
‘தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை’க்கு தென்காசியில் இருந்து வாராணசி எனப்படும் வடகாசிக்கு பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவின் பண்பாட்டு பாரம்பரிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களை பொதுமக்கள் எளிதாக சுற்றிப் பார்க்க, இந்திய ரயில்வே ‘பாரத் கௌரவ் ரயில்கள்’ திட்டத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கியது.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து காசி, வாரணாசி, கயா, ஷீரடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் தென்காசி – வாராணசி இடையே பாரத் கௌரவ் ரயில் சேவை வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று தொடங்கப்பட உள்ளது.
தென்காசியில் இருந்து நவம்பர் 9 ஆம் தேதி மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அந்த ரயில் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை செல்கிறது. தொடர்ந்து மறுநாள் விஜயவாடா, வாரங்கல், பல்கர்ஷா சென்றடைந்து, 11 ஆம் தேதி பிரயாக்ராஜ் சங்கம் வழியாக இரவு 10.30 மணிக்கு வாரணாசி சென்றடைகிறது.
பின், நவம்பர் 13 ஆம் தேதி இரவு 11:00 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்பட்டு கயா, சம்பல்பூர், விஜயவாடா, சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், ராமேஸ்வரம் வழியாக, 17 ஆம் தேதி இரவு 7:25 மணிக்கு தென்காசி திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா ரயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 3, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 8 இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த ரயிலில் ஸ்லீப்பர் வகுப்பிற்கு ஒரு நபருக்கு ரூ. 16,850 கட்டணம், அதே சமயம் ஏ.சி வகுப்பைத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் ரூ. 30,500 செலுத்த வேண்டும். 5 முதல் 11 வயது வரையிலான குழந்தை பயணம் செய்தால் டிக்கெட் விலை ரூ.15,850 மற்றும் ரூ.29,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து சுற்றுலா பயணிகளும் வாக்காளர் அடையாள அட்டை/ஆதார் மற்றும் கோவிட்-19 இறுதி டோஸ் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த ரயில் பயணம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், கயாவில் உள்ள விஷ்ணு பாதம் கோயில் மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட புனித இடங்களை உள்ளடக்கி இருக்கும்.