அகர்தலா:
திரிபுராவின் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள பாஜக.,வின் பிப்லப் குமார் தேப், முன்னதாக மாநிலத்தின் புகழ்பெற்ற திரிபுர சுந்தரி அம்மன் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு, அம்மனின் அருளாசி வேண்டினார்.
திரிபுரா என்பது, புராதன பாரதத்தில் திரிபுரம் என்றும் முப்புரம் என்றும், சிவபுராணத்தில் வருவது. திரிபுரத்தின் தேவியாக, நாட்டின் புகழ்பெற்ற சக்தி பீடங்களில் முக்கியமான பீடமாகத் திகழ்வது திரிபுரசுந்தரி அம்மன் கோயில். இத்தகு புராதனப் பெருமை வாய்ந்த திரிபுராவின் மாதர்பாரியில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் ஆலயத்துக்கு பாஜக., தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் வந்தனர். அவருடன் முதல்வராகப் பதவியேற்கும் முன்னதாக பிப்லப் குமார் தேபும் வந்தார்.
அங்கே அம்மனை வேண்டி துதித்து பிரசாதம் பெற்றுக் கொண்டனர். திரிபுரா மாநிலத்தில் அமைதியும் வளர்ச்சியும் மேலோங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் பெற்றுக் கொண்டார் பிப்லப் குமார் தேப். அதன் பின்னர் அங்கிருந்து பதவியேற்கும் விழாவுக்குச் சென்றார்.
முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பிப்லப் குமார் தேபுக்கு பல்வேறு மாநில முதல்வர்களும் வாழ்த்து தெரிவித்து செய்திகள் அனுப்பியுள்ளனர். அவர்களுக்கு தனது டிவிட்டர் பதிவுகளில் நன்றியைத் தெரிவித்து வருகிறார் பிப்லப் தேப்.