
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
21ஆம் நாள் – ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து
டெல்லி – 25.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஆஸ்திரேலிய அணி (399/8, வார்னர் 104, மேக்ஸ்வெல் 106, ஸ்மித் 71, லபுசேன் 62, வான் பீக் 4/74) நெதர்லாந்து அணியை (21 ஓவரில் 90, விக்ரம்சிங் 25, ஆடெம் சாம்பா 4/8, மார்ஷ் 2/19) 309 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் நாலாவது ஓவரில் 9 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மென் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். 3 சிக்சர் 11 ஃபோருடன் வார்னர் 104 ரன் அடித்தார். ஒரு சிக்ஸ் 9 ஃபோருடன் ஸ்மித் 71 ரன் அடித்தார். 2 சிக்ஸ், 7 ஃபோருடன் லபுசேன் 62 ரன் அடித்தார். 8 சிக்ஸ், 9 ஃபோருடன் மேக்ஸ்வெல் 106 ரன் அடித்தார்.
உலகக் கோப்பைப் போட்டிகளில் 40 பந்தில் சதம் அடித்து மேக்ஸ்வெல் இன்று அதிவேக சதமடித்த சாதனை புரிந்தார். அதில் இரண்டாவது 50 ரன்னை அவர் 13 பந்துகளில் அடித்தார். கடைசி 10 ஓவர்களில் 131 ரன். நெதர்லாந்து அணி பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்களால் அடிக்கப்பட்டனர். அதில் பந்துவீச்சாளர் டி லீட் மிகவும் பாவம். அவரது பந்துவீச்சு விவரம் 10 ஓவர்-115 ரன்-2 விக்கட். நெதர்லாந்து அணியின் தலைவர் ஸ்காட் எட்வர்ட்ஸ் காலின் ஆக்கர்மேன்-ஐ ஏன் 4 ஓவர் மட்டும் போடச்சொன்னர் என்பது புரியாத புதிர்.
இரண்டாவதாக ஆடிய நெதர்லாந்து அணி தோல்வி பயத்தோடு ஆடினர்.. அந்த அணியின் அதிக பட்ச ஸ்கோர் விக்ரம்ஜித் சிங்கின் 25. மற்றாவர்கள் எல்லாம் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 21 ஓவர்களில் நெதர்லாந்து அணி 90 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தாயசத்தில் வென்றது.
கிளன் மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய வெற்றியோடு ஆஸ்திரேலிய அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது. நாளை இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையே பெங்களூருவில் ஆட்டம் நடைபெறௌள்ளது.