spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாலால் கிஷன் அத்வானிக்கு ‘பாரதரத்னா’: பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து!

லால் கிஷன் அத்வானிக்கு ‘பாரதரத்னா’: பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து!

- Advertisement -
bharath ratna for advaniji

பாஜக., மூத்த தலைவர் லால் கிஷன் அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு தலைவர்கள் பலரும் வாழ்த்தும் பாராட்டும்  தெரிவித்து வருகின்றனர்.  பிரிக்கப்படாத அன்றைய இந்தியாவில் (தற்போது பாகிஸ்தானில் உள்ள) லாகூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் லால் கிஷன் அத்வானி. அவர் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை குறித்த வரலாற்றையும் புத்தகமாக எழுதி இருக்கிறார். 

பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவர் லால் கிஷன் அத்வானி,. தமது 14ஆவது வயதில் ஆர்எஸ்எஸ்., இயக்கத்தில் சேர்ந்து சமூகப் பணியின் தன்னை இணைத்துக் கொண்டார்.  பின்னாளில், ஜன சங்கம் கட்சி உருவான போது, அதில் தன்னை இணைத்துக் கொண்டு, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக மிக இளம் வயதிலேயே துடிப்புடன் செயலாற்றினார். அப்போதே, அத்வானி, வாஜ்பாய் இருவரும் ஜனசங்கத்தின் மிக முக்கியத் தலைவர்களாக அடையாளம் காணப்பட்டார்கள். 

இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்தபோது வாஜ்பாயுடன் அத்வானியும் கைதானார். அதன் பின்னர்  நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் மத்திய  அமைச்சராகவும் பொறுப்பேற்றார். 

ஜனசங்கம் கட்சி கலைக்கப்பட்டு, அது பின்னாளில் பாரதிய ஜனதா கட்சியாக 1980இல் உருவான போது, கட்சியின் உருவாக்கத்தில் வாஜ்பாய், அத்வானி இருவரும் முக்கியப் புள்ளிகளாக இருந்தார்கள். அதன் மூலம் தேர்தல் அரசியலில் துடிப்புடன் ஈடுபட்டார்கள். அடுத்த சில வருடங்களில்  அயோத்தி ராமர் கோவில் விவகாரம் பெரிதான போது, இந்து அமைப்புகள் மட்டுமே கையாண்டு கொண்டிருந்த ராமர் கோயில் பிரச்னையை, பாரதிய ஜனதாக் கட்சியும் கையில் எடுத்துக் கொண்டு, அரசியல் ஆதரவு கொடுத்தது. காரணம், ராமர் கோயில் விவகாரத்தை மத ரீதியான அரசியலாக்கி காங்கிரஸும் மற்ற கட்சிகளும் ஹிந்துக்களுக்கு துரோகம் செய்தன என்ற நிலை ஏற்பட்டதால் என்று அதற்கு பாஜக., விளக்கம் அளித்தது.  

அதைத் தொடர்ந்து, ராமருக்காக சிலா யாத்திரைகள் நடைபெற்றன. இவற்றில் ரத யாத்திரையை மேற்கொண்டு, ரத யாத்திரை நாயகன் என்ற பெயரையும் பெற்றார் லால்கிஷன் அத்வானி. அதன் மூலம், இவரது பெயர் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவலாகச் சென்று சேர்ந்தது. ராமர் கோயில்  இயக்கம் வெகுஜன இயக்கமாக மாறியது. அதன் விளைவாக, நாடாளுமன்றத் தேர்தல்களிலும், சில சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக.,வுக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள். 

லால்கிஷன் அத்வானி, வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராகவும், பின்னாளில் 2002 – 2004 கால கட்டத்தில் துணை பிரதமராகவும் பணியாற்றினார். பின்னர் 2004 தேர்தலில்  உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து வாஜ்பாய் ஒதுங்கிக் கொள்ள, அத்வானியே பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு களம் கண்டார். ஆனால் அதில் பாஜக., தேவைப்படும் எண்ணிக்கையில் வெற்றிபெறாமல் போனது. அதன் பின் வயதான காரணத்தாலும், கட்சி விதிகளின் படியும், தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார் அத்வானி. 

பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தன்னால் அடையாளம் காட்டப்பட்ட  இளையவர்களான நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரை ஆதரித்து விட்டு, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அத்வானி, முக்கியமான கட்சி நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் மட்டும் தலைகாட்டி வந்தார். தற்போது 97 வயதாகும் அத்வானி, தில்லியில் உள்ள தனது வீட்டில்  ஓய்வெடுத்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் ப்ராணப்பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு முக்கியஸ்தராக அழைக்கப்பட்டிருந்த போதும்,  முதுமை காரணமாகவும் உடல் தளர்ச்சி காரணமாகவும் அவரால் வெளியில் வர இயலாமல் போனது.  அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை! 

இந்நிலையில் அத்வானியின் சேவையைப் போற்றும் விதமாகவும், அவருக்கு  உரிய மரியாதையை அளிக்கும் வகையிலும், மத்திய அரசு சனிக்கிழமை இன்று, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. 

நாட்டின் மிக உயரிய விருதை அத்வானி பெற்றிருப்பது பாஜக., மூத்த தலைவர்களிடமும், நிர்வாகிகளிடமும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அத்வானிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். 

