
இந்தியாவை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிசாவில் நடந்துள்ள இந்த கோர ரயில் விபத்து உலகின் மிக மோசமான ரயில் விபத்தில் ஒன்றாகியுள்ளது. இந்தக் கோர விபத்தில் 3 ரயில்கள் பக்கவாட்டில் அடுத்தடுத்து மோதி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணியளவில் வந்துகொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு பக்கவாட்டில் இருந்த ரயில் பாதையில் சரிந்து விழுந்தது.
கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் தடம்புரண்டதில், ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்த விழுந்த நிலையில், பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரயிலும் விபத்துக்கு உள்ளானது. இதில் அடுத்த தண்டவாளத்தில் வந்த ஒரு சரக்கு ரயிலும் மோதி மோசமான விபத்தாக மாறியது. இந்தக் கோர விபத்தில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் விமானப்படையும் மீட்பு பணிகளில் இறங்கியுள்ளது. இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விபத்தில் தற்போது வரை 237 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் நடந்துள்ள இந்த கோர ரயில் விபத்து உலகளவில் மிக மோசமான ரயில் விபத்தில் ஒன்றாக பதிவாகியுள்ளது. 2004-ல் இலங்கையில் 1700 பேர் உயிரிழந்த மாதாரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து தான் மிக கோரமான ரெயில் விபத்தாக உள்ளது.
இந்தியாவில் 1999ல் அசாமில் இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 285 பேர் பலியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரயில் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டறிய உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பாலசோர் மருத்துவமனையில் ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய தன்னார்வலர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்தியாவை புரட்டி போட்டுள்ள இந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி முர்மு, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், தமிழக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
விபத்து ஏற்பட்ட (ஜூன் 3) இந்த நாளை ஒடிசாவின் துக்க நாளாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒடிசாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாஜக நிகழ்ச்சிகள் இன்று ரத்து செய்யப்படுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விபத்து நிகழ்ந்த சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். விபத்து குறித்து தகவல்கள் அறிய சென்னை எழிலகம் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணித்தோர் விவரம் அறிந்துகொள்ள தமிழக அரசு சார்பில் அவசர கால கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி அவசர உதவிக்காக 044-28593990, 9445869843 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வருவதற்காக சுமார் 800 பேர் கோரமண்டல் விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி அரசு சார்பில் ரயிலில் பயணித்தோர் பற்றிய விபரம் அறிந்துகொள்ள அவசர உதவிக்காக 1070, 1077, 112, 0413-2251003, 2255996 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும், இந்த அவசர கால மையம் 24 மணி நேரமும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அமைச்சகத்தின் கீழும் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவிலும் பல்வேறு பகுதிகளுக்கான அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விபத்து எதிரொலியாக அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய 38 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 35 ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.