புதுதில்லி: ஒன்பது முக்கிய கூறுகள் ரயில்வே பட்ஜெட்: 2015-16ஐ மத்திய ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ் பிரபாகர் பிரபு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த ரயில்வே பட்ஜெட் ஒன்பது முக்கிய கூறுகளைக்கொண்டது அவை என்று தெரிவித்துள்ளார்.
- மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தின் முதன்மைக் கூறாக இந்திய ரயில்வே உருவெடுக்கும்
- பெரியளவிலான முதலீடுகளிக்கு ஆதாரங்களைத் திரட்டுதல்
- கனரக தொலைதூர பாதையில் உள்ள நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகள், ரயில்களை விரிவுபடுத்துதல் – ரயில்பாதை மாற்றம், இரு வழிப்பாதை/மூன்று வழிப் பாதை, மின்மயமாக்கல்ஆகியவற்றிற்கு முக்கியத்துவம்
- திட்டங்களை விரைவாக முடித்தல்
- பயணிகளுக்கான வசதிகள்
- பாதுகாப்பு
- வெளிப்படைத்தன்மை, அமைப்பு முறையில் மேம்பாடு
- மக்கள் விரும்பும் போக்குவரத்தாக ரயில்வே
- நிலைத்தன்மை
இந்திய பொருளாதாரத்தை இயக்கும் முக்கிய சக்தியாக இந்திய ரயில்வே துறை இருக்கும் வகையில் பல்வேறு யோசனைகள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கூடுதல் முதலீட்டிற்கான நிதி ஆதாரங்களை திரட்டுதல், போக்குவரத்து அதிகமுள்ள தடங்களில் நெரிசலைக் குறைத்தல், பயணிகளுக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் மேம்படுத்துதல். இரயில்வேயை பொதுமக்கள் பெரிதும் விரும்பும் போக்குவரத்து வசதியாக மேம்படுத்துதல் ஆகியவை இந்த பட்ஜெட்டின் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்களாகும். இன்று மக்களவையில் பட்ஜெட்டை சமர்பித்து பேசிய திரு. சுரேஷ் பிராபாகர் பிரபு எல்லா முக்கிய முன்நடவடிக்கைகள் இயக்க ரீதியில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இந்திய ரயில்வேயை அடுத்த 5 ஆண்டுகளில் மாற்றியமைக்கும் வகையில் நான்கு குறிக்கோள்களை இந்த பட்ஜெட் நிர்ணயித்துள்ளது. பயணிகளின் அனுபவத்தில் குறிப்பிடதக்க மேம்பாடு பயணத்திற்கு ரயில்வேயை பாதுகாப்பான போக்குவரத்து சாதனமாக மாற்றி அமைத்தல். கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்துதல், ரயில்வேயை தற்சார்பு அமைப்பாக மாற்றுதல் ஆகியவை இந்த குறிக்கோள்களாகும். இந்த குறிக்கோளை எட்டும் வகையில் இந்த பட்ஜெட் 5 வழிமுறைகளை தெரிவித்துள்ளது. இடைக்கால திட்டம், 2030ம் ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம், 5 ஆண்டுகால செயல்திட்டம் ஆகிவை இதில் அடங்கும். நீண்டகால அடிப்படையில் நிதி ஆதாரம் மற்றும் வெளிநாட்டு தொழிநுட்பத்திற்கு உதவும் வகையில் சம்மந்தப்பட்ட துறையினருடன் ஒத்துழைப்பு, இறுதிகட்ட செயல்பாட்டில் மேம்பாடு, ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்தல், ரயில் நிலையக் கட்டமைப்பில் மேம்பாடு போன்றவற்றிலும் இது கவனம் செலுத்துகிறது. கூடுதல் நிதி ஆதாரத்திற்கும் வகைசெய்யப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2015-2016ம் ஆண்டில் செயல்திறன் விகிதம் 88.5 சதவீதத்தை எட்டும்வகையில் மேலாண்மை நடைமுறைகள் மேம்படுத்தபடுவதுடன். மனித ஆற்றலும் திறன்பட பயன்படுத்தப்படும். இந்த இலக்கிற்கு உதவும் வகையில் விரைவாக முடிவெடுத்தல், பொறுப்பேற்கும் தன்மையை அதிகரித்தல், மேம்பட்ட நிர்வாக தகவல் அமைப்பு, மனித ஆற்றலை மேம்படுத்துவதுடன் பயிற்சி அளிக்க வகை செய்தல் போன்றவை செயல்படுத்தப்படும். ரயில் பயணத்தை மகிழ்ச்சி மிக்க அனுபவமாக செய்யும் வகையில் தூய்மைக்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கிறது. ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் தூய்மையை பராமரிக்கும் வகையில் தனித்துறை ஒன்று ஏற்படுத்தப்படும். மேலும் 650 ரயில் நிலையங்களில் புதிய கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய படுக்கை விரிப்புகளை கணிணி வழியாக பதிவு செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்படும். 24 மணி நேரமும் உதவி பெறும் வகையில் 138 எண் உள்ள தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும். பாதுகாப்பு சம்பந்தமான புகார்களை தெரிவிப்பதற்கு கட்டணமில்லாத வகையில் 182 எண்ணுள்ள தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும். பயணச்சீட்டை எளிதாக பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத டிக்கட்டுகளை 5 நிமிடங்களில் பெறுவதற்கான வசதி, சில்லறை பெறுவதற்கான இயந்திரம், மாற்று திறனாளிகள் சலுகை கட்டணத்தில் கணிணிவழியாக பயணச்சீட்டுகளை பெறுதல், ஆகியவை இதில் அடங்கும். ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான பணத்தை நேரடியாக வங்கி கணக்குகளில் சேர்த்தல், ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி முன்பதிவு இல்லாத டிக்கட்டுகளை பெறுதல் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்படும். விரும்பிய உணவை தெரிவு செய்து பெறுவதற்கு கணிணிவழி வசதியை ஏற்படுத்த இந்த பட்ஜெட் யோசனை தெரிவித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் டிக்கட்டை முன்பதிவு செய்யும்போது உணவிற்கும் பதிவு செய்யும் வசதி, தரமான உணவை வழங்கம் வகையில் தெரிவுசெய்யப்பட்ட கோட்டங்களில் பிரபல முகமைகளின் சமையல் அறை கூடங்கள், குடிநீர் விநியோக இயந்திர வசதி ஆகியவை இதில் அடங்கும். பயணிகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் வகையில் டிக்கெட் பரிசோதனைகளுக்கு இயந்திர வசதி அளிக்கப்படும். 2000 ரயில் நிலயங்களில் பொதுவான மையங்களின் வழியாக நிர்வகிக்கப்படும் ஒளிகாட்சி கட்டமைப்பு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும். ரயில்களின் புறப்பாடு வருகை குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்தி சேவை மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். மகளிர் பாதுகாப்பிற்கு உதவும் வகையில் சில குறிப்பிட்ட முக்கிய தட ரயில் பெட்டிகளிலும் புறநகர ரயில்களிலும் மகளிர் பெட்டிகளிலும் சோதனை அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படும். சில குறிப்பிட்ட சதாப்தி ரயில்களில் பொழுது போக்கு அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொபைல் போன்களை “சார்ஜ்” செய்யும் வசதி பொதுப் பெட்டிகளிலும் ஏற்படுத்தப்படும். படுக்கை வசதி பெட்டிகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்படும். கூடுதலாக 200 ரயில் நிலையங்கள் மாதிரி நிலையங்களாக மேம்படுத்தப்படும். பி-பிரிவு ரயில் நிலையங்களில் “வை-பை” சேவை அறிமுகப்படுத்தப்படும். ரயில் நிலையங்களில் தாமே நேரடியாக பயன்படுத்தும் “லாக்கர்” வசதி ஏற்படுத்தப்படும். குறிப்பிடப்பட்ட ரயில்களில் கூடுதல் பயணிகள் பயணிக்க வசதி ஏற்படுத்தப்படும். மேலும், தெரிவு செய்யப்பட்ட பயணிகள் ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டிகள் சேர்க்கப்படும். படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் உயர் அடுக்குகளுக்கு செல்ல பயணிகளுக்கு வசதியான