
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெரும்பாலும் அமைதி மற்றும் உலக ஒற்றுமை, வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தனக்கான வாழ்வின் அடிநாதம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற தொடக்க காலப் பயிற்சியே என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது.
இதன் முதல் பகுதி…
வினா – நான் ஒன்றைக் கூற் வேண்டும், நான் இப்போது விரதத்தில் இருக்கிறேன். கிட்டத்தட்ட 2 நாட்கள், 45 மணிநேரம். தண்ணீர் மட்டுமே உணவேதும் கிடையாது. இந்த உரையாடலுக்கு மரியாதை அளிக்கும் வகையிலே, அந்த ஆன்மீக அனுபவத்தை நானும் பெற. நீங்கள் பல நாட்கள் தொடர்ந்து உண்ணாநோன்பு இருப்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் உண்ணாநோன்பினை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள், அப்போது உங்கள் மனம் எங்கே செல்கிறது என்று கூற முடியுமா?
மோதிஜி – எனக்கு இது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் இப்போது, உபவாசம் இருக்கிறீர்கள் என்று கூறும் போது. அதுவும் உங்கள் நோக்கம், எனக்கு கௌரவம் அளிக்க வேண்டும் என்பது. இதற்கு நான் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். பாரதத்திலே, இருக்கும் சமய பாரம்பரியங்கள், அவை… உண்மையிலேயே வாழ்க்கைமுறைகள். மேலும், எங்களுடைய உச்சநீதிமன்றம், இந்துசமயம் பற்றி அருமையாக விளக்கமளித்திருக்கிறது. எங்களுடைய உச்சநீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது என்றால், இந்து மதத்திலே எந்த பூஜை புனஸ்காரங்கள் வழிமுறைகள் பற்றி இல்லை. ஆனால் இது, வாழ்க்கை முறையாகும். வாழ்க்கையை வாழும் வழிமுறை.
மேலும் அதிலே எங்களுடைய சாஸ்திரங்களிலே, சரீரம் மனம் புத்தி ஆன்மா, மனிதப் பண்பு…. இதனை, எந்த வகையிலே மேம்படுத்துவது இந்த அனைத்து விஷயங்கள் பற்றி ஒருவகையிலே, விவாதங்களும் உண்டு வழிகாட்டல்களும் உண்டு, பாரம்பரியங்கள் உண்டு வழிமுறைகள் உண்டு. அதிலே ஒன்று…. உண்ணாநோன்பாகவும் இருக்கிறது. உபவாசமே அனைத்தும் கிடையாது. மேலும், பாரதத்திலே, கலாச்சாரமாகட்டும் தத்துவங்களாகட்டும், சில வேளைகளில் நான் கவனிக்கிறேன் ஒழுங்குமுறைக்காக, நான்….. எளிய மொழியில் பேசினேன் என்றால், இந்தியாவைப் பற்றித் தெரியாதவ, பார்வையாளர்களுக்கு கூறுவேன் என்றால், வாழ்க்கையின்… உட்புற வெளிப்புற இருவழி ஒழுங்குமுறைக்காக இது, மிகவும் பயனுடையதாக இருக்கிறது. இது வாழ்க்கையை உயர்த்தவும் பயனாகிறது.
நீங்கள் உபவாசம் இருக்கும் போது, நீங்களே கவனிக்கலாம் நீங்களே கூறினீர்கள் இருநாட்களாக நீங்கள் நீரை மட்டுமே அருந்தி வருகிறீர்கள் என்று. உங்களுடைய அனைத்து இந்திரியங்களும் குறிப்பாக, மணம் தொடர்பானதோ தொடுதல் தொடர்பானதோ சுவை தொடர்பானதோ, இவை எத்தனை விழிப்படைந்திருக்கும் என்றால், உங்களால் நீரின் மணத்தைக் கூட உணர முடியும். முன்னர் நீங்கள் நீரை அருந்தும் போது நீரின் மணத்தை உணர்ந்திருக்க மாட்டீர்கள்.
யாராவது தேநீரை எடுத்துக் கொண்டு உங்களைக் கடந்து சென்றால், தேநீரின் மணமோ காப்பியின் மணமோ வரும். நீங்கள் ஒரு சிறிய மலரை முன்னரும் பார்த்திருக்கலாம் இன்றும் பார்க்கலாம். அதை நீங்கள் சுலபமாக அடையாளம் காண முடிகிறது. அதாவது உங்களுடைய அனைத்து இந்திரியங்களும், பெரிய அளவிலே, மிகவும்…. செரிவூட்டப்பட்டு விடுகின்றன. மேலும் அவற்றின், திறன் இருக்கிறதில்லையா, விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் அதற்கு எதிர்வினை ஆற்றும் திறன், பலமடங்கு அதிகரித்து விடுகின்றன. நான் இதை அனுபவித்து உணர்ந்திருக்கிறேன். இரண்டாவதாக என்னுடைய அனுபவம். இது உங்களுடைய கருத்தோட்டத்திற்கு, பெரிய அளவிலே, கூர்மை அளிக்கிறது, புதியனவற்றை அளிக்கிறது, மாற்றி யோசிக்கும் எண்ணமிடலை, எனக்குத் தெரியாது உபவாசம் இருக்கும் மற்றவர்களின் அனுபவம் எப்படி என்று, ஆனால் எனக்கு உண்டு. இரண்டாவதாக பெரும்பாலானவர்களுக்கு உபவாசம் என்றால், உணவைத் துறப்பது. உண்ணாமல் இருப்பது. இதுவும் ஒரு உடல்ரீதியான செயல்பாடாகி விடுகிறது.
யாரோ ஒரு மனிதனுக்கு… ஏதோ கஷ்டம் காரணமாக உணவு கிடைக்கவில்லை. வயிறு காலியாக இருக்கிறது. இதை எப்படி உபவாசம் என்று கொள்ள முடியும்? இது ஒரு அறிவியல்பூர்வமான செய்ல்பாடு. எடுத்துக்காட்டாக நான், நீண்டகாலமாக உபவாசம் இருந்து வருகிறேன் என்றால் உபவாசம் இருக்கும் முன்பாக, நான் 5-7 நாட்கள், ஒட்டுமொத்த உடலையும் சுத்தம் செய்ய என்னென்ன உண்டோ, ஆயுர்வேத வழிமுறைகள் யோக வழிமுறைகள், அல்லது எங்கள் பாரம்பரிய வழிமுறைகளைப் பின்பற்றுகிறேன். பிறகு என் முயற்சி உபவாசத்தைத் தொடங்கும் முன்பாக, நிறைய தண்ணீர் அருந்துவேன், முடிந்த அளவுக்கு நீரை, பருகுவேன். நச்சுத்தன்மை அகற்றல் என்று கூறுவார்களில்லையா, இதற்கு ஒருவகையிலே உடல் தயாராகி விடுகிறது. அடுத்து நான் உபவாசம் இருக்கும் போது எனக்கு அது ஒரு பக்தியாகிறது.
என்னைப் பொறுத்த வரையில் உபவாசம் ஒரு ஒழுங்குமுறை. மேலும் நான் உபவாசம் இருக்கும் வேளையிலே, எத்தனை தான்…. வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபட்டாலும், அப்போதும் நான், என் உள்மனத்திலே அமிழ்ந்து போய் இருக்கிறேன், எனக்கு உள்ளே ஆழ்ந்திருக்கிறேன். இந்த என்னுடைய அனுபவம் ஒரு அற்புதமான ஒன்றாக இருக்கிறது. மேலும் இந்த உபவாசத்தை ஏதோ புத்தகத்தைப் படித்தோ யாரிடமோ உபதேசம் பெற்றுக் கொண்டோ அல்லது, என் குடும்பத்தில் யாரோ உபவாசம் இருக்கிறார்கள் என்பதைப் பின்பற்றி எல்லாம் செய்யவில்லை. எனக்கு சொந்தமாக ஒரு அனுபவம் உண்டு. பள்ளிப்பருவத்திலே, எங்கள் பக்கத்தில் காந்தியடிகளின் விருப்பம் என்னவென்றால், பசுப்பாதுகாப்பு. இது தொடர்பாக ஒரு இயக்கம் நடந்து வந்தது அரசாங்கம் சட்டமேதும் இயற்றவில்லை. அந்தக்காலத்தில் தேசம் நெடுக, ஒரு நாள் உபவாசம் இருந்தார்கள் பொதுவிடத்தில் அமர்ந்து கொண்டு உபவாசம் இருக்கும் நிகழ்ச்சி அது.
