ஒரே அக்கவுன்டில் 2 பேர் UPI பயன்படுத்தலாம் – விரைவில் அறிமுகமாகிறது.
இது குறித்து ரிசர்வ் பேங்க் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், யு.பி.ஐ., வாயிலாக வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு, 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வரி செலுத்துவோர் வேலை சுலபமாகும்.
யு.பி.ஐ., பரிவர்த்தனைகளில் மற்றொரு பெரிய மாற்றமும் அறிமுகமாகிறது. ஒருவர் தன் வங்கி கணக்கில் இருந்து, தன் குடும்ப உறுப்பினர் ஒருவரை பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கலாம்.
குறிப்பிட்ட தொகை வரை அவர் பரிவர்த்தனை செய்யலாம். அவருக்கு யு.பி.ஐ., உடன் இணைக்கப்பட்ட தனி வங்கி கணக்கு தேவையில்லை. இதன் முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
கடன் வழங்கும் நிறுவனங்கள், சி.ஐ.சி., எனப்படும் கடன் தகவல் நிறுவனங்களுக்கு தரவுகளை அளிப்பதற்கான அவகாசம், ஒரு மாதத்தில் இருந்து இரு வாரங்களாக குறைக்கப்படுகிறது.
தங்களது கடன் விபரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக புதுப்பிக்கப்படுவதால், கடன் வாங்குவோர் பயனடைவர். கடன் வழங்கும் நிறுவனங்கள், கடனாளிகள் குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்க உதவும். இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.