வகையில் ஏணிப்படிகளை அமைக்னுமாறு தேசிய வடிவமைப்பு துறை கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு கீழ் நிலை படுக்கை வசதி அளிக்கப்படும். மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கீழ் நிலை அடுக்குகளை வழங்க உதவி அளிக்குமாறு டிக்கெட் பரிசோதனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். பெட்டிகளின் நடுப்பகுதி மூத்த குடிமக்களுக்கும் மகளிருக்கும் ஒதுக்கப்படும். நகரும் படிகட்டுகள், உயர் தூக்கிகள் போன்ற வசதிகளை ஏற்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் “பிரய்லி” வசதி ஏற்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தப்படும் வகையில் நுழைவாயில்கள் அகலமாக இருக்கும் வகையில் உருவாக்கப்படும். பயணிகளுக்கான வசதிகனை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு 67% அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலைய மேம்பாடு கொள்கையையை முழுவதும் மாற்றி அமைக்க ரயில்வே உத்தேசித்துள்ளது. வளர்ச்சி திட்டங்களை விரைவாக செயல்படுத்த நடைமுறைகள் எளிமை படுத்தப்படுகிறன. பெரிய நகரங்களில் 10 சுற்றுப்புற ரயில் முனையங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது புறநகர் பகுதி பயணிகளுக்கு சேவை அளிக்கவும் நகரின் நெரிசலை குறைக்கவும் உதவும். 9400 கி.மீ தொலைவு பாதைகளை இரட்டை வழி/ மூன்று வழி / நான்கு வழி பாதைகளாக மாற்றும் 77 திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. மின்வழி தடங்கள் அமைக்கும் பணியும் இதில் சேரும். ரூ.96,182 கோடி செலவிலான இத்திட்ட பணிகளின் பயன்கள் அநேகமாக எல்லா மாநிலங்களுக்கும் கிடைக்கும். ரூ.2,374 கோடி மதிப்பீட்டிலான போக்குவரத்து வசதி பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மின்சார வழிதடங்களை அமைக்கும் பணியை விரைவுபடுத்தும் வகையில் 2015-16ம் ஆண்டில் 6,608 கி.மீ தொலைவு வழித்தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இது சென்ற ஆண்டு ஒதுக்கீட்டைவிட 1,330 சதவீதம் அதிகமாகும். 9 ரயில் தடங்களில் ஓடும் ரயில்களின் வேகம் 110 லிருந்து 160 கி.மீட்டராகவும் 130 லிருந்து 200 கி.மீட்டராகவும் அதிகரிக்கப்படும். இதனால் தில்லி-கொல்கத்தா, தில்லி-மும்பை போன்ற பெருநகரங்களுக்கு இடையே ஒர் இரவில் பயணத்தை மேற்கொள்ள முடியும். இதைபோன்று சரக்கு ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்படுகிறது. பாதுகாப்பிற்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில் விபத்து அதிகமாக நடைபெறக் கூடிய இடங்களை கருத்தில் கொண்டு செயல்திட்டம் ஒன்று வரையப்படும். 970 ரயில்வே மேம்பாலங்களும் கீழ் பாலங்களும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ரூ,6,581 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டங்களின் பயனாக 3,438 கடப்பு சாலைகள் அகற்றப்படும். இது சென்ற ஆண்டு ஒத்துக்கீட்டைவிட 2,600 சதவீதம் கூடுதல் ஆகும். ரயில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அமைப்பு, மோதல் தடுப்பு அமைப்பும், சில தெரிவு செய்யப்பட்ட தடங்களில் விரைவாக அமைக்கப்படும். “காயகல்ப்” என்ற மேம்பாட்டு குழு ஒன்று அமைப்பதற்கும் இந்த பட்ஜெட் யோசனை தெரிவித்துள்ளது. ரயில்வேகளில் நவீன உத்திகளை அறிமுகப்படுத்துவதற்கும் வர்த்தகத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் இந்த குழு அமைக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்ப