ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீதான இறக்குமதி வரியைக் குறைத்திருப்பதாக தன்னிடம் கூறிய இந்திய பிரதமர் மோடி, அதை செயல்படுத்த தவறி விட்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் புலம்பியுள்ளார்.
டிரம்ப் தேர்தலில் போட்டியிட்ட போதே, தங்கள் நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்பு அளிப்பதற்காக, வெளிநாட்டில் இருந்து இங்கே பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்துவதற்காக, விசா நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக கூறியிருந்தார். அவர் வெற்றி பெற்று வந்ததும், அண்மைக் காலத்தில் ஹெச் 1பி விசா நடைமுறைகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
இப்போது ஹெச் 1பி விசா பெறுவது தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் பெரும் சிக்கலான ஒன்றாக மாறிப் போயுள்ளது. அப்படியே ஒருவர் இந்த விசாவைப் பெற்றாலும், விசாவின் கால அளவான முழுமையான 3 ஆண்டுகளை அங்கே கழிக்கவும் இயலாது. இதனால் இந்தியர்கள் மட்டுமல்லாது, இந்திய ஐ.டி. நிறுவனத்தினரும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஹெச் 1பி விசாவே கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும் போது, கிரீன் கார்டு பெறுவது என்பதும் இயலாததாகி வருகிறது.
எந்தப் பணிக்காக விசா பெறுகிறார்களோ அது முடிந்ததும் நாடு திரும்பிவிட வேண்டும். ஹெச் 1பி விசா குறைந்த கால அளவு பணிகளுக்கே வழங்கப் படுவதால், கிரீன் கார்டு பெறுவது இயலாததாகி விடும். இன்னும் பல சிக்கல்களைச் சந்தித்து வரும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்பில் பிரதமர் மோடியிடம் கொள்கை அளவில் சில பரிந்துரைகளைச் சொல்லி வந்தனர்.
தனது அமெரிக்க பயணத்தின் போதும், தூதரக அளவிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தி இந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சிகள் மோடியால் மேற்கொள்ளப் பட்டது. ஆனால் டிரம்ப் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து வருகிறார். அமெரிக்கர்களுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்குமே அமெரிக்காவில் வாய்ப்பு என்ற கொள்கையில் செயல்பட்டு வரும் டிரம்புக்கு எதிர் பதில் கொடுக்கும் வகையில் இப்போது மோடி ட்ரம்புக்கு எதிராக ஒரு ட்ரம்ப் கார்டை பயன்படுத்தியுள்ளார்.
மேக் இன் இந்தியா என்ற கொள்கை அடிப்படையில் இந்திய நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வரும் மோடி, அமெரிக்க நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் இறக்குமதியில் வழக்கமான வரிவிதிப்பில் மாற்றம் செய்யவில்லை. இருப்பினும், அமெரிக்க அதிபர் கேட்டுக் கொண்ட போது, அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஆனால், மோடி தன்னிடம் சொன்ன வாக்கைக் காப்பாற்றவில்லை என்று டிரம்ப் புலம்பும் அளவுக்கு இந்த விவகாரம் சென்றுள்ளது.
வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் அனைத்து மாநில ஆளுனர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இருந்து ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய வேண்டுமானால் 100 சதவீதம் இறக்குமதி வரியை செலுத்த வேண்டியுள்ளது.
நான் பிரமாதமான மனிதராக நினைக்கும் இந்திய பிரதமர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த இறக்குமதி வரியை 50 சதவீதமாகக் குறைத்து விட்டோம் என்று தெரிவித்தார். நானும் சரி என்றேன். ஆனால், இதுவரை எதுவுமே நடக்கவில்லை. நமக்கு எதுவுமே கிடைக்கவில்லை. நமக்கு 50 சதவீதம் சலுகை செய்வதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது சலுகையே அல்ல… என்று கூறினார் டிரம்ப்
மேலும், பிரதமர் மோடி பேசுவது போல், குரலில் ஏற்ற இறக்கத்துடன் பேசி, அவர் அழகான மனிதர். இறக்குமதி வரியை 75 சதவீதமாக குறைத்தோம், இப்போது மேலும் குறைத்து 50 சதவீதமாக்கி விட்டோம் என்று என்னிடம் கூறினார்.
நான் என்ன சொல்வது? இதைக் கேட்டு நான் பரவசமாகி இருப்பேன் என நீங்கள் (ஆளுநர்கள்) எதிர்பார்க்கிறீர்களா? நாம் இதைப்போல் பல விவகாரங்களை சந்தித்து வருகிறோம்.
இந்தியாவில் இருக்கும் இருசக்கர வாகன நிறுவனங்கள் நமது நாட்டில் ஏராளமான வாகனங்களை விற்று வருகின்றன. இதில் நமக்கு கிடைப்பது பூஜ்ஜியமே. ஆனால், அவர்களுக்கு முன்னர் 100 சதவீதம் இறக்குமதி வரியாகக் கிடைத்தது. பின்னர், 75 சதவீதமாகி, தற்போது 50 சதவீதமாக உள்ளது… ஆனால் இது நியாயமானதல்ல என்று புலம்பித் தள்ளினார் டிரம்ப்.
இப்படி இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான இறக்குமதி வரிகள் தொடர்பில், மோடியை நேரடியாகக் குற்றம் சாட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவது, இந்த மாதத்தில் இன்று இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சற்று மெத்தனமாக இருந்தாலே புலம்பித் தள்ளும் நிலைக்கு டிரம் செல்வது மோடியின் பலத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.