
நூற்றாண்டு பல முன்பு
நாளொன்றில் நீயெங்கோ
மேற்கத்தி மலைப்பாறை
மீதங்கே வீற்றிருந்தாய்.
மின்வெட்டுப் போன்றேயோர்
மெய்சிலிர்ப்பு கணநேரம்;
உன்னுள்ளம் உத்வேக
ஊற்றினிலே சிலிர்த்ததுவே:
“சீர்கெட்டு சிதறுண்ட
தாய்நாட்டை தர்மத்தின்
ஓர்சக்திக் கோட்டையென
உயர்த்திடுவேன் உறுதியிதே”
மலைச் சுனைநீர் மறைந்தொடுங்கி
மலைப் பிளவில் தேங்கிவிடும்;.
அலையறைந்து அருவிநீரோ
மலையினையும் பிளந்துவிடும்.
சுனைநீராய் இருந்தாய்நீ,
சுழன்றெழுந்தாய் அருவியென!
வினவியது வியப்படைந்த
உலகமுமே உனைக்கண்டு:
“விண்முட்டும் இவர்கீர்த்தி,
மண்முட்டும் பகைத்தலைகள்;
கண்ணுக்கும் எட்டாமல்
கிடந்ததுதான் எவ்வாறு?”
எத்தனைதான் நூற்றாண்டு
இருட்டடிக்கப் பட்டாலும்
சத்தியம்தான் சாகாது,
சபித்தாலும் ஓயாது.
உன்குரலில் ஒலித்திட்ட
உயரியதோர் சத்தியத்தை
என்றைக்கோ உதவாது
என்றுலகோர் இகழ்ந்திட்டார்;
மேலான முறையிலது
வரலாற்று ஏடுகளில்
நூலோரின் புரட்டுகளை
தகர்த்திடுது பார்இன்று!
மரணமிலா ஒன்றினையே
மாய்ப்பதுதான் சாத்தியமா?
பரிசுத்த பக்தியினைப்
பாதகமும் என்செய்யும்?
உன் குரலின் சத்தியத்தின்
உயர்வதனை உணர்கின்றோம்,
உன் பார்வை எதிர்கால
உன்னதத்தில் நிலைத்திடுது.
உந்தனது கனவிலுறு
உயர்வதனை யாரறிவார்!
உன்தவத்தின் உறுபயனை
உணர்கின்றோம் இன்றைக்கு.
உனதுபடை ,உனதுகொடி,
உன்குதிரை உன்வாள்வேல்
உன்வீரப் போர்முழக்கம்
“ஹரஹரஹர, ஹரஹரஹர”
இவை எதுவும் இன்றில்லை;
என்றாலும் உன்நாமம்
சுவையோடு முன்னோரின்
செய்தியினைப் பரப்பிடுது!
50 ஆண்டுகள் ஆகின்றன. 1974 ல் சிவாஜி மகாராஜா முடிசூடியதன் முன்னூறாவது ஆண்டு விழாவின் போது அன்றைய ஹிந்துத்துவ வார இதழ் ‘தியாகபூமி’ சிவாஜி மலர் வெளியிட்டது. அந்த மலரில் (சத்ரபதி சிவாஜி பற்றி ரவீந்திரநாத் தாகூர் இயற்றி நான் தமிழாக்கிய) இந்தக் கவிதை இடம் பெற்ற்து.
தாகூரின் ‘O Shivaji!’ என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்
தமிழில் ‘ஸருமன்’ என்ற புனைபெயரில்’ – சங்கர. மகாதேவன்