உத்திகளை பெறும் வகையில் தொழில்நுட்ப இணையம் ஒன்றையும் ரயில்வே நிர்வாகம் அமைக்கிறது. அடிப்படை ஆய்வு பணிக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட பல்கலைகழங்களில் 4 ஆராய்ச்சி மையங்களை அமைக்க ரயில்வே உத்தேசித்துள்ளது. மேலும், வாரணாசியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் ரயில்வே தொழில்நுட்பத்திற்காக மாளவியா இருக்கை ஒன்று ஏற்படுத்தப்படும். வெளிநாட்டு ரயில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கும் நிலங்களை கையகப்படுத்துவற்கும் நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கும் முக்கிய திட்டங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்கும் மாநில அரசுகளுடன் இணைந்து கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். புதிய பாதைகளை அமைக்கும் பணிகளுக்கு உதவும் வகையில் பெரிய பொதுத்துறை வாடிக்கையாளர்களுடன் இணைந்து கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படும். துறைமுகங்களின் ஒத்துழைப்புடன் கடலோர பகுதிகளை இணைக்கும் யோசனைகளை செயல்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வார்தா- நாக்பூர் முன்றாவது தடம், காசிபேட் – விஜயவாடா மூன்றாவது தடம், பத்ரக்-நர்குண்டி மூன்றாவது தடம், புஜ்-நலியா இருப்புபாதை மாற்றம் போன்ற பணிகள் ரூ.2,500 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இந்திய ரயில்வேகள் சுற்றுச்சூழலுக்கு இயைந்ததாக இருக்கும் வகையில் 100 புறநகர் ரயில்கள் இரண்டு எரிபொருட்களை கொண்டு இயக்கும் வகையில் மாற்றி அமைக்கப்படும். அழுத்தப்பட்ட இயற்கை வாயு, டீசல் ஆகிய இரண்டு எரிபொருளைக் கொண்டு இவை இயக்கப்படும். சர்வதேச நியதிகளுக்கு ஏற்ற வகையில் இஞ்சின்களின் ஒலித்திறன் இருக்கும். வனவிலங்ககளின் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்தப்படும். 2015-16ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் மதிப்பீடு: திட்ட ஒதுக்கீடு ரூ. 1,00,011 கோடி. இது 2014-15ம் ஆண்டின் மறு மதிப்பீடை விட 52% கூடுதலாகும். இந்த திட்ட மதிப்பீட்டில் 41.6% மத்திய அரசிடம் இருந்து பெறப்படும். 17.8% உள் ஆதாரங்களிடமிருந்து திரட்டப்படும். ரயில் பாதைகளில் பாதுகாப்பு எச்சரிக்கை முறை, மோதல் தவிர்ப்பு முறை குறிப்பிட்ட ரயில் பாதைகளில் ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை முறை, ரயில்கள் மோதல் தவிர்ப்பு முறைகளை அமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனை விரைவில் செயபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரயில் பெட்டிகளில் தீ பிடிப்பதைத் தடுக்கவும், விபத்துக்களின்போது ரயில் பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று மோதுவதை தடுக்கவும் புதிய முறைகளை கண்டுபிடிக்குமாறு ஆராய்ச்சி,வடிவமைப்பு மற்றும் தர நிலைகள் அமைப்பிணை கேட்டுக்கொள்ளப்பட்டது. ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குளாகும் சம்பவங்களைத் தடுப்பதற்காக முதன்மை பாதைகளைப் புதுப்பிக்கும் அதேநேரம் கனமான தண்டவாளங்கள் கொண்ட நவீன பாதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறந்த வெல்டிங் தொழில்நுட்பங்களும் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், தண்டவாளங்களைச் சோதனை செய்ய அனலாக் இயந்திரங்களுக்கு பதிலாக மிகவும் நம்பகமான டிஜிட்டல் வகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. செய்தி: பிஐபி