
இளம் தமிழக செஸ் வீரரான ஜி.எம். குகேஷ், இந்தியாவின் முதல் தரவரிசை செஸ் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி டாப் 10ல் இடம்பெற்று அசத்தியுள்ளார்.
2023 செஸ் உலகக்கோப்பைப் போட்டி பாகுவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 81 வீரர்கள் நாக் அவுட் ஆன நிலையில், தமிழக இளம் வீரரான குகேஷ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் தன்னை எதிர்த்து விளையாடிய மிஸ்ட்ராடின் இஸ்கண்ட்ரோவை வீழ்த்தினார். இதை அடுத்து அவர் உலக தரவரிசை பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் முதல் முறையாக உலக தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்குள் நுழைந்திருந்தார் குகேஷ். அடுத்த 15 மாதங்களிலேயே தன் அபாரத் திறமையால் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
இதற்கு முன் இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் இருந்திருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து தற்போது 17 வயதான குகேஷ் 3வது இந்திய வீரராக மாறியுள்ளார். 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த் 1986-ற்கு பிறகு 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருந்து வருகிறார்.
இந்த மாதம் இறுதியில் பைட் தரவரிசைப் பட்டியலை வெளியிடும் போது உலகின் 9-வது செஸ் வீரராகவும், முதல் இந்திய செஸ் வீரராகவும் குகேஷ் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் 2750 செஸ் புள்ளிகளை வேகமாக அடைந்த மேக்னஸ் கார்ல்சனை பின்னுக்கு தள்ளி, குறைந்த வயதில் 2750 தரவரிசை புள்ளிகளை கடந்த இளைய செஸ் வீரராக மாறினார் குகேஷ். தொடர்ந்து உலகின் நம்பர் 1 தரவரிசை வீரரையும் தோற்கடித்த குகேஷ், அதைச் செய்த இளம் வயது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
சென்னையைச் சேர்ந்த சிறுவனான குகேஷ் 2019-ல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது இளைய வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார். தற்போது உலக தரவரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் 10வது இடத்திலும், இந்திய தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்திலும் நீடிக்கிறார்.