
சாம்பியன்ஸ் ட்ராபி – இந்தியா- வங்கதேசம் – 20.02.2025
கில் ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
வங்கதேச அணியை (49.4 ஓவர்களில் 228 ரன், தவ்ஹித் ஹிருதய் 100, ஜேகர் அலி 68, டான்சிட் ஹசன் 25, ரிஷாத் ஹுசைன் 18, ஷமி 5/53, ராணா 3/31, அக்சர் படேல் 2/43) இந்திய அணி (46.3 ஓவர்களில் 231/4, ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 101, ரோஹித் ஷர்மா 41, கே.எல். ராகுல் 41, விராட் கோலி 22, ஷ்ரேயாஸ் ஐயர் 15, ரிஷாத் ஹுசைன் 2/38, டஸ்கின் அகமது 1/36, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 1/62) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற வங்கதேச அணியின் அணித்தலைவர் ஷண்டோ முதலில் மட்டையாடத் தீர்மானித்தார். அதிர்ஷ்டவசமாக இந்திய அணிக்கு ஆரம்பத்தில் வேகமாக விக்கட்டுகள் கிடைத்தன. சௌம்ய சர்க்கார் (பூஜ்யம் ரன்), மிராஸ் (5 ரன்) இருவரும் முகமது ஷமியின் பந்துவீச்சில் வீழ்ந்தனர். ஷண்டோ (பூஜ்யம் ரன்) ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒன்பதாவது ஓவரில் பந்துவீச வந்த அக்சர் படேல் அடுத்தடுத்த பந்துகளில் டான்சிட் ஹசனையும் (25 ரன்) முஷ்ஃபிகுர் ரஹிமையும் (பூஜ்யம் ரன்) வீழ்த்தினார். அப்போது வங்கதேச அணி 35 ரன் களுக்கு ஐந்து விக்கட்டுகளை இழந்திருந்தது.
அதிசயமான முன்னேற்றம்
அதன் பின்னர் அதிசயமான முன்னேற்றம் ஏற்பட்டது. தவ்ஹீத் ஹிருதய் (118 பந்துகளில் 100 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ஜேக்கர் அலி (114 பந்துகளில் 68 ரன், 4 ஃபோர்) இருவரும் சிறப்பாக ஆடி, 42.4ஆவது ஓவரில் ஜேக்கர் அலி ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோரை 189 ரன்னுக்குக் கொண்டுவந்தனர். அதன் பின்னர் வந்தவர்கள் சிறப்பாக ஆடவில்லை. எனினும் தவ்ஹீத் ஹிருதய் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, அணியின் ஸ்கோரை 49.4 ஓவர்களில் 228 என்ற அளவிற்கு கொண்டுவந்தார்.
229 என்ற எளிய இலக்கை அடைய இந்திய அணி தொடக்கத்தில் மிகச் சிறப்பாக ஆடியது. ரோஹித் ஷர்மா (36 பந்துகளில் 41 ரன், 7 ஃபோர்) கில் (ஆட்டமிழக்காமல் 129 பந்துகளில் 101 ரன், 9 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். ஆனால் ரோஹித் ஷர்மாவின் ஆட்டமிழப்பிற்குப் பின்னர் ரன் ரேட் குறையத்தொடங்கியது. விராட் கோலி (38 பந்துகளில் 22 ரன், 1 ஃபோர்) ஷ்ரேயாஸ் ஐயர் (17 பந்துகளில் 15 ரன், 2 ஃபோர்), அக்சர் படேல் (12 பந்துகளில் 8 ரன்) ஆகியோர் வேகமாக ரன் சேர்க்க முயன்று விக்கட்டை இழந்தனர். அதன் பின்னர் ஆடவந்த கே.எல். ராகுல் (47 பந்துகளில் 41 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) கில் உடன் இணைந்து இந்திய அணியைக் கரைசேர்த்தார்.
இரண்டு அணிகளுமே அருமையான கேட்சுகளைத் தவறவிட்டன. அக்சர் தனது முதல் ஓவரை வீச வந்தபோது அடுத்தடுத்து இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார். அதன் தொடர்ச்சியாக மூன்றாவது பந்திலும் விக்கட் எடுத்திருப்பார். ஆனால் முதல் ஸ்லிப்பில் இருந்த ரோஹித் ஷர்மா ஒரு சுலபமான கேட்சை தவறவிடார். அதற்கடுத்து ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் பந்து வீச்சில் ஒரு கேட்ச் பிடிக்கத் தவறினார். வங்கதேச அணியும் முக்கியமான தருணங்களில் மூன்று கேட்சுகளைத் தவறவிட்டது.
துபாய் மைதானம் சுழல்பந்துக்குச் சாதகமாக இல்லை. எனவே இந்திய அணி இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழல் பந்து வீச்சாளர்களுடன் இந்த சாம்பியன்ஸ் ட்ராபியை விளையாடுவது சரியான முடிவா? இதனைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இந்திய மைதானங்கள் போல இரவுநேரப் பனியும் இங்கே இருக்கவில்லை. ஆட்டநாயகனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.