
திருமலை திருப்பதியில் இந்த ஆண்டு இரண்டு பிரமோத்ஸவம் வருவதால் அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
திருப்பதி திருமலையப்பன் திருக்கோவிலில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை வருடாந்திர பிரமோத்ஸவம் வருகிறது. தொடர்ந்து, அக்டோபர் மாதம் 15-ம் தேதியிலிருந்து 23-ம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோத்ஸவம் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு பிரமோத்ஸவத்துக்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்கூட்டியே தொடங்கியுள்ளனர்.
வருடாந்திர பிரமோத்ஸவ கொடியேற்று விழா செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். 22-ம் தேதி கருட சேவை 23-ம் தேதி தங்க தேரோட்டம் 25-ம் தேதி தேரோட்டம் ஆகியவை இந்த பிரமோத்ஸவத்தின் போது நடைபெறுகிறது.
அடுத்து வரும் நவராத்திரி பிரமோத்ஸவத்தில், அக்டோபர் மாதம் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 19-ம் தேதி கருட சேவை நடக்கிறது.
வழக்கமாக, புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க மலையில் குவிந்துவிடுவார்கள். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமலையில் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், இந்த இரண்டு பிரமோத்ஸவம் மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விஐபி தரிசனம் மற்றும் சிபாரிசு கடிதங்களை ஏற்க மாட்டோம் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய நாட்களில் இலவச தரிசனத்துக்கு மட்டுமே அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.