பிரதமர் மோடியும் லால் கிஷன் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்வானியின் சேவையை புகழ்ந்து அவர் தனது சமூக வலைத்தளமான  எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், 

“பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது மகிழ்ச்சியையும், இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம் ஆகும். இந்தியாவின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அத்வானி அவர்கள் செய்துள்ள நிகரற்ற பங்களிப்பு மகத்தானது. நாம் வாழும் காலத்தில் வாழும் மிகவும் போற்றலுக்குரிய அற்புதமான மனிதர் அவர்.  தனது வாழ்க்கையை நாட்டு சேவைக்காகவே தொடங்கினார். அடிமட்ட தொண்டர் முதல் துணை பிரதமர் வரை அவர் நாட்டுக்காக பல்வேறு வகைகளில் சேவை செய்துள்ளார். பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் சிறப்பானவை.

பாராளுமன்றத்தில் அவர் மேற்கொண்ட விவாதங்கள் இன்றும் முன் உதாரணமாக திகழ்கின்றன. பா.ஜ.க.வின் தலைவராக நீண்ட ஆண்டுகள் சேவை யாற்றிய சிறப்பு அவருக்கு உண்டு. அவருடன் பழகுவ தற்கும், இணைந்து சேவை யாற்றியதற்கும் கிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகிறேன். தேசிய ஒற்றுமைக்கும், கலாசார மறுமலர்ச்சிக்கும் அத்வானியின் சேவை குறிப்பிடத்தக்கது. அவரது கடின உழைப்பு என்றென் றும் நினைவு கூரத்தக்கது. உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றிய காலங்கள் மறைக்க முடியாதவை! அவரது சேவைக்கு மீண்டும் எனது வணக்கத்தை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். – என்று தெரிவித்தார் பிரதமர் மோடி. 

பாரத ரத்னா விருது பெற்றுள்ள லால் கிஷன் அத்வானி ஏற்கெனவே பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார். நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. பின் தற்போது எட்டு ஆண்டு இடைவெளியில், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா, அவருக்கு வழங்கப்படுகிறது. 

இதனிடையே, அத்வானிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களின் வாழ்த்துகளை ஏற்று, எல்.கே. அத்வானி வெளியிட்ட அறிக்கையில், “பாரத ரத்னா விருது ஒரு நபராக எனக்குக் கிடைத்த மரியாதை மட்டுமல்ல. எனது லட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை. இன்று எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை மிகப் பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக் கொள்கிறேன். என்னுடன் நெருக்கமாகப் பணியாற்றிய பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் இருவரையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகத்தான நமது நாடு புகழின் உச்சத்திற்கு முன்னேறட்டும்” என்று தெரிவித்துள்ளார்.   

இந்நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கு அத்வானி ஆற்றிய பங்களிப்பை பாரத ரத்னா விருது அங்கீகரித்துள்ளதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,  அரசில் தலைமை மற்றும் பொது வாழ்வில் அவரது பங்கு உத்வேகம் அளித்தது. பாஜக., பிரமுகரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, தேசிய வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கான அங்கீகாரம்   பல ஆண்டுகளாக, பாரதத்தின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய தருணங்களை அவர் பல வழிகளில் வடிவமைத்துள்ளார். அரசாங்கத்தில் தலைமை மற்றும் பொது வாழ்வில் அவரது பங்கு உத்வேகம் அளித்தது.” என்று எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டார். 

அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவித்ததற்கு அவரது மகள் பிரதீபா மகிழ்ச்சி தெரிவித்தார். பாஜக., மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி அத்வானியின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதுவரை பாரத ரத்னா விருது பெற்றவர்கள்

  • முன்னாள் குடியரசுத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், ஜாகிர் உசேன், விவி கிரி,அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி,
  • முன்னாள் பிரதமர்கள் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜிவ், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய்
  • தமிழக முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்ஜிஆர், 
  • அம்பேத்கர், சர்தர் வல்லபாய் படேல், அபுல் கலாம் ஆசாத் 
  • தெரசா
  • இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி
  • தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா.
  • தொழிலதிபர் ஜேஆர்டி டாடா
  • இயக்குநர் சத்யஜித்ரே
  • முன்னாள் இடைக்கால பிரதமர் குல்ஜாரிலால் நந்தா
  • விஞ்ஞானி சர் சி.வி.ராமன்
  • கர்நாடக இசைக்கலைஞர் எம்எஸ் சுப்புலட்சுமி
  • முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் சுப்ரமணியம்
  • சமூக சீர்திருத்தவாதி ஜெய்பிரகாஷ் நாராயன்
  • பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்
  • பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர்
  • முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்
  • சமூக சீர்திருத்தவாதி வினோபா பாவே
  • சுதந்திர போராட்ட வீரர் பக்வன்தாஸ்
  • மைசூர் திவான் விஸ்வேஸ்வர்யா
  • சுதந்திர போராட்ட வீரர் கோவிந்த் பல்லப் பன்ட்
  • சமூக சீர்திருத்தவாதி டார்சோ கேசவ் கர்வே
  • சமூக சேவகர் பிதன் சந்திரா போஸ்
  • உ.பி., சட்டசபை முன்னாள் சபாநாயகர் புருஷோத்தம் தாஸ்
  • மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பாண்டுரங் வாமன் கேன்
  • பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் கபார் கான்
  • சுதந்திர போராட்ட வீராங்கனை அருணா ஆசாப் அலி
  • அசாம் முதல் முதல்வர் கோபிநாத் போர்டோலால்
  • *ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் ரவிசங்கர், பிஸ்மில்லா கான், பீம்சென் ஜோஷி
  • கல்வியாளர் சிஎன்ஆர் ராவ்
  • காங்கிரஸ் முன்னாள் தலைவர் மதன் மோகன் மாலவியா
  • அசாமை சேர்ந்த கவிஞர், பாடகர் பூபென் ஹசாரிக்கா
  • சமூக சீர்திருத்தவாதி நானாஜிதேஷ்முக்
  • பீஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe