கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உருளை வடிவ குழாய்கள் கொண்ட வடிகால் கண்டுபிடிப்பு !
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நான்காம் கட்டம் முதல் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு, வருகிறது.
இந்த ஆண்டு பத்தாம் கட்ட அகழாய்வுப் பணியினைச் செய்து வருகிறது. கீழடியில், நகர நாகரிகம் நிலவியதைத் தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தியது. கி. மு 6 ஆம் நூற்றாண்டளவில், எழுத்தறிவுப் பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியது என்பதை கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நிறுவி, இதனை நூலாக வெளியிட்டது.
நகர நாகரிகம் என்பதற்குப் பல்வேறு கூறுகள் உண்டு. வாழ்விடப் பகுதியின் பரப்பளவு, பல்வேறு மக்கள் ஒன்றுகூடி வாழ்தல், எழுத்தறிவு, செங்கல் கட்டுமானம், தொழிற்
கூடங்கள், நீர்மேலாண்மை, நுண்கலைகள், வணிகம், பெருவழிகள், போன்றவை இக்கூறுகளில் அடங்கும். கீழடியில் இத்தகைய கூறுகளுக்கான தொல் பொருட்கள் கிடைத்துள்ளதன் வாயிலாக நகர நாகரிகம் நிலவியது என்று சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது.
கீழடியில், நீர் மேலாண்மை சிறந்து விளங்கியதற்கு பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றில் திறந்தவெளி வடிகால், செங்கல்லால் கட்டப்பட்ட மூடிய வடிகால், சுருள் வடிவிலான குழாய்கள், உருளை வடிவிலானக் குழாய்கள், பல்வேறு எண்ணிக்கைகளில் உறைகிணறுகள் போன்றவை வெளிப்படுத்தப்பட்டன. இவை பல்வேறு பயன்பாட்டுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சங்க காலத் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த நீர் மேலாண்மையின் சிறப்பினை அறிகிறோம்.
இன்று கீழடி அகழாய்வுக் குழி ஒன்றில் சுடுமண்ணாலான உருளைவடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
ஆறு உறைகளுடன் காணப்படும் இச்சுடுமண் வடிகாலானது மிக நேர்த்தியாக ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்ட நிலையில், உள்ளது. ஒரு சுடுமண் உறையின் நீளம் மற்றும் அகலம் முறையே 36 செ.மீ, 18 செ.மீ ஆகும். தற்பொழுது, வெளிப்படுத்தப்பட்ட வடிகால் சுமார் 174 செ.மீ நீளம் கொண்டுள்ளது.
இந்த வடிகால் குழாயின் தொடர்ச்சி அடுத்தக் குழிக்குள்ளும் நீள்கிறது. உருளைக் குழாய் வடிகாலின் தொடர்ச்சி, நீளம் மற்றும் பயன்பாடு பற்றி அறிய அடுத்த குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடரும்.