
RSS அணிவகுப்பு ஊர்வலத்திற்கு தமிழகத்தில் அனுமதி மறுப்பு- நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்-கடும் கண்டனத்திற்கு உரியது என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
1925ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துவக்கப்பட்டது. அதன் நிறுவன நாளும் இந்நாட்டின் வெற்றி திருநாளுமாக கொண்டாடப்படும் விஜயதசமி நாளில் RSS அணிவகுப்பு ஊர்வலம் கடந்த 98ஆண்டுகளாக நாடெங்கிலும் நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சி ஊர்வலம் அல்ல அது. கட்டுப்பாடுள்ள அணிவகுப்பாக அந்த ஊர்வலம் நடைபெறும். தனிநபரை குறிப்பிட்ட வாழ்க, ஒழிக கோஷங்கள் எதுவும் எழுப்பப்படாது. சீருடை அணிந்த தன்னார்வலர்களால் மக்களிடையே கட்டுப்பாடு,தேசபக்தி, ஒற்றுமை, ஒழுங்கு போன்ற நற்சிந்தனையை ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடைபெறும்.
கேரளா, புதுச்சேரி உட்பட எல்லா மாநிலங்களிலும் எந்த நிபந்தனைகளும் இன்றி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியும் அமைதியாக உற்சாகமாக நடைபெற்றது. அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.
எந்த மாநிலத்திலும் இல்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை தமிழகத்தில் இருக்கிறது என தமிழக அரசு கருதுவது திமுக அரசின் ஆளுமை தன்மையில் உள்ள குறைபாடாகத்தான் தெரிகிறது. அதே சமயம் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அரசு தரப்பில் உள்நோக்கத்துடன் இடையூறு செய்யப்பட்டு வருகிறது.
இது ஜனநாயக விரோதமானது. அனுமதி அளிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் தமிழக அரசு அதனை செயல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்பதை காட்டிலும் நீதிமன்றத்தின் கருத்தினை அலட்சியம் செய்யும் நடத்தையாகும். இது ஜனநாயக ஆட்சி முறைக்கு எதிரான சர்வாதிகாரம்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை தடை செய்ய எந்த காரணமும் இருக்க முடியாது. தமிழகத்தில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மாநாடு என அனைத்து அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் தேச ஒருமைப்பாட்டிற்கு தேசியத்திற்கு எதிரான பிரச்சாரங்களுக்கு காவல்துறை அனுமதி அளித்து வேடிக்கை பார்க்கிறது.
தேசபக்தியை கட்டுப்பாட்டை நேர்த்தியாக நடத்தி காட்டும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தாக்கம் திராவிட அரசியல்வாதிகளுக்கு கசக்கத்தான் செய்யும்.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன்னை ரஷ்யாவின் சர்வாதிகாரியாக நினைத்து கொண்டு செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. அவரே தான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என அடிக்கடி கூறியும் வருகிறார். ஆனால் இந்த உலகில் சர்வாதிகாரியாக ஜனநாயகத்தை மதிக்காதவர்கள் கதி என்வனாது என்பதை சரித்திரத்தை பார்த்து அவர் தெளிவுபெறட்டும்.
நீதிமன்றம் உத்தரவுகளை மதித்து ஜனநாயக வழியில் தமிழக அரசு நடக்க வேண்டும் என்று இந்து முன்னனி கேட்டுக் கொள்கிறது.
எனவே தமிழக அரசு உடனடியாக ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதியை காலதாமதமின்றி வழங்கிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.