நாங்களோ சிறுவர்கள். அப்போது தான் தொடக்கப்பள்ளியிலிருந்து வெளிவந்தோம். அதில் பங்கெடுக்க வேண்டும் என்று என் மனதில் தோன்றியது. அதுதான் என் வாழ்க்கையின் முதல் அனுபவமாக இருந்தது. அத்தனை சிறிய வயதிலே எனக்கு, பசி எடுக்கவில்லை உண்ண வேண்டும் என்ற விருப்பமில்லை என்னிடம் புதியதொரு விழிப்புநிலை உண்டானது புதிய சக்தி கிடைத்தது. இதில் ஏதோ விஞ்ஞானம் இருக்கிறது என்று எனக்கு உறுதிப்பட்டது. இதிலே உண்பதோ உண்ணாமல் இருப்பதோ என்ற இருமைகள் இல்லை. இவற்றுக்கு அப்பாற்பட்ட விஷயம்.
பிறகு மெல்லமெல்ல எனக்கு நானே, பல பிரயோகங்கள் மூலம் என் உடலை உள்ளத்தை, உறுதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இப்படிப்பட்ட நீண்டதொரு செயல்பாட்டிற்குப் பிறகு உபவாசத்தை மேற்கொண்டேன். அடுத்த விஷயம் என்னவென்றால் என்னுடைய செயல்பாடு தடைப்பட்டதே இல்லை. நான் அதே அளவு பணியாற்றுகிறேன், சில வேளைகளில் அதிகம் செய்கிறேன் என்றும் உணர்கிறேன். இன்னொரு விஷயம் என்னவென்றால் உபவாச காலத்திலே ஒருவேளை, என் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டியிருந்தால், எங்கிருந்து கருத்துக்கள் வருகின்றன எப்படி வருகின்றன என்று, நான் ஆச்சரியப்பட்டுப் போகிறேன். அற்புதமான உணர்வை உணர்கிறேன்.
வினா – அப்போதும் நீங்கள் உலகநாட்டின் தலைவர்களை சந்திக்கிறீர்கள், அப்போதும் இந்தியநாட்டின் விவகாரங்களை நிர்வகிக்கிறீர்கள், அப்போதும் உலகத் த்லைவர் என்ற பங்காற்றுகிறீர்கள், சில வேளைகளில் 9 நாட்கள் கூடத் தொடர்ந்து உபவாசம் இருந்த பிறகும்.
மோதிஜி – அதாவது என்னவென்றால் இதற்கு நீண்ட வரலாறு உண்டு ஒருவேளை கேட்டால்…. நீங்கள் களைத்துப் போவீர்கள். எங்கள் நாட்டிலே, ஒரு சாதுர்மாஸ்ய பாரம்பரியம் உண்டு. மழைக்காலம் வரும் போது, அப்போது செரிமானசக்தி கணிசமாகக் குறையும் என்று நாமறிவோம். இந்த மாரிக்காலத்திலே, ஒரு வேளை தான் உண்ண வேண்டும் 24 மணிநேரத்தில் ஒருவேளை மட்டுமே. அது கிட்டத்தட்ட, ஜூன்மாத நடுவிலிருந்து தொடங்குகிறது. தீபாவளிக்குப் பிறகு கிட்டத்தட்ட நவம்பர் வந்து விடுகிறது. சுமார் 4 மாதங்கள் நாலரை மாதங்கள். இந்தப் பாரம்பரியத்தை நான் பின்பற்றுகிறேன். இதிலே 24 மணி நேரத்திலே, ஒருமுறை தான் உண்கிறேன். பிறகு அடுத்ததாக, நவராத்திரி வருகிறது இது, பொதுவாக செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் வருகிறது. அப்போது நாடு முழுவதிலும் துர்க்கா பூஜை உற்சவம் நடக்கிறது.
சக்தி உபாசனை உற்சவம் நடக்கிறது. அது ஒன்பது நாட்களுக்கு நடைபெறுகிறது. அந்த வேளையில் நான் முழுமையாக, நான் வெந்நீர் மட்டுமே பருகுகிறேன் உள்ளபடியே, வெந்நீர் தான் என் வாடிக்கை எப்போதும் நான் வெந்நீரையே பருகுவேன். இது என்னுடைய நீண்டநாள் பழக்கம் இதை பின்பற்றி வருகிறேன். மேலும் மார்ச் ஏப்ரல் மாத வாக்கிலே, ஒரு நவராத்திரி வருகிறது…. இதை எங்கள் நாட்டில், சைத்ரீ நவராத்திரி என்பார்கள். இது இந்த ஆண்டிலே, மார்ச் 31 முதல் தொடங்குகிறது.
