
மதுரை – பெங்களூரு இடையே, புதிதாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ரயிலை திருநெல்வேலியில் இருந்து மதுரை வழியாக பெங்களூருக்கு இயக்க சாத்தியக் கூறுகள் உள்ளன என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தென் மாவட்ட மக்கள், குறிப்பாக மதுரை – பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை திருநெல்வேலியில் இருந்து இயக்கினால், நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் பெரிதும் பயனடைவார்கள்.
ஏற்கெனவே நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு ஒரு தினசரி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எப்போதும் அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணிப்பதால், காத்திருப்புப் பட்டியல் எப்போதும் 100 , 200க்கு மேலே உள்ளது. மேலும், தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு இயக்கப்படும் விரைவு ரயிலிலும் எப்போதும் காத்திருப்புப் பட்டியல் அதிகளவில் உள்ளது.
தென்மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் பெங்களூரு மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு, கல்வி வணிகம் போன்றவற்றுக்காகவும், வேலை விஷயமாகவும் அடிக்கடி சென்று வருகின்றனர். இதனால் மதுரையிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் ரயிலை, திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சேலம் வழியாக நீடித்து இயக்கலாம். ஏற்கெனவே திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் தொலைவும் திருநெல்வேலியில் இருந்து பெங்களூருக்கு உள்ள தொலைவும் ஒன்று தான் என்பதால் இதை ஒரே நாளில் சென்று வரும் வகையில் இயக்க முடியும்.
மதுரை – பெங்களூர் வந்தே பாரத் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரையில் வந்தே பாரத் ரயிலை பராமரிப்பதற்கு தனி பணிமனை உருவாக்கும் பணிகளும், இந்த ரயில் சீரான வேகத்தில் செல்வதற்கு தண்டவாளம் பராமரிப்பு பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் இப்பணிகள் முடிந்தால், நவம்பர் மத்தியில் மதுரை பெங்களூர் மதுரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போது திருநெல்வேலியில் இருந்து மதுரை வரை ரயில் தண்டவாளங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு, ஏற்கெனவே, சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் 110 கிலோ மீட்டர் வேகம் எடுத்துச் செல்கிறதால், மதுரை திருநெல்வேலி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள அவசியம் இருக்காது. மேலும், திருநெல்வேலியில் வந்தே பாரத் ரயிலை பராமரிக்க தனி பணிமனையும் உள்ளது. இதற்கான பொறியாளர்கள் உட்பட அனைத்து வசதிகளும் திருநெல்வேலியில் உள்ளது.
எனவே, திருநெல்வேலியில் இருந்து பெங்களூருக்கு இந்த ரயிலை இயக்கினால் நிர்வாகச் சிக்கல்கள் எதுவும் இருக்காது. கூடவே பயணிகளும் பெரிதும் பயனடைவர். பகல் நேரத்தில் இந்த ரயில் போய் வருவதால் பயணிகளுக்கு சிறப்பான பாதுகாப்பான பயண வசதியும் கிடைக்கும்.
அதே நேரம், செங்கோட்டை வரை எலக்ட்ரிக் லைன் வந்துவிட்டது. எனவே, அடுத்து வந்தே பாரத் செங்கோட்டைக்கு வருமா என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றன. செங்கோட்டையில் இருந்து மதுரை வரை முக்கிய நகரங்களாக தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி உள்ளது. இந்த வழித்தடத்தில் சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளது. ஆன்மீகத் தலங்களும் அதிகம். வர்த்தக ஸ்தலங்களும் அதிகம். குற்றாலம் மிக முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது.
பெரும்பாலான பயணிகள் செங்கோட்டை வந்து சபரிமலை செல்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் ஐயப்பனின் படை வீடுகள் செங்கோட்டையைச் சுற்றி அருகருகில் உள்ளன. அச்சங்கோவில் அரசன் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில், ஆரியங்காவு ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில், குளத்துப்புழா பாலகன் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் ஆகியவற்றில் தரிசனம் செய்துவிட்டு, பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர்.
எனவே, மதுரையில் இருந்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி என முக்கிய நிறுத்தங்கள் மட்டும் கொண்டு, வந்தேபாரத் ரயில் செங்கோட்டை – பெங்களூருக்கு இயக்கப்படலாம். மதுரை – செங்கோட்டை இரண்டு மணி நேர பயணம் சாத்தியமாகும். பராமரிப்பு மற்றும் தண்ணீர் வசதி, செங்கோட்டையில் சாத்தியம் என்பதால், இந்தப் பகுதியும் வளர்ச்சியடையும்.