ஐபிஎல் உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் இருந்தும் கூட தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரராக களம் கண்டு சிறப்பாக விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தவர் ஷிகர் தவான். 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். தனது சிறப்பான ஆட்டத்தால் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் இடம் பிடித்தார்.
அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் இந்த ஷிகர் தவான், இந்திய அணிக்காக 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,793 ரன்கள் எடுத்துள்ளார். 68 டி20 போட்டிகளில் 1,759 ரன்னும், 34 டெஸ்ட் போட்டிகளில் 2,315 ரன்னும் குவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக ஒட்டுமொத்தமாக 24 சதங்களை அடித்துள்ளார்.
இந்நிலையில் அண்மைக் காலமாக இளம் வீரர்களின் வருகையால் ஏற்பட்ட கடும் போட்டியின் காரணமாக தொடர்ந்து அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். கடைசியாக 2022ல் வங்கதேசத்திற்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியை விளையாடியிருந்தார்.
உள்ளூர் போட்டிகளான ஐ.பி.எல்.,லிலும் டில்லி, மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ள தவான், கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.
இருப்பினும் இந்திய அணியில் இளைஞர்கள் பலரின் வரவால் சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில், சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், இத்தனை ஆண்டுகளாக பக்கபலமாக இருந்து அன்பும், ஆதரவும் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் ஷிகர் தவான். 2015ல் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களைக் குவித்தவர். ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியின் (2013,2017) இரு தொடர்களில் அதிக ரன்களைக் குவித்து கோல்டன் பேட் விருதை வென்ற ஒரே வீரர். 2021ல் விளையாட்டில் சிறந்து விளங்கியதற்காக, உயரிய விருதான அர்ஜுனா விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.
ஷிகர் தவான் ஓய்வை அறிவித்த நிலையில், அவரது நெருங்கிய சகா விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், “ஷிகர் தவான், நீங்கள் இந்தியாவின் மிகவும் நம்பகமான தொடக்க வீரர்களில் ஒருவராக இருந்தீர்கள். நீங்கள் எண்ணற்ற நினைவுகளை எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள். விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வம், உங்கள் விளையாட்டுத்திறன் மற்றும் உங்களது அற்புதமான புன்னகையை நாங்கள் தவற விடுவோம். ஆனால் உங்கள் கிரிக்கெட் பாரம்பரியம் எப்போதும் வாழும்.
நீங்கள் கொடுத்த நினைவுகள், மறக்க முடியாத நிகழ்ச்சிகள் மற்றும் எப்போதும் உங்கள் இதயத்திடம் இருந்து வழிநடத்தியதற்காக நன்றி. மைதானத்திற்கு வெளியே உங்களது அடுத்த இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சச்சின் தனது எக்ஸ் பதிவில், “கிரிக்கெட் ஆடுகளம் நிச்சயம் உங்களது ஆரவாரத்தை இழக்கும். உங்கள் புன்னகை, உங்கள் ஸ்டைல் மற்றும் விளையாட்டின் மீதான உங்கள் அன்பு எப்போதும் மற்றவர்களை ஈர்க்கக் கூடியது. உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் பக்கங்களை நீங்கள் புரட்டிப் பார்த்தால் அதில் உங்கள் பாரம்பரியம் ரசிகர்கள் மற்றும் சக வீரர்களின் இதயங்களில் என்றென்றும் பொறிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் இனி நடக்கப்போவது அனைத்தும் சிறந்ததாக இருக்கும் என்று வாழ்த்துகிறேன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள் ஷிகர் தவான்” என்று பதிவிட்டுள்ளார்.