சீனாவுக்கு ஆதரவாகவும், நம் நாட்டுக்கு எதிராகவும் பணம் பெற்றுக்கொண்டு செய்திகளை வலியத் திணித்து பிரசார நோக்கில் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், ‘நியூஸ் கிளிக்’ இணைய செய்தி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் ‘அப்ரூவர்’ ஆக மாறத் தயாராக உள்ளதாக மனு கொடுத்திருக்கிறார்.
புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ‘நியூஸ் கிளிக்’ இணைய செய்தி நிறுவனம், நம் அண்டை நாடான சீனாவுக்கு ஆதரவாக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. சீன ஆதரவு மட்டுமல்லாது, நம் நாட்டுக்கு எதிராகவும் செய்திகள் வலியக் கட்டமைத்து வெளியிடப் பட்டன. இந்தச் செயல்களின் பின்னணியில், இதற்காக வெளிநாட்டில் இருந்து பெருந்தொகை பெறப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக புது தில்லி போலீசின் சிறப்புப் பிரிவு விசாரித்து வந்தது. இதன் பின் கடந்த அக்.3ல் இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் உட்பட, 88 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில், 300க்கும் மேற்பட்ட மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுவரை, 46 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில், நியூஸ் கிளிக் நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான பிரபிர் புர்கயஸ்தா, மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது கடுமையான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் அப்ரூவர் ஆகத் தயாராக உள்ளதாகக் கூறி, அதற்கு அனுமதி கேட்டு அமித் சக்கரவர்த்தி, புது தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதை அடுத்து, அவரது தரப்பிலான வாதத்தை, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்யுமாறு, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.