
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் முன்பு காவல்துறை பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், மகளிர் தினம் பிறப்பதற்கு சில மணி நேரம் முன்பாக உஷாவின் உயிர் பறிக்கப்பட்டது என்றால், மகளிர் தினம் நிறைவடைந்த மறுநாள் மாணவி அசுவினியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அசுவினி கொலைச் சம்பவம் போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படும் சூழல் உருவாகாமல், உரிய நேரத்தில் கடும் நடவடிக்கைகளை எடுத்து, பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தின் பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் இன்றைக்கு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே காவலர்கள் மத்தியில் பெருகி வரும் தற்கொலைகளை தடுக்க, குறை தீர்ப்பு முகாம்களை பயனுள்ள வகையில் நடத்திட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம், அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் நடைபெறும் விருந்தில் பங்கேற்குமாறு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் தில்லியில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இரவு விருந்தில் பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



