புது தில்லி:

இந்தியாவை உலுக்கியெடுக்கும் மிகப் பெரும் கடன் ஏய்ப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார். அவர் தப்பியோடிய பிறகே அவர் கண்காணிக்கப்படும் நபராக சிபிஐ அறிவித்துள்ளது புயலைக் கிளப்பியுள்ளது.

வியாழக்கிழமை நேற்று நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடி (வயது 46), பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் வளர்ந்தவர். இவர் நியூயார்க், லண்டன், பெய்ஜிங், ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் சொந்தமாக நகைக் கடை நடத்தி வருகிறார். இவர் குறித்து அண்மையில் செய்தி வெளியிட்டிருந்த ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இவர் பெயரையும் பட்டியல் இட்டிருந்தது.

இந்நிலையில் நீரவ், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சிபிஐயிடம் ஒரு புகாரைப் பதிவு செய்தது. இந்தப் புகாரும் கூட கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அளிக்கப் பட்டிருந்தது. அதில், நீரவ், அவரது குடும்பத்தினர், அவரது பங்குதாரர்கள் ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரின் உதவியுடன் பண ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

நீரவ் மோடியின் மோசடி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாண் இயக்குநர் சுனில் மேத்தா வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் விளக்கினார்.

நீரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் இம்மூவரும் மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை ஒன்றில் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் 2011ஆம் ஆண்டில் போலியாக உறுதிமொழிச் சான்றுகளைப் பெற்றனர். அந்தச் சான்றுகளை வைத்து யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, அலாகாபாத் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவற்றின் வெளிநாட்டுக் கிளைகளில் இருந்து கடன் பெற்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு உறுதிமொழிச் சான்று அளித்ததற்கான எந்தப் பதிவும் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் இல்லை.

இந்நிலையில், கடந்த மாதம் புதிதாக கடன் பெறுவதற்காக, நீரவ் மோடியின் நிறுவனத்தில் இருந்து உறுதிமொழிச் சான்று கோரி விண்ணப்பித்தனர். ஆனால், 2011ல் நீரவ் மோடியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் பணி ஓய்வு பெற்று விட்டதால், புதிதாக வந்த அலுவலர்கள் 100 சதவீத உத்தரவாதத் தொகையை வங்கியில் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் ஏற்கெனவே இதுபோன்று உறுதிமொழிச் சான்றுடன் கடன் வாங்கியதாக அந் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதால், வங்கி அலுவலர்கள் உஷார் ஆயினர். தொடர்ந்து, வங்கியில் உள்ள பழைய ஆவணங்களை ஆய்வு செய்தபோதுதான், இது தொடர்பான எந்த ஆவணமும் வங்கியில் இல்லை என்பது தெரியவந்தது. இதை அடுத்துதான் இந்த மோசடி தெரிய வந்தது. அதன் பின்னரே வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ., அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இந்தத் தகவல்களைக் கூறிய வங்கி மேலாண் இயக்குனர் சுனில் மேதா, நிதி நெருக்கடியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி விரைவில் மீண்டு வரும். முறைகேடு செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று கூறினார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...