
திரிபுராவில் சாரிலாம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
திரிபுரா சாரிலாம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் மாரடைப்பால் இறந்ததால் அந்தத் தொகுதிக்கான தேர்தல் மார்ச் 12 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
இதனிடையே பிப்ரவரி 18 ஆம் தேதி 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 43 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. மார்ச் மூன்றாம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதுமே பாஜக.,வினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இது மார்க்சிஸ்ட் கட்சியினரை ஆத்திரமடையச் செய்தது. பல இடங்களில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால், மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள், தொண்டர்களின் வீடுகள் ஆகியவற்றின் மீது பாஜகவினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர்.
இப்படியான தாக்குதலில் இருந்து சாரிலாம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாலாஸ் தேவ் வர்மாவும் தப்பி ஓடியுள்ளார். சாரிலாம் தொகுதிக்குப் பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. வாக்குப்பதிவின்போதும் வன்முறை வெறியாட்டங்கள் அரங்கேறும் என தான் அஞ்சுவதாகவும், அதனால் போட்டியில் இருந்து விலகுவதாகவும் மார்க்சிஸ்ட் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.



