spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாதென்காசி, சிவகாசி, பராக்கிரம பாண்டியன்… என காசி தமிழ்ச் சங்கமம்-2ல் பிரதமர் மோடியின் சிறப்புரை!

தென்காசி, சிவகாசி, பராக்கிரம பாண்டியன்… என காசி தமிழ்ச் சங்கமம்-2ல் பிரதமர் மோடியின் சிறப்புரை!

- Advertisement -
kasi tamil sangam 2

காசி தமிழ்ச் சங்கமம் -02ல் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய சிறப்புரை
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

மேடையில் வீற்றிருக்கும் உத்திர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களே, காசி மற்றும் தமிழ்நாட்டின் சான்றோர்களே, தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வந்திருக்கும் சகோதர சகோதரிகளே, பிற பெருமக்களே, பெரியோர்களே-தாய்மார்களே,

நீங்கள் அனைவரும் இத்தனை பெரிய எண்ணிக்கையில் பலநூறு கிலோமீட்டர் பயணித்து காசிக்கு வந்திருக்கிறீர்கள்.   காசியிலே, நீங்கள் அனைவரும் விருந்தினர்கள் என்பதையெல்லாம் தாண்டி, என்னுடைய குடும்ப உறவுகள் என்ற முறையிலே இங்கே வந்திருக்கிறீர்கள்.  உங்கள் அனைவரையும் நான் காசி தமிழ் சங்கமத்திலே வாய் நிறைய, மனம் நிறைய வரவேற்கிறேன்.


என் குடும்பச் சொந்தங்களே,

தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வருவது என்பதன் பொருள், மகாதேவரின் ஒரு வீட்டிலிருந்து அவருடைய மற்றொரு வீட்டிற்கு வருவது என்பதாகும்.  

தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வருவது என்பதன் பொருள், மீனாட்சி அம்மை கோலோச்சும் மதுரையம்பதிலிருந்து இங்கே விசாலாட்சி அம்மை கொலுவீற்றிருக்கும் காசிக்கு வருவதே ஆகும்.

ஆகையினாலே, தமிழ்நாடுவாசிகளுக்கும் காசிவாசிகளுக்கும் இடையே, இதயத்திலே பூரிக்கின்ற அன்பு, உறவு என்பது உள்ளபடியே அலாதியானது, அபூர்வமானது.

உங்களுக்கு புரியப்படும் சேவையில் காசிவாழ் மக்கள் எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு.

நீங்கள் இங்கிருந்து விடை பெற்றுச் செல்லும் வேளையிலே, பாபா விஸ்வநாதருடைய நல்லாசிகளுடன் கூடவே, காசியின் சுகந்தத்தையும், காசியின் கலாச்சாரத்தையும், காசிதரும் கனிவான நினைவுகளையும் கண்டிப்பாகக் கொண்டு செல்வீர்கள்.


என் குடும்ப உறவுகளே,

இன்று இங்கே கன்னியாகுமரி-வாராணசி தமிழ் சங்கமம் ரயிலுக்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டுத் தொடங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் திருக்குறள், மணிமேகலை மற்றும் பல தமிழ் நூல்கள், பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, இவற்றை அர்ப்பணிக்கும் பெரும்பேறும் கிடைத்திருக்கிறது.

காசியிலே மாணவராகக் கல்வி பயின்ற மகாகவி சுப்பிரமணிய பாரதி என்ன எழுதியிருக்கிறார்  தெரியுமா –

காசி நகர் புலவர் பேசும் உரைதாம், காஞ்சியில் கேட்பதற்கு ஓர் கருவி செய்வோம்.

அவர் கூற விரும்பியது என்ன தெரியுமா?  காசியிலே புரியப்படும் மந்திர உச்சாடனங்கள் எல்லாம், தமிழ்நாட்டின் காஞ்சி மாநகரிலே கேட்கப்படக்கூடிய ஒரு அமைப்பு, ஒரு கருவி ஏற்படுத்தப்படுமானால், எத்தனை அருமையாக இருக்கும் என்பதே அவருடைய தொலைநோக்காக இருந்தது.   மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் நல்விருப்பம் இன்று நிறைவேறி வருகிறது.  காசி தமிழ் சங்கமத்தின் குரல் தேசமெங்கிலும், உலமெங்கிலும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

இந்த அருமையான ஏற்பாட்டினைச் செய்தமைக்காக, அனைத்துத் தொடர்புடைய அமைச்சகங்கள், உத்திர பிரதேச அரசு, தமிழ்நாட்டின் என்னுடைய அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


என் குடும்ப உறுப்பினர்களே,

கடந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் தொடங்கப்பட்ட பிறகிலிருந்தே, இந்த யாத்திரையோடு வெகு சில நாட்களிலேயே இலட்சக்கணக்கான பேர்கள் தங்களை இணைத்துக் கொண்டே வருகின்றார்கள்.

