
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
25ஆம் நாள் – இந்தியா vs இங்கிலாந்து
லக்னோ – 29.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (229/9, ரோஹித் ஷர்மா 87, கே.எல். ராகுல் 39, சூர்யகுமார் யாதவ் 49, பும்ரா 16, வில்லி 3/45, வோக்ஸ் 2/33, ரஷீத் 2/35) இங்கிலாந்து அணியை (34.5 ஓவரில் 129, ஜானி பெயர்ஸ்டோ 14, டேவிட் மலான் 16, லிவிங்ஸ்டோன் 27, ஷமி 4/22, பும்ரா 3/32, குல்தீப் 2/24, ஜதேஜா 1/16) 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்திய அணியை மட்டையாடக் கேட்டுக்கொண்டது. இந்திய அணியில் நான்கு வீரர்கள் மட்டுமே தங்கள் பணியை சரிவரச் செய்தனர். ரோஹித் ஷர்மா 101 பந்துகளில் 87 ரன்; கே.எல். ராகுல் 58 பந்துகளில் 39 ரன்; சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 49 ரன்; ஜஸ்பிரீத பும்ரா 25 பந்துகளில் 16 ரன். மற்றாவர்கள் இரட்டை இலக்க ரன்களைக் கூட எட்ட முடியவில்லை. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் மொத்தமாக 5 மெய்டன் ஓவர்கள் வீசினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில் (9 ரன்), கோலி (பூஜ்யம் ரன்), ஷ்ரேயாஸ் (4 ரன்), ஜதேஜா (8 ரன்) இன்று ஜொலிக்கவில்லை. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 229 ரன் எடுத்திருந்தது.
இங்கிலாந்து அணி ஆடத் தொடங்கிய போது அதிர்ச்சி காத்திருந்தது. டேவிட் மலான் (16 ரன்) 5ஆவது ஓவரின் ஐந்தாவது பந்திலும் ஜோ ரூட் (பூஜ்யம் ரன்) அதற்கடுத்த பந்திலும் பும்ரா வீசிய பந்தில் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் (பூஜ்யம் ரன்) எட்டாவது ஓவரிலும் பெயர்ஸ்டோ 10ஆவது ஓவரிலும் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ஜாஸ் பட்லர் (10 ரன்) குல்தீப் யாதவ்வால் கிளீன் போல்டானார். அச்சமயத்தில் இங்கிலாந்தின் ஸ்கோர் 15 ஓவரில் 52/5.
அதன் பின்னர் அவர்கள் 20 ஓவர்கள் தாக்குப் பிடித்தனர்; 77 ரன்கள் அதிகம் சேர்த்தனர். 34.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 129 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவினர். இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் மிகவும் அருமையாகப் பந்துவீசினார்கள்.
இங்கிலாந்துக்கு மற்றொரு தோல்வி, ஆறு ஆட்டங்களில் ஐந்தாவது தோல்வி மற்றும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஏன் இப்படி? என்பதற்கு எளிதான பதில்கள் எதுவும் இங்கிலாந்து அணியிடம் இல்லை. நடப்பு சாம்பியன்களிடமிருந்து இது ஒரு குழப்பமான செயல்திறன். அவர்கள் ஒரு மோசமான அணி இல்லை ஆனால் எப்படியோ எதுவும் கிளிக் ஆகவில்லை.
இன்றைய இன்னிங்ஸ் இடைவேளையின் போது, அவர்கள் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது போல் இருந்தது, ஆனால் இடைவிடாத இந்திய பந்துவீச்சுத் தாக்குதலுக்கு எதிராக அவர்களின் பேட்டிங் நொறுங்கியது. அவர்களில் எட்டு பேர் இரட்டை இலக்கத்தை எட்டினர், ஆனால் லிவிங்ஸ்டோன் (27) மட்டுமே 20 ரன்களைக் கடக்க முடிந்தது.
ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும்.