இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவுக்கு ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான் 3ன் லேண்டர் இன்று வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது. இது இந்தத் திட்டத்தின் முக்கியமான மைல்கல்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்விஎம்3 எம்4 ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வுப்பணிக்காக இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது. இந்த விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்று வட்டப்பாதையின் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டு, கடந்த 1-ம் தேதி நிலவு வட்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஆக.5-ம் தேதி நிலவு சுற்றுவட்டப்பாதையில் இயங்கத் தொடங்கி, படிப்படியாக, சுற்றுவட்டப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டு, நிலவை நோக்கி நெருங்கியது. தற்போது குறைந்தபட்சம் 153 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சம் 163 கி.மீ. என்ற அளவிலும் அது நிலவைச் சுற்றி வருகிறது.
தற்போது ‘சந்திரயான்-3’ 100 கிமீ., தொலைவிலான நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி ஆக.23-ம் தேதி மாலை 5.47க்கு நிலவின் தென் துருவத்தில் ‘சந்திரயான்-3’ விண்கலம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து தரையிறங்கும் லேண்டரை (புராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூல்) தனியாகப் பிரிக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் இன்று ஈடுபட்டனர். அதன்படி, நிலவை நெருங்கிய நிலையில் ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இனி இவை இரண்டும் தனித்தனி பயணங்களைத் தொடங்கும்.
விக்ரம் லேண்டர் தொடர்ந்து படிப்படியாக நிலவின் தரைப் பரப்பை நெருக்க உள்ளது. லேண்டர் பாதை குறைப்பு பணிகள் நாளை மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்பிறகு லேண்டர் நிலவில் எங்கு தரையிறங்குவது என்று முடிவு செய்யப்படும். இதற்காக நிலவில் தரை இறங்குவதற்கான இடங்களை புகைப்படம் எடுத்து உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.