
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி இரண்டாவது அரையிறுதிப்போட்டி
தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா,
கொல்கொத்தா – 16.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தென் ஆப்பிரிக்க அணியை (49.4 ஓவர்களில் 212, டேவிட் மில்லர் 101, கிளாசன் 47, கோயட்சி 19, மிட்சல் ஸ்டார்க் 3/34, பேட் கம்மின்ஸ் 3/51, ஹேசல்வுட் 2/12, ட்ராவிஸ் ஹெட் 2/21) ஆஸ்திரேலிய அணி (47.2 ஓவர்களில் 215/7, ட்ராவிஸ் ஹெட் 62, ஸ்மித் 30, டேவிட் வார்னர் 29, ஜோஷ் இங்கிலிஷ் 28, கோயட்சி 2/47, ஷம்சி 2/42, கேசவ மகராஜ் 1/24, மர்க்ரம் 1/23, ரபாடா 1/41) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் மட்டையாடத்தீர்மானித்தது. பவுமா (பூஜ்யம் ரன்), க்விண்டன் டி காக் (3 ரன்), டுஸ்ஸன் (6 ரன்), மர்க்ரம் (10 ரன்) என வரிசையாக தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்ததால் அந்த அணி 11ஆவது ஓவர் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 24 ரன் எடுத்திருந்தது. விக்கட்டுகள் விழுந்தது கூடப் பரவாயில்லை என்றால் அதிரடி ஆட்டக்காரர்களால் இன்று 10 ஓவர் வரை 18 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 52 பந்துகளுக்குப் பின்னரே முதல் ஃபோர் அடிக்கப்பட்டது. இதன் பின்னர் டேவிட் மில்லர் ஆடவந்து சதம் அடித்தார். தொடக்கத்தில் குறைவாக ரன் அடித்துவிட்டு பின்னர் அதே அணியின் வீரர் ஒருவர் சதம் அடிப்பது ஒருநாள் போட்டிகளில் இது நான்காவது முறை.
- 9/4, கபில்தேவ் 175*, இந்தியா vs ஜிம்பாபே (1983 உலகக் கோப்பைப் போட்டி)
- 19/4, நாசிர் ஹுசைன் 10, வங்கதேசம் பாகிஸ்தான், டிசம்பர் 2011
- 24/4, நீல் மெக்கல்லம் 121*, ஸ்காட்லாந்து அயர்லாந்து, ஏப்ரல் 2009
- 24/4, டேவிட் மில்லர் 101, தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா (2023 உலகக் கோப்பை)
இறுதியில் 49.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 212 எடுத்து ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடவந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் முதல் 10 ஓவர்களில் வெற்றியை உறுதி செய்தனர். முதல் 10 ஓவர்களில் அந்த அணி 2 விக்கட் இழப்பிற்கு 74 ரன் கள் எடுத்தது. இடையில் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சாளர்கள் சில விக்கட்டுகளை எடுத்தபோதும் ஆட்டம் ஆஸ்திரேலிய அணியின் கைகளில் இருந்து நழுவாமல் அந்த அணியின் வீரர்கள் பார்த்துக்கொண்டனர். தென் ஆப்பிரிக்க அணியால் ஆட்டத்தை 48ஆவது ஓவர் வரை இழுக்க முடிந்ததே தவிர தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. 2 விக்கட்டுகள் மற்றும் 62 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இனி ஆஸ்திரேலிய அணி இந்திய அணியுடன் இந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் நவம்பர் 19ஆம் தேதி குஜராத்தில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் விளையாடும். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 8ஆவது முறை உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்க அணியை மூன்றாவது முறை அரையிறுதியில் தோற்கடித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி இதுவரை ஐந்து முறை அரையிறுதி வரை வந்து (1992, 1999, 207, 2015, 2019) தோல்வியைச் சந்தித்திருக்கிறது.