
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து விவாதித்தார். அப்போது திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் திமுக., உறுப்பினர்கள் கூச்சலிட்டு நிதி அமைச்சரைப் பேச விடாமல் நடந்து கொண்டதால், நிர்மலா சீதாராமன் சற்று ஆவேசம் அடைந்து, “நான் பதில் சொல்வேன். அதைக் கேட்க வேண்டியது உங்கள் கடமை.” என்றார்.
மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு என்ன செய்தது? என்று நாடாளுமன்ற திமுக எம்.பிக்கள் கேள்வியை எழுப்பிய நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக பதிலளித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நோக்கி திமுக எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், “மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ திட்டங்களை தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டது. அதற்கு எந்த பதிலும் வரவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சர்வசிக்ஷ அபியான் திட்டங்களுக்கான நிலுவைத் தொகை இன்னும் வரவில்லை. PMAY திட்டத்துக்கான தொகையையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் இந்த 2 மெட்ரோ திட்டங்களை பற்றியாவது சொல்லுங்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
திருச்சி சிவா கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “நான் சிலவற்றை சொல்லி பேச ஆரம்பிக்க நினைத்தேன், ஆனால் அதை பிறகு சொல்கிறேன். ரூ.63,246 கோடி மதிப்பில் மெட்ரோ திட்டம் 2ம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது, இதில் 65% நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் ஜனவரி 20,2019ல் தொடங்கி வைக்கப்பட்டது. ரூ.30,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. மேலும் முந்தைய மற்றும் தற்போதைய ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் இதை சொல்லியுள்ளனர்.
பாதுகாப்பு வழித்தடம் அறிவிக்கப்படும் போது, பிரதமர் மோடி முதல்முதலாக தமிழ்நாட்டிற்கான வழித்தடத்தை அறிவித்தார். உத்தரபிரதேசத்திற்கே அதன்பிறகு தான் அறிவிக்கப்பட்டது. விருதுநகரில் PM மித்ரா மெகா டெக்ஸ்டைல் பார்க் அறிவிக்கப்பட்டது. 2019ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இவ்வாறு பதில் சொல்லிக் கொண்டிருந்த போது, இடையில் திருச்சி சிவா குறுக்கிட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், “முதலில் நான் சொல்ல நினைத்ததை இப்போது சொல்கிறேன். எதை எடுத்தாலும் மோடி அரசின் தவறு என்றே சொல்லிக் கொண்டு ஒரு நெரேடிவ் செய்து வருகிறார்கள்,
நான் 2 உதாரணங்களைச் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் சுட்டிக்காட்டும் ஒவ்வொரு சம்பவத்தின் போதும் அவர்கள் எங்கே இருந்தார்கள்? அப்போது காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தார்கள்…. – என்று நிர்மலா சீதாராமன் சொன்ன போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரைப் பேச விடாமல் குறுக்கிட்டு திமுக எம்.பிக்கள் கூச்சலிட்டனர்.
இதை அடுத்து கோபமடைந்த நிர்மலா சீதாராமன், “பொறுங்கள்.. நீங்கள் இப்படி என்னை குறுக்கிட்டு தடுக்கக் கூடாது. இதை நான் சொல்வேன். நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன். அதைக் கேட்க வேண்டியது உங்கள் கடமை. சம்பந்தமில்லாத விஷயங்களை நான் பேசுவதாக அவர்கள் சொல்வதால் நான் தமிழில் பேசினேன். திமுகவினர் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த போதுதான் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. அதை மீண்டும் கொண்டு வந்ததற்கு பிரதமர் மோடிதான் காரணம். திருச்சி சிவா சீனியர் உறுப்பினர். அவரை நான் மதிக்கிறேன். கொள்கை வேறுபாடுகள் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். இது எப்போதும் நடப்பது தான்” என்றார்.
இப்படி தமிழகத்தைச் சேர்ந்த இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட இந்த விவாதம் காரணமாக நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.