
- செந்தில் பாலாஜி வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் அவகாசம் கோரிய இடையீட்டு மனு
- புலன் விசாரணை குறித்து அறிக்கை அளிக்க எவ்வளவு அவகாசம் தேவை என்று உச்சநீதிமன்றம் கேள்வி
- விளக்கம் அளிக்க தமிழக மத்திய குற்றப்பிரிவுக்கு 30 நிமிடங்கள் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்
- இல்லையெனில் தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை
- நீங்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் வேலையை முடிப்பீர்கள், 24 வருடமானாலும் வேலையை முடிக்காமல் இழுத்தடிப்பீர்கள், அரசுகள் எப்படி செயல்படும் என்பது தெரியும் என நீதிபதிகள் காட்டம்

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் போட்டுள்ள வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது. இதில், இன்று உச்ச நீதிமன்றம் குற்றப்பிரிவு போலீஸாரை கடுமையாக விமர்சனம் செய்ததுடன் வரும் செப்.30ம் தேதிக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் போடப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணையை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று நீத்மன்றம் கடந்த மே 16-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். இதனைக் கேட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கடும் அதிருப்தி அடைந்தது.
ஏற்கெனவே வழங்கிய 2 மாத அவகாசம் முடிந்துள்ள நிலையில் அதைவிட 3 மடங்கு கால அவகாசம் கேட்பது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் நினைத்தால் ஒரு வழக்கு விசாரணையை 24 மணி நேரத்திலும் முடிக்கலாம். 24 ஆண்டுகள் ஆனாலும் முடிக்காமல் இழுக்கலாம் என்று கடுமையாக விமர்சித்தனர். எனவே உங்கள் டி.ஜி.பி.யையும் உள்துறை செயலாளரையும் நேரில் வரச் சொல்லுங்கள். இன்னும் எத்தனை நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்கட்டும் என்று உத்தரவிட்டனர்.
இதை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் அரை மணி நேரம் அவகாசம் கேட்கப்பட்டது. பின்னர் நீதிமன்றத்துக்கு வந்து முறையிட்ட போலீசார் மேலும் 3 மாதங்கள் அவகாசம் கேட்டதுடன் டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர் ஆஜராக உத்தரவிட்டதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதனால், டி.ஜி.பி.யும் உள்துறைச் செயலாளரும் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற்ற நீதிபதிகள், 3 மாதம் அவகாசம் வழங்க முடியாது என்றும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
செப்.30க்குள் நீங்கள் முடிக்காவிட்டால் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.