சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் நேற்று எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் அந்த இடத்தை நிரப்பவே நான் அரசியலுக்கு வந்திருக்கின்றேன் என்றும் எம்.ஜி.ஆரைப் போல ஒருவரும் ஆக முடியாது என்றும் ஆனால் தன்னால் எம்ஜிஆரின் சிறந்த ஆட்சியை மக்களுக்கு கொடுக்க முடியும் என்றும் கூறினார். மேலும் தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது என்றும், தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் என்றும் தமிழன் உலக அளவில் வளர வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் நல்ல அறிவு வேண்டும் என்றும் கூறினார்
ரஜினியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று பத்திரியாக்கையாளர்கள் முன் கூறியதாவது; ’நாங்கள் வீட்டில் தமிழில் பேச சொல்கிறோம். அம்மா அப்பா என அழைக்கச் சொல்கிறோம்.ஆனால் ரஜினிகாந்த் டாடி, மம்மி என சொல்லச் சொல்கிறார். தமிழ்ப் பேசினால் தமிழ் வளராது என்ற ரஜினியின் உரையை தமிழ் அறிஞர்கள், தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆங்கிலம் நமது இணைப்பு மொழியாக இருப்பதால் அதனை கற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்ப் பேசினால் தமிழ் வளராது என்ற அறிய கண்டுபிடிப்பின் மூலம் தமிழுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்தவராக ரஜினி இருக்கிறார்.
எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருகிறேன் எனக்கூறி அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்த எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள். எவ்வளவுதான் உயர பறந்தாலும் குருவி குருவிதான். பருந்து பருந்துதான். அதிமுக உயரப் பறக்கும், பருந்து. ஊர்க் குருவிக்கெல்லாம் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அரசியலுக்கு வருபவர்கள் எதாவது ஒரு குற்றச்சாட்டுகளைச் சொல்லத்தான் செய்வார்கள். இவ்வாறு ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.