும் சார்ந்திருந்தோம். அதேநேரத்தில் அவர்கள் அனைவரும் பகுதிநேர பந்து வீச்சாளர்கள். பேட்டிங் ஆடுகளங்களில் அவர்களால் சிறப்பாக பந்துவீச இயலாது. ஆடுகளம் ஒத்துழைத்தால் சுரேஷ் ரெய்னா நன்கு பந்துவீசுவார். குறிப்பாக, இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அவர் சரியான இடத்தில், சரியான வேகத்தில் பந்து வீசுவார். ஷிகர் தவண், ரோஹித் சர்மா கூட பகுதி நேரப் பந்து வீச்சாளர்கள்தான். ஆனால், இடத்தைப் பொறுத்து அவர்களைப் பயன்படுத்திக் கொள்வேன். யுவராஜ் ஆரம்பத்தில் 5வது இடத்தில் களமிறங்கினார். அந்த இடத்தில் நன்றாக ஆடியதால் 4ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டார். ஆனால், 2005-க்குப் பிறகு அவர் நான்காவது இடத்திலும் முகமது கைஃப் அல்லது சில சமயங்களில் நானும் ஐந்தாவது இடத்தில் களமிறங்கினோம். தற்போது ரெய்னா ஐந்தாவது இடத்தில் ஆடி வருகிறார். இது முக்கியமான இடம். ரெய்னாவும், யுவராஜும் வேறு வேறு இடத்தில் களமிறங்கியதால், இருவரையும் ஒப்பிடத் தேவையில்லை. இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆல் ரவுண்டர்கள் ஜொலிப்பதற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நீங்கள் சென்ற உலகக் கோப்பையில் விளையாடிய எல்லா ஆல்ரவுண்டர்களையும் ஒப்பிட்டால், (யுவராஜ், பிராவோ) அவர்கள் இந்த உலகக் கோப்பையில் விளையாடவில்லை. மேலும், ஆல் ரவுண்டர்கள் இந்த முறை 30முதல் 35 ஆவது ஓவர்களில் நன்றாக அடித்து விளையாட வாய்ப்பு பெற வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஒரு அரை சதத்தை எடுத்து, பந்து வீச்சில் சில விக்கெட்களையும் பெற முடியும். இத்தகைய சூழல் இந்த முறை உலகக் கோப்பையில் கிட்டவில்லை. அவர்களுக்கு பேட்டிங் செய்வதற்கான சரியான சவாலும் அமையவில்லை. பவுலிங் செய்வதிலும் சோபிக்க முடியவில்லை. அதேபோல், எல்லா ஆல்ரவுண்டர்களும் ஜாக் காலிஸ் போல் 3 வதாக களம் இறங்கி பேட்டிங் செய்து ஜொலிக்கவும் இல்லை என்று கூறினார் மகேந்திர சிங் தோனி.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img