திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தோல்விக்கு அடையாளமாக, அங்கே பெலோனியா நகரில் இருந்த லெனின் சிலையை உள்ளூர் பாஜக.,வினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர்.
திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக அடக்கியாண்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை, இந்தத் தேர்தலில் வீழ்த்தியது பாஜக., ஐபிஎப்டி கூட்டணி. திரிபுராவில் பாஜக., போட்டியிட்ட 51 தொகுதிகளில் 35 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது. கூட்டணிக் கட்சி 8 இடங்களில் வென்றது. திரிபுராவில் இதற்கு முன்னர் ஒரு கௌன்சிலர் கூட இல்லாத நிலையில் இருந்தது பாஜக., இப்போது 35 சட்டமன்றத் தொகுதிகளையே தூக்கிக்கொடுத்துள்ளனர் திரிபுரா மக்கள். இந்த வெற்றியை மாநில பாஜக.,வினர் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதற்கிடையில் பாஜக., தொண்டர்களுக்கும் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே சில இடங்களில் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வைத்த லெனின் சிலை ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது .
#WATCH: Statue of Vladimir Lenin brought down at Belonia College Square in Tripura. pic.twitter.com/fwwSLSfza3
— ANI (@ANI) March 5, 2018
‘பாஜக., மண்ணில் லெனின் சிலை எதற்கு’ என்று சமூக வலைத்தளங்களில் சிலை அகற்றப் பட்டதற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர். ‘இதுதான் பாஜக.,-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மை முகம்’ என்று கண்டனங்கள் குவிந்துள்ளன.
இதனிடையே பாஜக., தேசிய செயலாளர் எச். ராஜா தனது சமூகப் பக்கத்தில் ‘திரிபுராவில் லெனின் சிலை அகற்றம்’ என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே, ஹெச்.ராஜா, வடகிழக்கு என்பது ஈசான்ய மூலை என்றும், அது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குப்பைகள் அகற்றப் படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று லெனின் சிலையை அங்குள்ளவர்கள் அகற்றியிருக்கிறார்கள்…
வடகிழக்கு என்பது ஈசான்ய மூலை ஆகும். ஈசான்ய மூலையில் பூஜை அறை இருக்கவேண்டும். இன்று இந்தியாவின் ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது. இனி இந்தியாவிற்கு என்றுமே வெற்றிதான்
— H Raja (@HRajaBJP) March 3, 2018
ரூ. 3 லட்சத்தில் அமைக்கப்பட்ட லெனின் சிலை திரிபுராவில் இடதுசாரிகளின் 21 ஆண்டு கால ஆட்சியை கொண்டாடும் விதமாக கடந்த 2013ம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்படி வைக்கப்பட்ட லெனின் சிலையை பாஜக.,வினர் அகற்றும்போது பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டனர். சிலையை நாங்கள் அகற்றவில்லை; இடதுசாரிகளால் அடக்கி வைக்கப்பட்ட மக்கள் அகற்றினர் என்றனர் பாஜக.,வினர். இதனிடையே ஜேசிபி இயந்திரத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.