புது தில்லி:
அண்மைக் காலத்திய பரபரப்புச் செய்தியாக, தெலுங்குதேசம் கட்சி, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடருமா தொடராதா என்பதாகத்தான் இருந்தது. அதற்கு முடிவு சொல்லும் வகையில், கூட்டணியில் தொடர்கிறோம், ஆனால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறோம் என்ற பதிலைச் சொல்லியுள்ளார் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு!
மத்திய அரசில் அசோக் கஜபதி ராஜு, விமானப் போக்குவரத்து துறை அமைச்சராகவும், ஒய்.எஸ்.செளதரி, அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சராகவும் இருந்தனர். தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவையில் 16 எம்.பி.க்கள் உள்ளனர்.
புதன்கிழமை தங்கள் கட்சி அமைச்சர்களின் விலகல் முடிவை செய்தியாளர்களிடம் அறிவித்த சந்திரபாபு நாயுடு, இது தொடர்பாக தகவல் தெரிவிக்க பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் என்றும், ஆனால் அவருடன் பேச முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவை வியாழக்கிழமை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
நாட்டின் வட கிழக்கு மாநிலங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி, ஆந்திரத்துக்குத் தரவில்லை என்பது நாயுடுவின் குற்றச்சாட்டு. மத்தியில் ஆளும் கூட்டணியின் அங்கமாக இருந்தும், தாம் கேட்ட சலுகைகளை ஆந்திரத்துக்குத் தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமைச்சரவையில் இருந்து வெளியேறும் முடிவை அறிவித்தார் நாயுடு.
ஆந்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் எல்லாம், தெலங்கானா பிரிந்த பின்னர் போய்விட்டது என்பது நாயுடுவின் ஆதங்கம். ஹைதராபாத், வளமுள்ள பகுதிகள், வருவாய் தரக் கூடிய இடங்கள் எல்லாம் தெலங்கானா பக்கம் போய், ஆந்திரத்துக்கான தலைநகரும் போய் புதிய தலைநகரை நிர்மாணிக்கும் நிலையில் இருக்கும் ஆந்திரத்துக்கு ஏன் சிறப்பு சலுகைகள் தரக்கூடாது என்பது அவர் கேள்வி.
இதனால்தான் அண்மையில் தனது நாடாளுமன்ற உரையில் பிரதமர் மோடி தெளிவாக்க வேண்டிய நிலை வந்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, 18 வருடங்கள் முன் நான்கு புதிய மாநிலங்கள் தோன்றின. ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலப் பிரிவினை போது, தொலை நோக்குச் சிந்தனையுடன் பிரச்னைகளை எல்லாம் அலசி ஆராய்ந்து, பின்னர் மாநிலத்தைப் பிரித்தார் வாஜ்பாய். இப்போதும் அவற்றால் எந்தப் பிரச்னையும் எழவில்லை. ஆனால், காங்கிரஸ் வெறும் அரசியல் லாபத்தை மனத்தில் கொண்டே, தெலங்கானா மாநிலத்தை அமைத்தது. அது ஆந்திர மாநிலத்தில் உள்ள மக்களின் மனநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.செளதரி ஆகிய இருவரும் மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தனர். அவர்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மோடியிடம் வியாழக்கிழமை நேற்று அளித்தனர். ஆயினும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் நீடிக்கும் என்றனர்.
தில்லியில் பிரதமர் மோடியிடம் ராஜிநாமா கடிதத்தை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ். செளதரி ஆகியோர், “சிறப்பு அந்தஸ்து வழங்குவது என்பது ஆந்திர மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்னை. ஆனால், மத்திய அரசு இதற்கு உரிய முறையில் தீர்வு காணவில்லை. மத்திய அரசு அளிக்கும் சிறப்பு நிதி, மாநிலத்தின் தேவைக்குப் போதுமானது இல்லை. அதே நேரத்தில் மத்திய அரசு, புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு எதையுமே செய்யவில்லை என்று கூறுவதும் நியாயமில்லை. தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் நானும், செளதரியும் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளோம். அதே நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும்” என்றனர்.
மேலும், தாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த இருவரும், ‘இது வெறும் ஊகங்களின் அடிப்படையிலானது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அமைச்சர்கள் விலகல் போன்ற சூழ்நிலைகளையும் அவர்கள் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இதுவும் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான்’ என்றார் ஒய்.எஸ்.செளதரி.
இதனிடையே இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அனந்த் குமார், “ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட தவறான பிரசாரம் மற்றும் அவர்களின் நெருக்கடி காரணமாக மத்திய அமைச்சரவையில் இருந்து விலக சந்திரபாபு நாயுடு முடிவெடுத்து விட்டார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆந்திரத்தில் அரசியல் சூழ்நிலையைக் கெடுத்து வருகின்றன. ஆந்திரத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.14,500 கோடியும், கூடுதல் நிதியாக ரூ.5,000 கோடியும் மத்திய அரசு அளித்துள்ளது. ஆந்திர மக்கள் நலனில் மோடி அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றார்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் இருந்து இரு அமைச்சர்கள் விலகியதன் எதிரொலியாக, ஆந்திர அமைச்சரவையில் இருந்து பாஜக.,வினரும் விலகல் கடிதம் கொடுத்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரு பாஜக அமைச்சர்களும் ராஜிநாமா செய்தனர்.