வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரமடைந்துள்ளத. இதன் காரணமாக கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கனமழையின் காரணத்தால் வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே இன்று அதிகாலை 3.00 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேம்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதற்கட்டமாக 70 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிலச்சரிவில் உடல்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.
இந்த நிலச்சரிவில் சூரல்பாறை, வேளரிமலை, முண்டகயில், பொத்துகலு உள்ளிட்ட பகுதிகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளின் பல பகுதிகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பொத்துகலுவிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வயநாட்டில் மீட்புப் பணிகளுக்கு உதவிட, கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை மையத்திலிருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் 250 வீரர்களும், உள்ளூர்வாசிகளும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு நடைபெற்ற இடம்நிலச்சரிவு நடைபெற்ற இடம்
30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை பெங்களூருவிலிருந்து வயநாடு விரைந்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு உதவிகளை வழங்கக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையினர்.மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையினர்.
இந்த நிலையில், கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்தில் இன்று(ஜூலை 30) மிகக் கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வயநாட்டின் அண்டை மாவட்டங்களான மலப்புரம், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுநிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய உள்மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார இயக்கம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. நிலச்சரிவு தொடர்பாக 96569 38689 மற்றும் 80860 10833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்பாராமல் நடைபெற்ற நிலச்சரிவு. மேக வெடிப்பு மற்றும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் நிலச்சரிவு அபாய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இதுவரை காணாத பேரிடர் நிகழ்ந்துள்ளது. நிலச்சரிவில் ஒரு பள்ளி முழுயைாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.