
அரபிக் கடலில் உருவாகியுள்ள பைபோர்ஜாய் புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலால் மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் தென்மேற்குப் பருவமழை தாமதமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் 5ம் தேதி அன்று மாலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது நேற்று வலுப்பெற்று வடக்கு திசையில் நகா்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘பைபோர்ஜாய்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இன்று காலை பைபோர்ஜாய் புயல் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ளது. இது கோவாவில் இருந்து மேற்கு தென்மேற்கு திசையில் 890 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறக்கூடும். இந்தப் புயலால் மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வழக்கமாக கேரளாவில் தென்மேற்குப் பருவமழை பொதுவாக ஜூன் முதல் நாள் தொடங்கும். இந்த ஆண்டு ஜூன் நான்காம் நாள் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருந்தது. ஆனால், அரபிக்கடலில் ஒரு காற்றாழுத்தத் தாழ்வுமண்டலம் நிலைகொண்டு அது தீவிரப் புயலாக மாறியிருப்பதால் பருவமழை தொடங்க தாமதம் ஆகலாம் எனத் தெரிகிறது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கும்போது வங்கக் கடலிலோ அரபிக் கடலிலோ ஒரு புயல் தோன்றினால் அது தென்மேற்குப் பருவமழை வலுவாகத் தொடங்க உதவி செய்யும். ஆனால் சில நேரம் இந்த புயல்கள் தென்மேற்குப் பருவமழையின் தொடக்கத்தைத் தாமதப்படுத்தி, மழையின் அளவையும் குறைத்து விடும்.
இன்றைய கணினி வழிகாட்டுதல்களைப் பார்க்கும்போது அரபிக்கடலில் தீவிர புயல் உருவாக வாய்ப்புள்ளது; இந்தப் புயல் மேற்குக் கடலோரப்பகுதிகளில் இருந்து சுமார் 600 கிலோமீட்டர் தூரத்தில் உருவாகி வடக்கு நோக்கி நகரக்கூடும்; இதனால் மேற்குக் கடலோர மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும்; எனவே தென்மேற்குப் பருவமழை தாமதமாகத் தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய முன்னாள் அதிகாரி முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.