முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு: மத்தியப் படையை நிறுத்த பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியா

supreme-court-India புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை கேரள அரசு கவனித்து வருகிறது. தமிழகத்துக்குச் சொந்தமான இந்த அணையின் பாதுகாப்பு மற்றும் அணையின் கண்காணிப்பு, ஆய்வுப் பணிகளுக்கு தமிழக அதிகாரிகள் செல்லும்போது, கேரள போலீசார் கெடு பிடி செய்கின்றனர். இதனால் அடிக்கடி தமிழக அதிகாரிகளுக்கும் கேரள போலீசாருக்கும் மோதல் ஏற்படுகிறது. தமிழக அதிகாரிகளை பணி செய்ய விடாமல் கேரள போலீசார் தடுக்கின்றனர். எனவே முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பொறுப்பை மத்திய அரசு ஏற்று மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு பல முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. முந்தை ஐ.மு.கூ. அரசில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை, எனவே, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக கேரள அரசும், மத்திய அரசும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.