
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மகரஜோதி விழா இந்த ஆண்டு வரும் நவம்பர் 16 முதல் துவங்க உள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக செங்கோட்டை – புனலூர் வழி சிறப்பு ரயில் வசதி இயக்கவும், செங்கோட்டை ரயில்வே நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, தகவல் மையம், மருத்துவ சேவை மையம், அமைக்கவும் ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, தென்னக ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை ஒவ்வோர் ஆண்டும் இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு எர்ணாகுளத்தில் இருந்து, புனலூர் – செங்கோட்டை – ராஜபாளையம்- தஞ்சாவூர் – மயிலாடுதுறை வழியாக டெல்டா மாவட்டங்களையும், கேரள பகுதிகளையும், இணைத்து சபரிமலை சிறப்பு வண்டி இயக்கப்பட்டது.
வண்டி எண் 06068 : எர்ணாகுளத்தில் இருந்து திங்கள்தோறும் கிளம்பி தாம்பரத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்று சேர்ந்தது.
வண்டி எண் 06067 : தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை தோறும் கிளம்பி புதன்கிழமை எர்ணாகுளம் சென்று சேர்ந்தது. இந்த ரயில்களால் ஐயப்ப பக்தர்கள் பெரும் பயனடைந்தனர்.
டெல்டா பிரதான பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இந்த சிறப்பு வண்டியை பயன்படுத்தி, புனலூர் ரயில் நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து பம்பையை எளிதாக அடையலாம்.மேலும் ஐயப்பன் படைவீடு கோயில்களான குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில், எருமேலிக்கு எளிதில் செல்லலாம்.
மேலும் புனலூர் ரயில் நிலையத்தில் இருந்து நேரடியாக பம்பை செல்வதற்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப் படுகின்றன.
இதனால் இந்த ஆண்டும் எர்ணாகுளம் தாம்பரம் சபரிமலை சிறப்பு ரயில், தினசரி ரயிலாக, புனலூர் – செங்கோட்டை வழியாக இயக்கவும், செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குவதாக அறிவிக்கப்பட்ட அந்தியோதயா சிறப்பு ரயில்களை இயக்கவும் ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக தற்போது புனலூர் ரயில்வே நிலையத்தில் தகவல் மையம் மருத்துவ சேவை உட்பட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதைப் போல் தமிழக கேரள எல்லைப் பகுதியிலுள்ள செங்கோட்டையிலும் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் மிகப்பெரிய அளவில் உள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையிலான ரயில்கள் இயங்குகிறது. திருநெல்வேலி – செங்கோட்டை – சென்னை – செங்கோட்டை – சென்னை- காரைக்குடி வழி செங்கோட்டை தாம்பரம் செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை மதுரை செங்கோட்டை மதுரை குருவாயூர் என பல்வேறு ரயில்கள் செங்கோட்டை வழியாக இயக்கப்படுகிறது.
இதனால் ஐயப்ப பக்தர்கள் இந்த வழித்தடத்தில் அதிக அளவில் பயணிக்கின்றனர். சபரிமலைக்கு பக்தர்களின் வசதி கருதி செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் சிறப்பு தகவல் மையம், மருத்துவ சேவை மையம், குடிநீர் சேவை உட்பட அடிப்படை வசதிகளை செய்து தர பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.