ஜானி’ படத்தில் ஸ்ரீதேவி தன் காதலை ரஜினியிடம் சொல்லும் காட்சியில் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பார்த்து வியந்துபோய் ‘அந்தப் பொண்ணோட நடிப்போட என்னால போட்டிபோட முடியலை’ என்று ரஜினியே மாய்ந்து மாய்ந்து பேசினாராமே? என்று இயக்குநர் மகேந்திரனிடம் கேட்டதற்கு, ஜானியில் நடிக்கும்போது ஸ்ரீதேவிக்கு 20 வயதுகூட ஆகவில்லை. ஆனால், அந்த வயதுக்கு உரிய ‘எப்ப ஷூட் முடியும்’ என்கிற படபடப்பில்லாமல், விடிய விடிய ஷூட் என்றாலும் அமைதியாக நடித்துக்கொண்டிருப்பார். ரஜினியிடம் , ஸ்ரீதேவி தன் காதலை சொல்கிற சீனையும் ஒரு நள்ளிரவில்தான் எடுத்தேன். நாள் முழுக்க நடித்த களைப்பே அவர் முகத்தில் தெரியாது.
ஸ்ரீதேவி தன் காதலை ரஜினியிடம் சொல்லிவிட்டு, ‘நான் அப்படித்தான்’ என்று கண்களைத் துடைப்பார். அந்த சீனின் ரிகர்சலை குளோசப்பில் பார்த்த கேமராமேன் சட்டென்று ஒரு கமென்ட் பண்ணிவிட்டார். நிச்சயம் அந்த கமென்ட் அவர் காதிலும் விழுந்திருக்கும். அவ்வளவு நெருக்கத்தில்தான் கேமரா இருந்தது. இந்த கமென்ட்டுக்குப் பிறகு இந்தப் பெண் இயல்பாக மறுபடியும் அந்த சீனை நடிக்குமா என்று நான் பயந்தேன். ஆனால், அந்த கேலியை காதில் வாங்கியதாகவே காட்டிக்கொள்ளவில்லை அந்தப் பெண்.
இந்த காதல் சீனை ரஷ் பார்த்த ரஜினி என்னிடம், ‘ஸ்ரீதேவி இந்த சீன்ல ஸ்கோர் பண்ணிட்டாங்க’ என்று புலம்பினார். நான்தான் அர்ச்சனா கதாபாத்திரத்தின் கனத்தை எடுத்துசொல்லி அவரை சமாதானப்படுத்தினேன்
என்றார்.



