
இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கட்சியினருடன் சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது…
தேசியத்தையும் தெய்வீகத்தையும் தமது இரு கண்களாகக் கருதிய மாமனிதர் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் அவர்கள் மற்றும் தமிழக பாஜக., மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினோம். தேச விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய வீரர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். ஏழை எளிய மக்களுக்காக தமது சொத்துக்களை அனைத்தும் வழங்கிய வள்ளல். அனைத்து சமுதாய மக்களும் ஆலயத்துக்குள் செல்ல, ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்தவர். தென்னகத்தின் போஸ் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் புகழ் போற்றி வணங்குகிறோம்… – என்று குறிப்பிட்டு இருந்தார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி,தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆகியோர் உடன் இருந்தனர் மேலும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அலங்காநல்லூரில்… தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு:
அலங்காநல்லூர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி செயலாளர் சக்கரபாணி தலைமையில் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், ஒன்றியச்
செயலாளர் கண்ணதாசன், ஒன்றியத் தலைவர் திருப்பதி, கல்லணை மூக்கையா, பொருளாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்..
சோழவந்தானில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேவர் ஜெயந்தி விழா:
சோழவந்தான் : மதுரை அருகே சோழவந்தான் பேருந்து நிலையம் முன்பாக உள்ள தேவர் சிலைக்கு, காங்கிரஸ் கமிட்டி சார்பாக முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு, சிறுபான்மை பிரிவு தென் மண்டலத் தலைவர் பாதுஷா தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர் பழனிவேல், முன்னாள் வட்டாரத் தலைவர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்துப்பாண்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில், கனகராஜ் சேகரன் ரவி சங்கரபாண்டி உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.