பல்வேறு மடங்களின் குருமார்கள், மாணவர்கள், அனைத்துக் கலைஞர்கள், இலக்கியகர்த்தாக்கள், கைவினைஞர்கள், பேராசிரியர்கள் என, பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள், பரஸ்பர உரையாடலிலும், ஊடாடலிலும் ஈடுபட, இந்தச் சங்கமம்  ஒரு வளமான தளமைத்துக் கொடுத்திருக்கிறது.

இந்தச் சங்கமத்தை ஒரு வெற்றிச் சங்கமமாக ஆக்க, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமும், மதராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கின்றன.

மதராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகமானது, பனாரஸின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தையும் இணையவழியிலே கற்பிக்கும் பொருட்டு, வித்யாசக்தி முன்னெடுப்பைத் தொடங்கியிருக்கிறது.

காசி-தமிழ்நாட்டிற்கு இடையேயான உறவுப்பாலம் என்பது எத்தனை உணர்வுபூர்வமானது, எத்தனை ஆக்கப்பூர்வமானதும் கூட என்பதற்கு ஓராண்டிற்கு உள்ளாக அரங்கேறிய அனைத்துச் செயல்பாடுகளும் சான்றாக விளங்குகின்றது.


அன்புநிறை என் குடும்பச் சொந்தங்களே,

காசி தமிழ் சங்கமம் என்பது இடையறாத, தடையிலாத ஒரு பிரவாகம், இது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வினுக்குத் தொடர்ந்து வலுகூட்டி வருகிறது.

இந்த எண்ணத்தை அடியொற்றியே சில காலம் முன்பாக காசியிலே, கங்கா-புஷ்கராலு உற்சவம், அதாவது காசி-தெலுகு சங்கமும் நடந்தேறியது.

குஜராத்திலே நாம் சௌராஷ்டிர-தமிழ் சங்கமத்தை வெற்றிகரமாக அரங்கேற்றினோம்.

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, நமது ஆளுநர் மாளிகைகளும் கூட பெரிய அளவிலே முன்னெடுப்பைச் செய்திருக்கின்றன.

இப்போதெல்லாம் ஆளுநர் மாளிகைகளில் பிற மாநிலங்களின் நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது, பிற மாநில மக்களை அழைத்து, சிறப்பான ஏற்பாடுகளும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் இந்த உணர்வு, நாம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நுழையும் வேளையிலே கூட பளிச்சிட்டது.   புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் புனிதமான செங்கோல் ஸ்தாபிக்கப்பட்டது.   புனிதமிகு ஆதீனங்களின் வழிகாட்டுலின் பேரில், இந்தச் செங்கோல் தான் 1947ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக அமைந்தது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வின் இந்தப் பெருக்குத் தான், இன்று நமது தேசத்தின் ஆன்மாவிற்கு நீரூற்றி, உரம் சேர்த்து வருகின்றது.


என் பிரியமான குடும்ப பந்தங்களே,

பாரத நாட்டவர்களான நாம், ஒன்றானவர்கள் என்ற அதே வேளையில், பேச்சு வழக்குகள், மொழிகள், ஆடையணிகள், உணவுப் பழக்கங்கள், இருப்பிட அமைப்புகள் என, பன்முகத்தன்மை பல நிறைந்தவர்கள்.

பாரதத்தின் இந்தப் பன்முகத்தன்மை வாசம் செய்து வளம் கொழிக்கும் ஆன்மீகப் பெருஞ்சுடரைத் தான், நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி என்று அழகு தமிழ் மொழியிலே போற்றிப் பேசுவார்கள்.

இது பாண்டிய அரசன் பராக்கிரம பாண்டியனின் வாக்காகும்.

அதாவது பாரத நாட்டின் அனைத்து நீரும் புனிதமான கங்கையே, பாரத நாட்டின் நிலப்பரப்பு அனைத்தும் பவித்திரமான காசிப்பெரும்பதியே.

வடக்கிலே கொடூரமான படையெடுப்பாளர்களால் நமது நம்பிக்கையின் மையங்கள் மீது, காசியின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட வேளையிலே, அரசன் பராக்கிரம பாண்டியன், தென்காசி மற்றும் சிவகாசியிலே இந்த வாக்கித்தை உரைத்து, காசினியில் காசியினை அழிக்க முடியாது என்ற உணர்வோடு ஆலயங்களை நிர்மாணம் செய்தான்.

உலகின் எந்த நாகரீகத்தை வேண்டுமானாலும் நீங்கள் பாருங்கள், பன்முகத்தன்மை மற்றும் ஆன்மீகம் – இவற்றின் இத்தனை இயல்பான, உன்னதமான வடிவத்தை உங்களால் வேறு எங்குமே காண இயலாது.

இப்போது தான் ஜி 20 உச்சிமாநாட்டின் போது கூட, பாரதத்தின் இந்தப் பன்முகத்தன்மையக் கண்டு உலகமே வியந்து போனது, மலைப்பில் ஆழ்ந்தது.


எனதருமை குடும்ப உறவுகளே,

உலகின் பிற நாடுகளில் தேசம் என்பது அரசியல்ரீதியான புரிதலோடு அணுகப்பட்டு வந்திருக்கிறது.  ஆனால் பாரதம், ஒரு தேசம் என்ற வகையிலே, ஆன்மீக நம்பிக்கையை ஆணிவேராகக் கொண்டு அமைந்து வந்துள்ளது.