அந்த 9 நாட்கள் உபவாசம் இருக்கிறேன் அந்த நாட்களிலே ஒரு பழம் மட்டும், பகலிலே ஒருமுறை மட்டும், இப்போது 9 நாட்களில் நான் பப்பாளிப்பழத்தை உண்கிறேன் என்றால், இந்த 9 நாட்களில் பப்பாளியைத் தவிர வேறெதையும் உண்ண மாட்டேன். அதுவும் ஒருமுறை மட்டுமே உண்பேன். இப்படி என்னுடைய 9 நாட்கள் உபவாசம் இருக்கிறது. இப்படி ஆண்டு முழுவதும் என்னுடைய, பல்லாண்டுக்காலமாக வழிமுறையைப் பின்பற்றுகிறேன், இதை நான், 50-55 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறேன்.
வினா – சில சமயங்களில் நீங்கள் உலகநாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் போது, உபவாசம் இருந்தீர்கள். அவர்கள் இதைப் பற்றி என்ன நினைத்தார்கள், எப்படி நோக்கினார்கள்? நீங்கள் சரியாகச் சொன்னீர்கள். கடந்த இரண்டு நாட்கள் நான் உபவாசம் இருந்தது மூலம், மனதை ஒருநிலைப்படுத்தும் சக்தி, அனைத்தையும் உணரும் சக்தி அதிகரித்திருக்கிறது. ஆனால் உலகநாடுகளின் தலைவர்களோடு உங்கள் ஊடாடல் அந்த வேளையில் எப்படி இருந்தது?
மோதிஜி – அது என்னவென்றால், பெரும்பாலானவர்களுக்கு இதுபற்றி நான் தெரிவிப்பதில்லை. இது என்னுடைய தனிப்பட்ட விஷயம் இதை விளம்பரம்படுத்த நான் விரும்புவதில்லை ஆனாலும், மக்களுக்கு கொஞ்சம் தெரிய ஆரம்பித்து விட்டது நான், சி எம்-பி எம் ஆன பிறகு தான் மக்களுக்கு தெரிய வந்தது ஆனால் இது, என்னுடைய மிகத் தனிப்பட்ட விஷயம் மட்டுமே. ஆனால் தெரிய வந்ததற்குப் பிறகு நல்ல முறையிலே நான் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுகிறேன் இது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கலாம். இது ஒன்றும் என் தனிப்பட்ட சொத்து இல்லையே!!
என்னுடைய அனுபவம் யாருக்கும் பயனுடையதாக இருக்கலாமே!! என்னுடைய வாழ்க்கையே மற்றவர்களுக்காகத் தானே எடுத்துக்காட்டாக, நான், பிரதமர் ஆன பிறகு, அப்போது ஜனாதிபதி, ஓபாமாவுடன் வெள்ளை மாளிகையில், இருதரப்பு சந்திப்பு நடந்தது. அவர் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது இரு அரசுகளுக்கும் இடையே விவாதிக்கப்பட்டது என்ன இது, டின்னரை அவசியம் செய்யுங்கள் ஆனால், பிரதமர் ஏதும் உண்ணவில்லையே!!
அவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள் என்ன இது, இத்தனை பெரிய தேசத்தின் பிரதமர் வருகிறார் அவர் எதுவும் உண்ணாமல் எப்படி என்றார்கள்!! நாங்கள் அமர்ந்த போது எனக்கு வெந்நீர் வந்தது. நான் மிகுந்த நகைச்சுவையோடு ஓபாமா அவர்களிடம் கூறினேன், பாருங்கள் ஐயா என்னுடைய டின்னர் வந்து விட்டது. இப்படிச் சொல்லி நான் கோப்பையை எடுத்து வைத்தேன். பிறகு இரண்டாவது முறை நான் சென்ற போது, அவருக்கு நினைவு இருந்தது. பாருங்கள் போன முறை நீங்கள் உபவாசத்தில் இருந்தீர்கள்…இந்த முறை நீங்கள், இந்த முறை சென்ற போது மதிய உணவு. இந்த முறை உபவாசம் இல்லை இரண்டு மடங்கு உண்ண வேண்டும் என்றார்.