புது தில்லி:
கம்யூனிசம் உலகம் முழுதும் அழிந்தாலும் கேரளாவில் மட்டும் ஆட்சியில் உள்ளது என்று கூறிய மோடி, திரிபுரா மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க.,வுக்கு கிடைத்த வெற்றியானது கொள்கை ரீதியிலான வெற்றி என்று கூறியுள்ளார்.
திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தில்லியில் இன்று பா.ஜ.க, நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக அக்கட்சித் தலைவர்கள் கூறியவை…
கடந்த 25 வருடங்களாக கம்யூனிஸ்ட்களின் அடக்குமுறையால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். அவர்களிடமிருந்து விடுபட வேண்டும் என நீண்ட நாட்களாக அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கோட்டையில் பா.ஜ.க,வுக்கு கிடைத்த இந்த வெற்றி கொள்கை ரீதியிலான வெற்றிதான்.
வன்முறை, வெறுப்புணர்வை விதைத்தல் ஆகியவற்றால் கம்யூனிஸ்ட்கள் அரசியல் செய்து வந்தனர். தற்போது அதனை மக்கள் முற்றிலும் நிராகரித்து விட்டனர். உலகம் முழுவதும் இடதுசாரிக் கொள்கை அழிந்துவிட்டது. இந்தியாவிலும் அழியும் நிலையில் உள்ளது. அது கேரளாவில் மட்டும் ஆட்சி செய்து வருகிறது.
நாம் வெற்றி பெற்ற நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும். வளர்ச்சி என்பதில் அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். அடுத்து வரும் தேர்தல்களிலும் இதே போன்ற வெற்றியை பெற கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும்.
நாடு முழுவதும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு மிக்க சூழல் நிலவுகிறது. அதற்கு ஏற்றவாறு கட்சியினர் செயல்பட வேண்டும். மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை எம்.பி.,க்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று மோடி பேசியுள்ளார்.