
கல்வி நிலையங்களில் அரசியல் பேச்சு! ஐஐடி பாம்பே.,யை மற்றவை பின்பற்ற வேண்டும்!
கல்வி நிலையங்களில் அரசியல் பேச்சு என்ற விவகாரத்தில், ஐ.ஐ.டி பாம்பேயின் புதிய கட்டுப்பாடுகள் இப்போது அமலுக்கு வந்திருக்கின்றன.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அரசியல் பேசும் இடங்களாகத் திகழ்வதை, கல்வியாளர்கள் பெரும்பாலும் கண்டிக்கின்றனர். குறிப்பாக, தேசவிரோதக் கருத்துகளைப் பரப்பும் இடங்களாக, சில அமைப்புகளின் சார்பாகப் பணி செய்யும் பேராசிரியர்கள் மாணவர் மன்றங்களை, மேடைகளை, வகுப்புகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஐ.ஐ.டி பாம்பே உள்ளிட்ட பல கல்வி நிலையங்களில் தேச விரோத பேச்சாளர்கள் பேசுவதும், அதைத் தொடர்ந்து தேசிய அமைப்புகள் போராட்டம் நடத்துவதும் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடைமுறையாக மாறியிருக்கிறது.
அண்மையில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பொதுவெளியில் பேசக் கூடிய சிலரை பேச அழைத்திருக்கிறார்கள் ஜிண்டால் பல்கலைக் கழகத்தில்!தேச விரோத கூட்டம், மாணவர்கள் மத்தியில் பேசிய இந்தப் பயங்கரவாத ஆதரவு ‘பேச்சு’, போராட்டத்தில் முடிந்தது!
அதே புரபசரை ஐ.ஐ.டி பாம்பேயில் பேச தேசவிரோத கூட்டம் பேச அழைக்க, அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதை அடுத்து, ஐ.ஐ.டி பாம்பே நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது.
அத்தோடு, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக புதிய விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது நிர்வாகம்: ‘கல்வி சம்பந்தமாகப் பேச எந்தப் பிரச்சினையும் கிடையாது. கல்வி சாராத பிற – அரசியல் – கூட்டங்களுக்கு முதலில் நிர்வாக குழுவிடம் அனுமதி பெற வேண்டும்’. மேலும், இனி ஐ.ஐ.டி பாம்பேக்குள் போராட்டம் நடத்த விரும்பினால், காவல்துறையின் அனுமதி பெற வேண்டும்! – என்று சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனை பிற கல்வி நிலையங்களும் பின்பற்ற வேண்டும் என்பது கல்வியாளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.