
மதுரையிலிருந்து பாதுகாப்பாக தங்க கவசம் பசும்பொன் சென்றது!
மதுரை அண்ணாநகரில், அரசு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தேவரின் முழு உருவ தங்கக் கவசம் பசும்பொன் கிராமத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சமாதியில் உள்ள அவருடைய முழு உருவச் சிலைக்கு, ஆண்டுதோறும் அவருடைய ஜெயந்தி அன்று தங்க முழு உருவக் கவசம் அணிவிக்கப்படும். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், இந்த தங்கக் கவசம் வழங்கப்பட்டது.
இது கடந்த சில வருடங்களாக தேவரின் சிலைக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்படும் தேவருடைய தங்க முழு உருவ கவசம், மதுரை அண்ணா நகரில் உள்ள அரசு வணிக வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப் படுகிறது. இதை, அதிமுக கட்சி பொருளாளர், ஆண்டுதோறும் பெற்று, அதை முத்துராமலிங்க தேவர் வாரிதாரர்களிடம் ஒப்படைப்பார்.
அவ்வாறு ஒப்படைக்கப்படும் தங்க முழு தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரையிலிருந்து பசும்பொன் கிராமத்தில் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவ சிலைக்கு அணிவிக்கப் படுவது வழக்கமாக உள்ளது.
தேவர் ஜெயந்தி முன்னிட்டு, இம்மாதம் 30 -ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோர்கள் தேவர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வழி படுவர். அன்றைய தினம் பசும்பொன்னில் விழாக்கோலம் காணும்.
மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார்கள், மற்றும் பஸ்கள் வேண்களில் பலர் தேவர் சமாதிக்கு சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவர். அன்றைய தினம் அன்னதானம் நடைபெறும்.
இதற்காக, மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பும், போலீசார் ரோந்து பணியும் ஈடுபடுவர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு, தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்தும், பலர் முளைப்பாரி ஊர்வலம், பாலாபிஷேகம் செய்து வழிபடுவர். இது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.