புது தில்லி:

இந்தியாவை உலுக்கியெடுக்கும் மிகப் பெரும் கடன் ஏய்ப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார். அவர் தப்பியோடிய பிறகே அவர் கண்காணிக்கப்படும் நபராக சிபிஐ அறிவித்துள்ளது புயலைக் கிளப்பியுள்ளது.

வியாழக்கிழமை நேற்று நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடி (வயது 46), பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் வளர்ந்தவர். இவர் நியூயார்க், லண்டன், பெய்ஜிங், ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் சொந்தமாக நகைக் கடை நடத்தி வருகிறார். நீரவ், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சிபிஐயிடம் ஒரு புகாரைப் பதிவு செய்தது. இந்தப் புகாரும் கூட கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அளிக்கப் பட்டிருந்தது. அதில், நீரவ், அவரது குடும்பத்தினர், அவரது பங்குதாரர்கள் ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரின் உதவியுடன் பண ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில், 1.80 பில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.11,700 கோடி) மோசடி நடந்திருப்பதாக வங்கி நிர்வாகம், சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவித்தது. இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் புடைசூழ, காங்கிரசின் ஊடக பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய வங்கி ஊழல் இது. இந்த ஊழல், பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமின்றி, பாரத ஸ்டேட் வங்கி உள்பட 30 வங்கிகள் சம்பந்தப்பட்ட ஊழல். முக்கிய குற்றவாளிகளான நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் எப்படி மோசடி செய்தனர் என்பதை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊழல் குறித்து 2016 ஜூலை 26ல், பிரதமர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் அலுவலகமோ, இதர அரசுத் துறைகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இப்போது நீரவ் மோடி தப்பிவிட்டார். எனவே இந்த ஊழலுக்கும், நீரவ் மோடி தப்பியதற்கும் பிரதமர் மோடிதான் நேரடி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறினார்.


இந்நிலையில், காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணியில் லலித் மோடி, விஜய் மல்லையா விவகாரம் போன்று தான் நீரவ் விவகாரமும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

அப்போது அவர் கூறியது… பிரதமர் மோடியின் ஆட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தவே நீரவ் மோடி விவகாரத்தை காங்கிரஸ் கிளப்பி வருகிறது. டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் மோடி பங்கேற்ற குழுவில், நீரவ் மோடியும் இடம் பெற்றிருந்ததாகக் கூறுவது தவறான தகவல். இந்திய தொழில் கூட்டமைப்பினரின் குழுவில் தான் அவர் இடம் பெற்றிருந்தார். உண்மை தெரியாமல் புகைப்படத்தை காண்பித்து காங்கிரஸ் குற்றம் சாட்டுவது உண்மைக்கு மாறானது.

கடந்த 2013ஆம் ஆண்டு தில்லியில் இம்பீரீயல் சொகுசு ஹோட்டல் ஒன்றை நீரவ் மோடி கட்டினார். அதன் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல், அசோக் சவான், ராஜீவ் சுக்லா ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று கூறி, அந்தப் புகைப் படத்தை பாஜக., நேற்று வெளியிட்டது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...