அரசு முறை பயணமாக பிரதமர் மோடி முதல் முறையாக புருனே நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அதைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3, 2024) இன்று புருனே தாருஸலாம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இது இந்தியப் பிரதமரின் முதல் இருதரப்புப் பயணமாகும்.
இந்தியா – புரூனே இடையே நட்புறவு 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், இருநாட்டு இடையேயான உறவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று புரூனே புறப்பட்டு சென்றார்.
தில்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி புரூனே புறப்பட்டு சென்றார். புருனே செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு சுல்தான் ஹசனல் போல்க்கை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவு, வர்த்தகம், விண்வெளிதுறை, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர்.
புரூனே பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்ல உள்ளார்.
“அடுத்த இரண்டு நாட்களில், புருனே தருஸ்ஸலாம் மற்றும் சிங்கப்பூருக்குச் செல்கிறேன். இந்த நாடுகளில் பல்வேறு ஈடுபாடுகளின் போது, அவர்களுடன் இந்தியாவின் உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்,” என்று மோடி எக்ஸ் தளத்தில் பதிவினை வெளியிட்டார்.
புருனே தருஸ்ஸலாம் மற்றும் சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவை புதிய உச்சத்திற்கு முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக, சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த இதர மதிப்பிற்குரிய உறுப்பினர்களுடனான சந்திப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
புருனேயில் இருந்து, பிரதமர் மோடி புதன்கிழமை (செப்டம்பர் 4, 2024) நாளை சிங்கப்பூர் செல்கிறார்.
“ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியென் லூங் மற்றும் எமரிட்டஸ் மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சிங்கப்பூரின் துடிப்பான வணிக சமூகத்தின் தலைவர்களையும் பிரதமர் சந்திக்கவுள்ளார்.
“எங்கள் கிழக்காசியக் கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் பார்வையில் இரு நாடுகளும் முக்கியமான பங்காளிகள். எனது வருகைகள் புருனே, சிங்கப்பூர் மற்றும் ஆசியான் பிராந்தியத்துடனான நமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்,” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.