ஆதி சங்கரர், இராமானுஜாச்சாரியார் போன்ற புனிதர்கள் தாம் பாரதத்தை ஒருங்கிணைத்தவர்கள்,  இவர்கள் எல்லாம் தங்கள் யாத்திரைகளின் போது பாரதத்தின் தேசிய விழிப்பினை, தேசிய ஆன்மாவை, தேசியத்தைத் தட்டி எழுப்பினார்கள்.

தமிழ்நாட்டின் ஆதீனத் துறவிகளும் கூட பல நூற்றாண்டுக்காலமாக, காசி போன்ற சிவபதிகளுக்குப் புனிதப் பயணங்களை மேற்கொண்டு வந்திருக்கின்றார்கள்.

திருப்பணந்தாள் ஆதீனத்தைக் காசியிலே குமரகுருபர ஸ்வாமிகள் நிறுவினார்.  இன்றும் கூட, திருப்பணந்தாள் ஆதீனகர்த்தர்கள் தங்களது பெயருக்கு முன்பாக, காசிவாசி என்று எழுதுகிறார்கள்.

இதைப் போலவே, தமிழின் ஆன்மீக நூல்களிலே, பாடல் பெற்ற தலம் எனும் போது, இவற்றை தரிசனம் செய்யும் மனிதர், திருக்கேதாரம் முதல் திருநெல்வேலி வரை யாத்திரை மேற்கொண்டவராகிறார்.

இந்த யாத்திரைகள்-புனிதப்பயணங்கள் வாயிலாக, பல்லாயிரம் ஆண்டுக்காலமாக, பாரதம் ஒரு தேசம் என்ற வகையில், நீடித்து, அமரத்துவம் பெற்றதாக விளங்கி வந்திருக்கிறது.


காசி தமிழ் சங்கமத்தின் வாயிலாக தங்களுடைய இந்தப் பண்டைய பாரம்பரியம் குறித்து தேசத்தின் இளைஞர்களிடத்திலே உற்சாகம் அதிகரித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து அதிக எண்ணிக்கையில் மக்கள், அங்கிருக்கும் இளைஞர்கள் காசிக்கு வருகிறார்கள்.  இங்கிருந்து பிரயாகை, அயோத்தி என பிற புனித இடங்களுக்கும் சென்று வருகிறார்கள்.

காசி தமிழ் சங்கமத்திற்கு வரும் மக்கள் அயோத்திக்குப் புனித யாத்திரை மேற்கொள்ளவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மகாதேவரோடு சேர்த்து ராமேஸ்வரத்தை ஸ்தாபித்த பகவான் ஸ்ரீ இராமனையும் தரிசிக்கும் பெரும்பேறு அலாதியானது, அற்புதமானது.


என் நெஞ்சம்நிறை குடும்ப பந்தங்களே,

நம் நாட்டிலே ஒன்று கூறப்படுவதுண்டு –

जानें बिनु होइ परतीती। बिनु परतीति होइ नहि प्रीती॥

அதாவது, அறிந்து கொள்வதால் நம்பிக்கை அதிகரிக்கிறது, நம்பிக்கை அதிகரிப்பதால் அன்பு அதிகரிக்கிறது, என்பார்கள்.

அந்த வகையிலே, நாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர், ஒருவர் மற்றவரது பாரம்பரியங்களைப் பற்றியும், நம்முடைய தொன்மையான மரபுகள் குறித்தும் தெரிந்து கொள்வது முக்கியமானது.

தென்னகத்திலும், வடநிலத்திலும், காசி மற்றும் மதுரை என்ற எடுத்துக்காட்டுகள் நம் கண் முன்னே இருக்கின்றன.   இரண்டுமே மகத்தான, மகோன்னதமான ஆலய நகரங்கள், இரண்டுமே மிகச் சிறப்பான புனிதயாத்திரைத் தீர்த்தங்கள்.   மதுரையம்பதி வைகையாற்றின் கரையினிலே அமைந்திருக்கிறது என்றால், காசியோ கங்கை அன்னையின் மடியினிலே.

நாம் இந்த மரபினை அறிந்து கொள்ளும் போது, நமது உறவுகளின் ஆழத்தை நம்மால் நன்றாக உணர முடியும்.


என் நெஞ்சம்நிறை குடும்பச் சொந்தங்களே,

எனக்கு நம்பிக்கை இருக்கிறது, காசி தமிழ் சங்கமத்தின் இந்தக் கூடல், இதே போன்று நமது மரபுகள்-பாரம்பரியங்களுக்கு வலுசேர்த்துக் கொண்டே இருக்கும், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வினுக்கு மேலும் வளம் சேர்த்துக் கொண்டே இருக்கும்.

உங்கள் அனைவரின் காசிவாசம் இன்பமானதாக இருக்கட்டும், இந்த நல்விருப்பத்தோடு நான் என் உரையை நிறைவு செய்கிறேன்.   உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள்.

முழுமையான வீடியோ: (டிடி தமிழ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe