
ஜூன் 2 வெள்ளிக்கிழமை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிய விபத்தில் குறைந்தது 280 பேர் உயிரிழந்துள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்தின் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்றன. இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்து கட்டாக்கில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி இன்று கட்டாக் செல்கிறார். ரயில் விபத்து நடந்த இடத்தையும் பார்வையிடுகிறார்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்காளத்தில் உள்ள பெங்கால் ஷாலிமார் நிலையத்திற்கும் சென்னைக்கும் இடையே இயக்கப்படுகிறது. பஹானாகா ரயில் நிலையம் அருகே இந்த விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் விபத்து காரணமாக பாலசோர் வழித்தடத்தில் 43 ரயில்களின் சேவை ரத்து செய்யப் பட்டிருக்கிறது. பாலசோர் வழித்தடத்தில் செல்லக்கூடிய 38 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

ரயில் விபத்துகளைப் பொறுத்தவரை மரணம் அடைந்தவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம். முன்பதிவு செய்தவர்கள் தொடர்பாக குறைந்தபட்ச தகவல்கள் இருக்கும். முன்பதிவு செய்யப் படாத பொதுப் பெட்டியில் பயணித்தவர்களை அடையாளம் காண்பது மிகவும் சவாலான பணியாக இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடிசா ரயில் விபத்து குறித்து தென்கிழக்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது மிகப்பெரிய விபத்து என்று தெரிவித்துள்ள ரயில்வே துறை அதிகாரிகள், ஐந்துக்கும் மேற்பட்ட பெட்டிகளின் இருப்பவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஏழு பெட்டிகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாகவும், நான்கு பெட்டிகள் முற்றிலுமாக ரயில் பாதை இருக்கும் பகுதியில் இருந்து வெகு தூரம் சென்று தடம் புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, விபத்து குறித்து அறிந்ததும், விபத்து நடந்த இடத்துக்கு, ஒடிசாவின் சிறப்பு நிவாரண துறை செயலர் சத்யபிரதா சாஹு மற்றும் வருவாய் துறை அமைச்சர் பிரமிளா மாலிக் ஆகியோரை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அனுப்பிவைத்தார். மேலும், இன்று காலை விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று, மீட்புப் பணிகளை ஒடிசா முதல்வர் முடுக்கி விட்டார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்துக்கு உடனே விரைந்தார். விபத்திற்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

தென்கிழக்கு ரயில்வேயின் விபத்து மீட்பு ரயில்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேர்ந்தன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மருத்துமனையில் சேர்க்கும் பணியில் 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் துரித கதியில் ஈடுபட்டன. அவசரகால பணிகளில் நுாற்றுக்கணக்கான அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஒடிசா தலைமை செயலர் பிரதீப் ஜெனா, ”காயம் அடைந்த 132 பேர் அருகில் உள்ள சோரோ, கோபால்புர், கான்டாபாடா சுகாதார மையங்களில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 47 பேர் பாலசோர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தலைமை செயலர் எச்.கே.திவேதி ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு மாநில அமைச்சர் மானஸ் புனியா மற்றும் எம்.பி., தோலா சென் தலைமையில் குழு ஒன்றை அனுப்பினர்.