நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பிலான பொதுக்கூட்டம் ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில் நடைபெற்றது. தெலுகுதேசம், ஜனசேனா, பாஜக., தொண்டர்கள் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி செய்த செயல், சமூகத் தளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுக் கூட்டத்தில் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையாற்றினார். அப்போது, பொதுக் கூட்டத்தைப் பார்க்க வந்த தொண்டர்களில் சிலர், அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறினர்.
இதைப் பார்த்ததும் பிரதமர் மோடி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் செய்த செயல், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையின் போது தொண்டர்கள் மின்கம்பத்தில் ஏறுவதைக் கண்ட பிரதமர் மோடி, உடனே பவன் கல்யாணிடம் உரையை நிறுத்துமாறு குறிக்கிட்டார். பின்னர் தானே எழுந்து வந்து மைக்கில், தொண்டர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அவர்களை மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்குமாறு வலியுறுத்தினார்.
“அங்கு மின் வயர்கள் உள்ளன. அங்கு என்ன செய்கின்றீர்கள்? உங்களது உயிர் எங்களுக்கு விலைமதிப்பற்றது. தயவு செய்து கீழே இறங்குங்கள். ஊடகத்தினர் உங்களப் படம் எடுத்துள்ளனர். இப்போது கீழே வாருங்கள். அங்கிருக்கும் காவலர்கள், தயவு செய்து மக்களை பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால், எங்களுக்கு அது மிகுந்த வலியை ஏற்படுத்திவிடும்” என்று பேசிக் கொண்டே இருந்தார். அவர் சொல்லச் சொல்ல, ஒவ்வொருவராக மின் கம்பத்தை விட்டுக் கீழே இறங்கி வந்தனர். அனைவரும் கீழே இறங்கியதைப் பார்த்த பிறகு தான், மோடி தனது இருக்கைக்கு திரும்பிச் சென்றார்.
அதன் பிறகு, ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் பிரதமர் மோடி சொன்னதை தெலுகில் சொல்லி, யாரும் மின் கம்பம் பக்கம் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தனது உரையைத் தொடர்ந்தார்.
மேடையில் அமர்ந்து கொண்டு, கீழே எவ்வளவு நுணுக்கமாக மக்களை, மக்களின் மனங்களைப் படிக்கிறார் பிரதமர் மோடி என்று பலரும் சமூகத் தளங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.